Published : 07 Feb 2018 12:07 PM
Last Updated : 07 Feb 2018 12:07 PM

டிங்குவிடம் கேளுங்கள்: புத்தகத்தை எடுத்தால் தூக்கம் வருவது ஏன்?

என் உடல் எடையைக் குறைக்க எளிய வழிகளைச் சொல்ல முடியுமா, டிங்கு?

–எஸ்.எஸ்.எம்.எஸ். மணியன், 8-ம் வகுப்பு, ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி, பாளையங்கோட்டை.

உங்கள் எடை எவ்வளவு என்று நீங்கள் சொல்லவில்லை, மணியன். நீங்கள் நிஜமாகவே பருமனாக இருக்கிறீர்களா, அல்லது பருமனாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறீர்களா என்றும் தெரியவில்லை. உங்கள் வயது சிறுவர்கள் அதிகபட்சம் 45 கிலோவரை இருக்கலாம். அதற்கு மேல் நீங்கள் இருந்தால், நான் சொல்லக்கூடிய சில விஷயங்களைப் பின்பற்றலாம். நொறுக்குத்தீனிகள் (குறிப்பாக பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுபவை), குளிர்பானங்கள், சாக்லெட், ஐஸ்க்ரீம், பிஸ்கெட் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள். பழங்கள், நார்ச்சத்து மிக்க காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

இரவு உணவு சாப்பிட்டு, ஒரு மணி நேரம் கழித்துத் தூங்கச் செல்லுங்கள். குளிர்ந்த நீரைப் பருகுவதைவிட, இளஞ்சூடான நீரைப் பருகுங்கள். ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சிப் பார்ப்பது, மொபைல் போனில் விளையாடுவது என்று ஒரே இடத்தில் இருக்கக்கூடிய பொழுதுபோக்குகளைத் தவிர்த்து, வெளியில் சென்று உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளை விளையாடுங்கள். காலை அல்லது மாலையில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள்.

ஒரே நாளில் உடலை இளைக்க வைக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, இவை எல்லாவற்றையும் அளவோடு செய்யுங்கள். உடல் எடை குறையும், மணியன். அப்படியும் எடை குறையாவிட்டாலோ, அளவுக்கு அதிகமான எடை இருந்தாலோ மருத்துவரைப் பாருங்கள்.

சூரிய கிரகணத்தை ஏன் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது, டிங்கு?

–உ.தீனாதரன்,3-ம் வகுப்பு, மேடவாக்கம், சென்னை.

சூரியனின் கதிர்கள் மிகவும் பிரகாசமானவை. நாம் சாதாரண நாட்களில்கூட சூரியனை நேரடியாகப் பார்க்கக் கூடாது. கண்களுக்கு அந்த ஒளியால் பாதிப்பு ஏற்படலாம். ஓர் ஆடியில் சூரியக் கதிர்களைக் குவித்து, அந்த இடத்தில் ஒரு காகிதத்தை வைத்தால் தீப்பற்றி எரிந்துவிடும், உடலில் அந்தக் கதிர்கள் பட்டால் புண்ணாகிவிடும். தொலைநோக்கியில் கண்களுக்குப் பாதுகாப்பான ஃபில்டர் பொருத்தப்பட்டிருப்பதால், சூரியனைப் பார்த்தாலும் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படாது.

சூரிய கிரகணத்தின்போது நேரடியாகப் பார்த்தால் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. என்றாலும் கண்கள் நமக்கு முக்கியமானவை. அவற்றை முன்னெச்சரிக்கையோடு பாதுகாத்துக்கொள்வதற்காகவே சூரியக் கண்ணாடியை அணிந்துகொண்டு, சூரிய கிரகணத்தைப் பார்க்கும்படிச் சொல்கிறார்கள், தீனாதரன். சூரியக் கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவதுதான் நல்லது.

சில நேரம் நான் படிக்கப் புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் தூக்கம் வந்துவிடுகிறதே, ஏன் டிங்கு?

–வ. வர்ஷினி, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.

எந்த நேரத்தில், எப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தகத்தைக் கையில் எடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தூக்கம் வரலாம், வர்ஷினி. அதிகாலை தூங்கி எழுந்து, முகம் கழுவி, புத்தகத்தை எடுத்தால் தூக்கம் வராது. அதுவே பள்ளி சென்று, நாள் முழுவதும் ஓடியாடிக் களைத்து, சாப்பிட்ட பிறகு புத்தகத்தை எடுத்தால் தூக்கம் நிச்சயம் வரும். அப்போது மூளை, கண்கள், உடல் எல்லாம் ஓய்வை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அதனால் மாலை வேளைகளில் சாப்பிடுவதற்கு முன்பு படித்துவிடுங்கள்.

நல்ல டியூப்லைட் வெளிச்சத்தில் படித்தால் தூக்கம் வராது. மங்கலான ஒளியில் படித்தால் தூக்கம் வரும். அதேபோல உடலைச் சரியான நிலையில் வைத்துக்கொண்டு படித்தால் தூக்கம் வராது. சோஃபாவில் சற்றுச் சாய்ந்துகொண்டு படித்தால் தூக்கம் வரும். நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் படித்துக்கொண்டிருக்காமல், நடுநடுவே கண்களைச் சுற்றுப்புறம் நோக்கித் திருப்புங்கள். கண்களை மேலும் கீழும் உருட்டிப் பயிற்சி கொடுங்கள். குளிர்ந்த நீரால் கண்களைச் சுத்தம்செய்யுங்கள். கண்கள் எளிதில் சோர்வடையாது.

உங்களுக்கு அந்தப் பாடத்திலோ, புத்தகத்திலோ ஆர்வம் இல்லாவிட்டாலும் தூக்கம் வரும். இவற்றில் உங்களுக்கு எந்தக் காரணத்தால் தூக்கம் வருகிறது என்று பார்த்து, சரி செய்துகொள்ளுங்கள் வர்ஷினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x