Published : 13 Mar 2024 06:03 AM
Last Updated : 13 Mar 2024 06:03 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பூனையை வேட்டையாடுமா புலி?

புலியும் பூனையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. அப்படி இருந்தும் பூனையை ஏன் புலி சாப்பிடுது, டிங்கு? - கவின் ஆதவ், 2-ம் வகுப்பு, வாணி வித்யாலயா, கே.கே.நகர், சென்னை.

சுவாரசியமான கேள்வி. பொதுவாகப் புலி மான், மறிமான், காட்டுப் பன்றி போன்ற பெரிய விலங்குகளை வேட்டையாடிதான் உண்ணும். அப்படிச் சாப்பிட்டால்தான் சில நாள்களுக்குத் தாங்கும். உணவு கிடைக்காதபோது, வேட்டையாட முடியாத சூழலில் முயல், பறவைகள் போன்ற சிறிய உயிரினங்களையும் பிடித்துச் சாப்பிடுவது உண்டு.

நாட்டுக்குள் வசிக்கும் வீட்டுப் பூனைகள் காட்டுக்குச் செல்வது அரிது. ஒருவேளை வீட்டுப் பூனை காட்டில் புலியின் கண்களில் பட்டால் அது கண்டுகொள்ளாமல் போவதற்கே வாய்ப்பு அதிகம். உணவு இல்லாமல், பசியோடு இருந்தால் பூனையை வேட்டையாடவும் தயங்காது, கவின் ஆதவ்.

வெயிலில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது பார்வை மங்கலாகத் தெரிகிறதே, ஏதாவது பிரச்சினையா டிங்கு? - ஜெ. மாரிச்செல்வம், 8-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

சூரிய வெளிச்சத்தில் கண்களில் உள்ள பாவை அதற்கு ஏற்ற மாதிரி தன்னைச் சரிசெய்திருக்கும். வெளிச்சத்திலிருந்து திடீரென்று வீட்டுக்குள் நுழையும்போது, வெளிச்சம் குறைவாக இருக்கும். சட்டென்று நம் கண்களால் எதையும் பார்க்க முடியாது.

குறைந்த வெளிச்சத்துக்கு ஏற்ப கண் பாவை தன்னைச் சரிசெய்வதற்குச் சில நொடிகளை எடுத்துக்கொள்ளும். அதுவரை பார்வை மங்கலாகத் தெரியும். இது எல்லாருக்கும் நிகழ்வதுதான். பிரச்சினை ஒன்றும் இல்லை, மாரிச்செல்வம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x