Last Updated : 20 Aug, 2014 12:00 AM

 

Published : 20 Aug 2014 12:00 AM
Last Updated : 20 Aug 2014 12:00 AM

என் கதையைக் கேளுங்கள்

நான்தான் சென்னை பேசுறேன். இந்த வருஷத்தோட நான் பொறந்து 375 வருஷம் ஆயிடுச்சு தெரியுமா?

அப்படின்னா, நீ பிறக்குறதுக்கு முன்னாடி இந்த இடத்துல எதுவுமே இல்லையான்னு உங்களுக்கு சந்தேகம் வரும். நிச்சயமா இருந்துச்சு. ஆனா, இன்னைக்கு சென்னைன்னு சொல்லப்படுற ஊரா, அது பின்னாடிதான் மாறுச்சு. அதுக்கு முன்னாடி வரைக்கும், நான் ஒரு சின்ன கடற்கரை கிராமமாகத்தான் இருந்தேன்.

ரொம்ப காலத்துக்கு முன்னாடி எனக்கு புலியூர்னு பேரு இருந்துச்சாம். அப்போ புலியும், சிறுத்தைப் புலியும் இங்கே இருந்ததா சொல்றாங்க. இப்பவும்கூட செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்துல சிறுத்தைப் புலி இருக்கிறதா படிக்கிறப்ப, புலியூர்னு எனக்குப் பேரு இருந்திருக்கலாம்கிறத நம்ப முடியது.

அந்தக் காலத்துல வெளிநாட்டுல இருந்து இந்தியாவுக்கு வர்றதுக்கான சுலபமான வழியா, கடல் வழிதான் இருந்துச்சு. ஐரோப்பிய நாடுகள்ல இருந்து வந்த பயணிகள், வணிகக் கப்பல்கள், கடற்படைகள் துறைமுகங்கள்லதான் வந்திறங்கின. பெரும்பாலான வெள்ளைக்காரங்க தீபகற்ப இந்தியாவுல இருந்த துறைமுகங்கள்லதான் வந்து இறங்கி இருக்காங்க.

17-ம் நூற்றாண்டுல வணிகம் செய்யவும், மற்ற வியாபார நடவடிக்கைகளுக்காகவும் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுல இடம் தேடிக்கிட்டு இருந்துச்சு. அந்தக் கம்பெனிக்கு சோழ மண்டலக் கடற்கரைல இருந்த, அன்றைய சென்னை துறைமுகம் நல்ல இடமா பட்டிருக்கு.

அப்போ இந்தப் பகுதியை ஆண்டுக்கிட்டிருந்த தாமர்ல வேங்கடாத்ரி நாயக்கர் என்பவர்கிட்ட அந்தக் கம்பெனியோட ஆட்கள் இடம் கேட்டிருக்காங்க.

இன்னைக்கு தமிழக அரசோட சட்டப்பேரவையும் தலைமைச் செயலகமும் செயல்படும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அந்த இடம்தான், கிழக்கிந்திய கம்பெனி கேட்ட இடம்.

கடற்கரை பக்கத்துல மூன்று மைல் நீளத்துக்கு இருந்த இந்த இடத்தை வாங்குறதுக்காக, கிழக்கிந்திய கம்பெனியோட பிரதிநிதி ஃபிரான்சிஸ் டே, வேங்கடாத்ரி நாயக்கருடன் ஒப்பந்தம் போட்டுக்கிட்டார். அந்த ஒப்பந்தம் போடப்பட்ட நாள் 1639 ஆகஸ்ட் 22. இதைத்தான் என்னோட பிறந்த நாளாக சமீபகாலமா கொண்டாடுறாங்க. வெள்ளைக்காரங்க இந்தியாவுல வாங்குன முதல் இடமும் அதுதான்.

வெள்ளைக்காரங்க கட்டின செயின்ட் ஜார்ஜ் கோட்டைய சுத்தி கொஞ்சம் கொஞ்சமா ஒரு நகரம் வளர்ந்துச்சு. ஆங்கிலத்துல மெட்ராஸ்னு என்னைய கூப்பிட ஆரம்பிச்சாங்க. தமிழ்ல மதராசபட்டினம்னும் கூப்பிட்டிருக்காங்க.

சென்னைல இஸ்லாமிய மதராசா பள்ளிகள் அதிகம் இருந்ததால, மெட்ராஸ்னு பேரு வந்துச்சுன்னு சொல்றாங்க. அதுக்குக் காரணம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டி முடிச்ச பிறகும்கூட, மொகலாயர்களோட ஆட்சில சென்னை கொஞ்ச காலம் இருந்திருக்கு.

1687-ல் கோல்கொண்டா அரசை வீழ்த்தி மொகலாயர்கள் சென்னையைக் கைப்பத்தினாங்க. மெட்ராஸ் நகரை வளர்க்கவும், விரிவாக்கவும் வெள்ளைக்காரங்களுக்கு அவங்க அனுமதி கொடுத்தாங்க.

மெட்ராஸ் நகரம் வளர்ந்ததுக்கு இன்னொரு காரணம் மெட்ராஸ் துறைமுகம். 18-ம் நூற்றாண்டுல இந்தத் துறைமுகத்தை கட்டுனாங்க. அதுக்குப் பின்னாடி இந்தியா - ஐரோப்பா இடையிலான முக்கிய வணிக மையமா மெட்ராஸ் மாறிடுச்சு. கேரளம், கர்நாடகம், ஆந்திரம் இணைஞ்ச மெட்ராஸ் மாகாணத்தின் தலைநகராவும் மெட்ராஸ் இருந்துச்சு.

ஒரு பக்கம் வெள்ளைக்காரங்க நம்ம நாட்டை அடிமைப்படுத்தி வைச்சிருந்தாலும், என்னைப் போன்ற நகரங்களை உருவாக்குனதும் வளர்த்ததும் அவங்கதான்.

இந்தியா விடுதலை வாங்குன பின்னாடி தமிழ்நாட்டோட தலைநகரா மெட்ராஸ் ஆகிடுச்சு. 1998-ல மெட்ராஸுனு இருந்த என் பேரை சென்னைன்னு மாத்தினாங்க.

தாமர்ல வேங்கடாத்ரி நாயக்கர்னு ஒருத்தர்கிட்ட வெள்ளைக்காரங்க இடம் வாங்கினாங்கன்னு ஆரம்பத்துல சொன்னேன்ல, அவரோட அப்பா சென்னப்ப நாயகடு. அவரை கௌரவப்படுத்துற வகைல, புதுசா உருவான ஊருக்கு சென்னப்பட்டினம் வேங்கடாத்ரி அப்போ பேரு வைச்சிருந்தார். அந்தப் பேராலயே இப்ப என்னை கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்க.

இந்தியாவோட முதல் நவீன நகரம்னு என்னைய பெருமையா சொல்றாங்க. இதைவிட வேறென்ன பெரிய பெருமை வேணும்!

சென்னையும் கிழக்கிந்திய கம்பெனியும்

தமிழகத்தின் சோழ மண்டல கடற்கரையில் உள்ள ஒரு துறைமுக நகரத்தை, தங்களுடைய முதல் கோட்டையைக் கட்ட கிழக்கிந்திய கம்பெனி தேர்ந்தெடுத் ததற்கு முக்கிய காரணம் இருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் மெட்ராஸ் துறைமுக நகரை தங்கள் வசமாக்க போர்த்துக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் (நெதர்லாந்து) கடுமையாக முயன்று கொண்டிருந்தனர்.

அது மட்டுமில்லாமல், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு அனுப்பப்பட்ட நறுமணப் பொருள்களின் விலையும் அப்போது உயர்ந்திருந்தது. அதன் காரணமாக, லண்டனைச் சேர்ந்த 24 வணிகர்கள் சேர்ந்து, ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கி இந்த இரண்டையும் சமாளிக்கத் திட்டமிட்டனர். அதுவே கிழக்கிந்திய கம்பெனி.

இந்திய வணிகத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்களுடைய நோக்கமாக இருந்தது. பின்னால் அவர்களுடைய நோக்கம் வணிகத்திலிருந்து வளர்ந்து, நாட்டைப் பிடிப்பதாகவும், இந்திய வரலாற்றையே மாற்றுவதாகவும் மாறிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x