Last Updated : 18 Apr, 2018 09:33 AM

 

Published : 18 Apr 2018 09:33 AM
Last Updated : 18 Apr 2018 09:33 AM

கிணற்றில் விழுந்த நரி!

 

கா

ட்டில் புதருக்கு இடையில் ஒரு பெரிய கிணறு இருந்தது. புதர் மறைத்திருந்ததால் கிணறு இருப்பது சட்டென்று தெரியாது. மரத்தில் தாவிக்கொண்டே வந்த குரங்கு ஒன்று, தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. தண்ணீர் குறைவாக இருந்ததால் தத்தளித்துக்கொண்டே, “யாராவது உதவுங்கள்” என்று கத்தியது.

கிணற்றுக்குள் இருந்து வந்த குரல் வெளியே இருந்த விலங்குகளுக்குக் கேட்கவில்லை.

நம்பிக்கை இழந்த குரங்கு, இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று நினைத்து கண்ணீர் விட்டது.

“குழந்தையே, பயப்படாதே. நான் இந்தக் கிணற்றின் தேவதை. உன்னைக் காப்பாற்றுவது என் கடமை. அதற்கு முன் நீ ஏதாவது ஒரு நன்மை செய்வதாகச் சத்தியம் செய்து தரவேண்டும். காப்பாற்றிய பின்னர் சத்தியத்தைத் தவறினால், உனக்குக் கெடுதல் நடக்கும்” என்றது தேவதை.

“தேவதையே, நீங்கள் என்னைக் காப்பாற்றினால் மீண்டும் இந்தக் கிணற்றில் யாரும் விழுந்துவிடாதபடி புதரைச் சுத்தம் செய்துவிடுவேன்” என்றது குரங்கு.

குரங்கின் பதிலால் மகிழ்ந்த தேவதை, இரு கைகளால் குரங்கைத் தூக்கி வெளியே விட்டது. வெளியே வந்த குரங்கு, கிணற்றைச் சுற்றியிருந்த புதரை நண்பர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்தது. இப்போது கிணறு நன்றாக வெளியே தெரிந்தது.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு மான் குட்டி, கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

மானின் அழுகுரலைக் கேட்ட தேவதை, “குரங்கு சுத்தம் செய்த பிறகு கிணறு நன்றாகத் தெரிகிறதே! பிறகு எப்படி விழுந்தாய்?” என்று கேட்டது.

”குரங்கு நண்பன் கிணற்றுக்குள் ஒரு தேவதை வசிப்பதாகச் சொன்னான். உங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எட்டிப் பார்க்கும்போது தவறி விழுந்துவிட்டேன். என்னைக் காப்பாற்றுங்கள் தேவதை” என்று கெஞ்சியது மான் குட்டி.

“தெரியாமல் விழுந்ததால் உன்னைக் காப்பாற்றுகிறேன். இனிமேல் யார் விழுந்தாலும் நான் காப்பாற்ற மாட்டேன். வெளியே சென்ற பிறகு என்ன நன்மை செய்வாய்?” என்று சற்றுக் கண்டிப்போடு கேட்டது தேவதை.

”நீங்கள் சொன்ன எச்சரிக்கையைக் காட்டில் உள்ள அனைத்து விலங்குகளிடமும் சொல்லி, அவர்களைக் கிணற்றுப் பக்கம் வரவிடாமல் தடுத்து விடுவேன்” என்றது மான் குட்டி.

மகிழ்ச்சி அடைந்த தேவதை, “உன் எண்ணம் எனக்குத் திருப்தியளிக்கிறது. உன்னைக் காப்பாற்றுகிறேன். நீ சொன்னதைச் செய்யா விட்டால் உனக்கு ஏதாவது கெடுதல் ஏற்படும்” என்று சொல்லிவிட்டு, மான் குட்டியை வெளியில் கொண்டுவந்து விட்டது.

குரங்கைப்போலவே மான் குட்டியும் தேவதைக்கு வாக்குக் கொடுத்தபடி, அனைத்து விலங்குகளிடமும் எச்சரிக்கையைத் தெரிவித்தது.

அதைக் கேட்ட விலங்குகள் கிணற்றுக்கு அருகில் செல்வதைக் கூடத் தவிர்த்தன. ஆனால் நரிக்கு மட்டும் குரங்கும் மான் குட்டியும் சொல்வதில் நம்பிக்கை இல்லை. இவர்கள் சொல்வது பொய் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று எண்ணியது.

குரங்கையும் மான் குட்டியையும் அழைத்துக்கொண்டு கிணற்றுக்கு அருகே வந்தது.

“கிணற்று தேவதையே, இவர்கள் சொல்வது உண்மை என்றால் என் முன்னே வந்து நில்” என்று கத்தியது.

கிணற்றில் எந்தவிதச் சலனமும் இல்லை.

“நீங்க ரெண்டு பேரும் பொய் சொல்றீங்க? நான் இப்போதே கிணற்றில் குதித்து, மேலே வருகிறேன் பாருங்கள்” என்று சொல்லிக்கொண்டே குதித்துவிட்டது நரி.

மேலே வருவதற்கு முயற்சி செய்தது. ஆனால் முடியவில்லை. தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தது.

“ஐயோ… வீம்பாகப் பேசி இப்படி மாற்றிக்கொண்டேனே… என்னை யாராவது காப்பாற்றுங்கள்” என்று அலறியது நரி.

சற்று நேரத்தில் தேவதை வந்தது. “மற்றவர்கள் விடுத்த எச்சரிக்கையைக் கேட்காமல் வேண்டுமென்றே குதித்த உன்னை ஏன் காப்பாற்ற வேண்டும்? உன்னைக் காப்பாற்றினாலும் நல்லது செய்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உன்னை நீயே காப்பாற்றிக்கொள்” என்று சொல்லிவிட்டு, தேவதை மறைந்தது.

நரி கதறியது.

குரங்கும் மான் குட்டியும் யானையை அழைத்து வந்தன. அருகிலிருந்த ஒரு மரக்கிளையை ஒடித்து கிணற்றுக்குள் வீசியது யானை. அதைப் பிடித்துக்கொண்டு மேலே வந்து சேர்ந்தது நரி.

“உங்கள் மூவருக்கும் நன்றி. இனி இந்தக் கிணற்றுப் பக்கம் வர மாட்டேன்” என்று சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தது நரி.

- எஸ். அபிநயா, 9-ம் வகுப்பு, தேவனாங்குறிச்சி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x