Published : 24 Jan 2018 11:09 AM
Last Updated : 24 Jan 2018 11:09 AM
அ
ழகிய காலைப் பொழுது. சூரியன் மேகங்களால் மறைக்கப்பட்டு, இதமான நிழல் பரவிக் கிடந்தது. எங்கோ தூரத்தில் மழை பெய்து கொண்டிருப்பதின் அறிகுறியாகத் தென்றல் காற்று வீசியது.
பெருந்திரளாக மேகங்கள் மேற்கு நோக்கி உருண்டோடிக் கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்கள் குளிர்ச்சி பொருந்திய மலைப் பிரதேசங்களை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.
வறண்ட பகுதிகளை மேகங்கள் கடந்து செல்லுமே தவிர, ஒரு நாளும் மழையாக இறங்காது. காரணம் மரங்கள் இல்லாத வெற்று நிலத்தால் மழையை ஈர்க்க முடியாது. பசுமையான பகுதிகளில் குளிர்ச்சி நிலவும். அதைப் பார்த்து மேகங்கள் மகிழ்ந்து, மழையைப் பொழிவிக்கும்!
கீழ்த் திசையில் இருந்து மேற்கு திசை நோக்கி விரைந்துகொண்டிருந்த மேகங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஓடிக்கொண்டிருந்த மேகக் கூட்டத்தின் வேகம் திடீரென்று குறைந்து போனது. பிறகு அவற்றால் நகரவே முடியவில்லை.
இது மேகங்களுக்குப் பெரும் வியப்பைத் தந்தது. ஏன் நமக்கு என்ன ஆயிற்று? ஏன் நம்மால் நகரக் கூட முடியவில்லை? நம் வேகத்தைக் குறைத்து நமது ஓட்டத்துக்குத் தடை போட்டது யார்? இங்கு என்ன நடக்கிறது? என்று மேகங்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு குழப்பத்தில் நின்றன.
இப்போது மேகங்கள் கீழ் நோக்கி ஈர்க்கப்படுவதை உணர்ந்தன. அவை வேகமாகக் கரைய ஆரம்பித்தன.
கீழே இறங்க இறங்க இதமான குளுமை மேகங்களைத் தழுவியது. மேகங்களுக்கு ஒரே ஆச்சரியம். இந்த வறண்ட பூமியில் குளிர்ச்சி எப்படிச் சாத்தியம் என்று வியப்பதற்குள்ளாகவே மள மளவென மழையாக இறங்கி மண்ணை நனைத்தன.
அங்கிருந்த குழந்தைகள் மழையில் நனைந்தவாறு கூச்சலிட்டனர். பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு துள்ளிக் குதித்தனர்.
மேகங்களுக்குக் காரணம் புரிய தொடங்கியது. ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஆளுக்கொரு மரக்கன்றைக் கையில் ஏந்தியவாறு நின்றிருந்தனர். உலக வன நாள் என்பதால் பள்ளியில் மரம் நடு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குழந்தைகள் ஒரே நேரத்தில் அனைத்து மரக்கன்றுகளையும் நட்டனர். மழை ஆனந்தமாகப் பொழிந்து, குழிகளை மண்ணால் மூடி, தாமும் அந்த மகிழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டது.
”மழை மேகங்களே, தினமும் நீங்கள் ஒன்று திரண்டு ஓடிக் கொண்டிருப்பதைப் பார்ப்போம். ஆனால் ஒருநாளும் கீழே இறங்கி மழையாகப் பொழிந்ததில்லை” என்றனர் குழந்தைகள்.
“இதற்கான காரணத்தை உங்கள் ஆசிரியரிடமே கேட்கலாமே?” என்றது ஒரு மேகம்.
”இயற்கையான சூழலை மனிதர்கள் மாற்றாமல் இருந்திருந்தால் எங்கும் மழை பொழியும். ஆனால் மனிதர்கள் தங்கள் தேவைக்கு அதிகமாகவே காடுகளை அழித்துவிட்டனர். அதனால் மழையும் குறைந்துவிட்டது என்று எங்கள் ஆசிரியர் கூறினார். அன்று முதல் எங்களின் பிறந்த நாளுக்கு ஒரு மரம் நடுவதாக உறுதி எடுத்துக்கொண்டோம். அப்படித்தான் எங்கள் வீடுகளிலும் பள்ளியிலும் மரங்கள் வளர ஆரம்பித்தன. ஆசிரியர் எங்களை மிகவும் பாராட்டினார். வெகு விரைவில் மழை பொழியும் என்று நம்பிக்கையூட்டினார். இன்று அது நிஜமாகிவிட்டது” என்றார் ஒரு மாணவி.
”உங்களின் உதவி இருந்தால்தான் இந்தக் கன்றுகள் எல்லாம் பெரிய மரங்களாகும். அடிக்கடி இங்கே மழை பொழிய வேண்டும்” என்றார் ஒரு மாணவன்.
“உங்களின் அன்பும் அக்கறையும் மரங்களின் குளிர்ச்சியும்தான் எங்களை நகர விடாமல் செய்தன. அதனால்தான் இறங்கிவந்து மழையாகப் பொழிந்தோம். இனி நீங்கள் மழையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். வழக்கம்போல் மரங்களை நட்டுக்கொண்டிருங்கள். நாங்கள் அடிக்கடி மழையைப் பொழிவித்து, இந்தக் கன்றுகளை மரங்களாக்கிவிடுகிறோம்” என்றது பெரிய மேகம்.
குழந்தைகள் மகிழ்ச்சியில் மழை மேகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் ஒரு பாடலைப் பாடினர். மேகங்களும் மகிழ்ச்சியோடு மழையைப் பொழிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT