Last Updated : 20 Dec, 2017 11:32 AM

 

Published : 20 Dec 2017 11:32 AM
Last Updated : 20 Dec 2017 11:32 AM

உடல் எனும் இயந்திரம் 2: இதயத்தில் ஓடும் மின்சாரம்!

 

தயம் ஒரு மோட்டார் என்றால், அது இயங்க மின்சாரம் தேவைதானே? இதயத்துக்கு எப்படி மின்சாரம் கிடைக்கிறது?

இதயம் இயங்குவதற்குத் தேவையான மின்சாரத்தை இதயமே தயாரித்துக்கொள்கிறது! இதயத்தின் வலது ஏட்ரியத்தில் ‘சைனோ ஏட்ரியல் நோடு’ (Sino-atrial node) எனும் பகுதி உள்ளது. அங்குதான் மின்சாரம் உற்பத்தியாகிறது. மின்சாரம் பாய இணைப்புகளும் உள்ளன. அதற்குக் ‘கடத்தல் தொகுதி’ (Conduction system) என்று பெயர். இதன் வழியாகத்தான் இதயத்தில் மின்சாரம் ஓடுகிறது. எப்படி?

சைனோ ஏட்ரியல் நோடில் உற்பத்தியாகிற மின்சாரம், அங்கிருந்து ஏட்ரியாக்களுக்கும் வென்ட்ரிக்கிள்களுக்கும் நடுவில் உள்ள ‘ஏட்ரியோ வென்ட்ரிகுலர் நோடு’ (Atrio-ventricular node) எனும் பகுதிக்குச் செல்கிறது. அங்கு ‘ஹிஸ் கற்றை’ (Bundle of His) என்ற ஒரு நார்க்கற்றை இருக்கிறது. இது வலது, இடது எனப் பிரிந்து முறையே வலது வென்ட்ரிக்கிளுக்கும் இடது வென்ட்ரிக்கிளுக்கும் செல்கிறது. இந்த வழியே பாயும் மின்சாரம், இறுதியாக’ ‘பர்க்கிஞ்சி இழைகள்’ (Purkinje fibres) வழியாக இதயத்தசைகளுக்குள் பயணிக்கிறது.

இப்படி ஓடும் மின்சாரம்தான் இதயத்தைச் சுருங்கி விரிய வைக்கிறது. இதயம் ஒருமுறை சுருங்கி விரிவதை ‘இதயத் துடிப்பு’ (Heart beat) என்கிறோம். மனித இதயம் ஒரு நிமிடத்துக்குச் சராசரியாக 72 முறை துடிக்கிறது. தாயின் வயிற்றில் நான்கு வாரக் குழந்தையாக இருக்கும்போது, துடிக்க ஆரம்பிக்கும் இதயம், நம் வாழ்நாள் முழுவதும் துடிக்கிறது.

பொதுவாக, உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இதயத் துடிப்பின் எண்ணிக்கை குறையும். எடை குறைவாக இருந்தால் துடிப்பு கூடும். உதாரணமாக, நீலத் திமிங்கிலத்தின் இதயம் நிமிடத்துக்கு 10 முறை துடிக்கும். ரீங்காரச் சிட்டுக்கு நிமிடத்துக்கு 1260 தடவை துடிக்கும்.

இதயம் துடிக்கும்போது ரத்தம் உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் வில்லியம் ஹார்வி. இப்படி ரத்தம் ஓட ஓர் அழுத்தம் தேவை. அதை இதயம்தான் கொடுக்கிறது. அதுதான் ரத்த அழுத்தம். அதில் இரண்டு வகை உண்டு.

இதயம் சுருங்குவதை ‘சிஸ்டலி’ என்கிறோம். அப்போது ஏற்படும் அழுத்தம் மகாதமனி வழியாக எல்லாத் தமனிகளுக்கும் பரவும். அதை ‘சிஸ்டாலிக் அழுத்தம்’ என்கிறோம். இதயம் விரிவதை ‘டயஸ்டலி’ என்கிறோம். இதயத்துக்கு ரத்தம் திரும்பி வரும் நிலைமை இது. அப்போது ஏற்படும் அழுத்தம் எல்லாத் தமனிகளிலும் குறைவாக இருக்கும். அதை ‘டயஸ்டாலிக் அழுத்தம்’ என்கிறோம்.

நமக்கு 120/80 மி.மீ. மெர்குரி என்பது சரியான ரத்த அழுத்தம். இதில் 120 என்பது ‘சிஸ்டாலிக் அழுத்தம்’; 80 என்பது ‘டயஸ்டாலிக் அழுத்தம்’. பாலூட்டி இனங்களில் ஒட்டகச்சிவிங்கிக்குத்தான் இயல்பான ரத்த அழுத்தமே மிக அதிகம் - 280/180 மி.மீ. மெர்குரி.

சராசரியாக நம் இதயத்தின் எடை 300 கிராம். யானையின் இதயம் 20 - 30 கிலோ. நீலத்திமிலங்கத்தின் இதயம் சுமார் 180 கிலோ.

இதயம் ஓய்வில்லாமல் துடிக்கிறது என்று சொன்னாலும் அதுவும் ஓய்வெடுக்கிறது. எப்படி?

ஓர் இதயத் துடிப்புக்கு இதயம் எடுத்துக்கொள்ளும் நேரம் 0.8 விநாடி. இதில் முதல் 0.1 விநாடி ஏட்ரியம் சுருங்கும் நேரம். அடுத்த 0.3 விநாடி வென்ட்ரிக்கிள் சுருங்கும் நேரம். இதைத் தொடர்ந்து இதயம் விரிய ஆரம்பிக்கிறது. இதற்கான நேரம் 0.4 விநாடி. இதுதான் இதயத்தின் ஓய்வு நேரம்.

சாதாரணமாக, இதயமானது ஒவ்வோர் இதயத் துடிப்பின்போதும் சுமார் 70 மி.லி. ரத்தத்தை உடலுக்குள் அனுப்புகிறது. இதை நிமிடத்துக்குச் சொன்னால் 5 லிட்டர். கடுமையான உடற்பயிற்சியின்போது நிமிடத்துக்கு 20 லிட்டர் வரையிலும், ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது 30 லிட்டர் வரையிலும் இது அதிகரிக்கும்.

இதயத்தின் லப்… டப்… ஒலி எப்படி ஏற்படுகிறது? இதயத் துடிப்பில் வென்ட்ரிக்கிள்கள் சுருங்கும்போது, மூவிதழ் வால்வும் ஈரிதழ் வால்வும் மூடிக்கொள்கின்றன. அப்போது ஏற்படும் சத்தம்தான் ‘லப்’. அடுத்து ஏட்ரியாக்கள் சுருங்கும்போது பிறைச்சந்திர வால்வுகள் மூடிக்கொள்கின்றன. அப்போது ஏற்படும் சத்தம் ‘டப்’. இவை மாறி மாறி நிகழ்வதால், லப்… டப்… எனும் லயத்துடன் இதயம் துடிக்கிறது.

இப்படி இதயம் துடிப்பது எதற்காக? இதயத்துக்கு வந்து சேரும் அசுத்த ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும்; கார்பன்டை ஆக்ஸைடு அதிகமாக இருக்கும். அதை நுரையீரல்களுக்கு அனுப்பி, கார்பன்டை ஆக்ஸைடை அதற்குக் கொடுத்துவிட்டு, பதிலாக ஆக்ஸிஜனைப் பெற்று, சுத்த ரத்தமாக மாற்றி, மீண்டும் இதயத்துக்குக் கொண்டுவந்து, உடலுக்குத் தருகிறது. அந்த ரத்தத்தில் ஆக்ஸிஜன் மட்டுமல்லாமல், உணவுச் சத்துகளும் உள்ளன. இதனால் உடல் இயங்குகிறது.

இதயம் செய்யும் இந்தப் பணியால்தான் நாம் உயிர் வாழ்கிறோம்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x