Published : 14 Feb 2018 11:05 AM
Last Updated : 14 Feb 2018 11:05 AM

கதை: நீயும் நானும் ஒண்ணு

ந்தன் ஒரு பழத் தோட்டம் வைத்திருந்தார். தினமும் விளையும் பழங்களைக் கழுதை மீது ஏற்றி, மொத்த வியாபாரிகளிடம் சென்று விற்றுவந்தார். அவரிடம் ஒரு நாயும் இருந்தது.

அதிகமான வேலைகளைச் செய்வதாக நினைத்துக் கவலைகொண்ட கழுதை, நாயைப் பார்த்துப் பொறாமைப்பட்டது. ஒரு வேலையும் செய்யாமல், சாப்பிட்டுத் தூங்கி ஓய்வெடுப்பதாக நினைத்தது.

ஒருநாள் கந்தன் குடும்பத்தோடு வெளியூருக்குச் சென்றார்.

“நம் ஐயாவை நினைத்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது. கடினமாக வேலை செய்யும் என்னைக் கயிற்றால் கட்டி வைத்திருக்கிறார். வேலையே செய்யாத உன்னை, மிகவும் சுதந்திரமாக விட்டிருக்கிறார். கொஞ்சம் கூட நியாயமே இல்லை” என்றது கழுதை.

“நான் வேலை செய்யவில்லை என்று எதை வைத்துச் சொல்கிறாய்? உன்னைப் போல் பொதி சுமக்க என்னால் முடியாது. அதே போல் நான் செய்யும் பாதுகாப்புப் பணியை உன்னால் செய்ய இயலாது” என்றது நாய்.

“நீ இல்லாமல் நான் பாதுகாப்பாக இருக்க முடியாது என்கிறாயா? என்னைப் பாதுகாத்துக்கொள்ள எனக்குத் தெரியும். நீ உன் வேலையைப் பாரு” என்று கோபத்துடன் கூறியது கழுதை.

நாய் அமைதியாக ஒரு மூலையில் சென்று அமர்ந்துகொண்டது.

இரவில் ஓர் ஓநாய் உணவு தேடிவந்தது. கழுதையைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தது. ’ஆஹா! கொழுத்த கழுதை. ஒரு வாரத்துக்கு இனி சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது’ என்று நினைத்து, இரண்டடி முன்னால் வந்தது ஓநாய்.

‘ஐயோ… அருகில் ஒரு நாய் இருக்கிறதே… என்னைப் பிடிப்பதற்காகத்தான் இந்த கழுதையைக் கட்டி வைத்திருக்கிறார்களோ! இந்தக் கிராமத்தில் இருந்து பல முறை ஆடு, கோழிகளைத் தூக்கிச் சென்றிருக்கிறேன். அதனால் என்னைப் பிடிக்க ஏற்பாடு செய்திருப்பார்கள். நான் மாட்டிக்கொள்ளக் கூடாது. ஆனால் கழுதையைச் சாப்பிடாமல் போகவும் மனமில்லை. நல்ல பசி வேறு. இப்போது என்ன செய்வது? நாயிடம் பேசிப் பார்ப்போம்’ என்று முடிவெடுத்தது ஓநாய்.

“நண்பா” என்று கிசுகிசுப்பாக அழைத்த ஓநாயைப் பார்த்த நாய், குரைக்க ஆரம்பித்தது.

“உஷ்… சத்தம் போடாதே… நீயும் நானும் ஒரே இனம்தான். உருவத்தில் சிறிய அளவில் வேறுபாடு இருந்தாலும் நாம் இருவரும் சகோதரர்களே! கழுதையை வேட்டையாட வந்திருக்கிறேன். எனக்கு நீ உதவி செய்தால், உன்னை நான் காட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே நீ சுதந்திரமாக வாழலாம்” என்றது ஓநாய்.

“உருவ ஒற்றுமை இருந்தாலும் உன் இயல்பு வேறு, என் இயல்பு வேறு. துரோகம் செய்யத் தூண்டும் உன்னுடன் காட்டுக்கு வர எனக்கு விருப்பமில்லை. எனக்கு இங்கே எந்தக் குறையும் இல்லை. கழுதை நண்பனைப் பாதுகாப்பது என் கடமை. நாங்கள் இருவரும் சத்தமிட்டால், ஊரே திரண்டு வந்துவிடும். பிறகு நீ உயிரோடு இருப்பது ரொம்பக் கஷ்டம்” என்று நாய் சொன்னவுடன், பயந்து ஓட ஆரம்பித்தது ஓநாய்.

“நண்பா, என்னை மன்னித்துவிடு. உனது உயர்ந்த குணம் அறியாமல் இழிவாகப் பேசிவிட்டேன். இப்போது தவறை உணர்ந்துவிட்டேன். என் உயிரைக் காப்பாற்றிய உன்னை என்றும் மறக்க மாட்டேன்” என்றது கழுதை.

“நண்பர்களுக்குள் மன்னிப்பெல்லாம் எதுக்கு?” என்ற நாய், மீண்டும் தன் காவல் பணியைத் தொடர்ந்தது.

- எஸ். அபிநயா, 9-ம் வகுப்பு, தேவனாங்குறிச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x