Last Updated : 15 Nov, 2023 06:03 AM

 

Published : 15 Nov 2023 06:03 AM
Last Updated : 15 Nov 2023 06:03 AM

டிங்குவிடம் கேளுங்கள் - நிலவில் ஏன் இயல்பாக நடக்க முடியவில்லை?

நிலவுக்கு பூமியில் இருக்கும் கடல் நீரை இழுக்கும் ஆற்றல் இருக்கிறது. அப்படி என்றால் நிலவில் ஏன் மனிதனால் இயல்பாக நடக்க இயலவில்லை, டிங்கு?

- ரா.மு. நிதிலன், 5-ம் வகுப்பு, நசரேத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கன்னடபாளையம், ஆவடி.

நல்ல கேள்வி. நிலவின் ஈர்ப்பு விசை காரணமாகவே பூமியில் உள்ள கடல்களில் அலைகள் ஏற்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், நிலவின் ஈர்ப்பு விசையை நம்மால் உணர இயலாது. கடல் போன்ற பரந்த பரப்பில்தான் நிலவின் விசையை அறியமுடியும். அதாவது பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக, கடல் அலைகளைப் போல் நம்மை நிலவால் இழுத்துவிட முடியாது. பூமியின் ஈர்ப்பு விசை அதிகம் என்பதால், நிலவின் ஈர்ப்பு விசை நம் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் 6இல் ஒரு பகுதியாக இருக்கிறது. அதனால்தான் நிலவில் நாம் மெதுவாகத் தரைக்குச் செல்வோம். இயல்பாக நடக்க முடியாமல் தடுமாறுவோம், நிதிலன்.

யாராவது வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது, நான் தலைமுடியை விரித்துப் போட்டிருந்தால், கட்டச் சொல்கிறார்கள். நான் வெளியே செல்லும்போது பூனை குறுக்கே வந்தால், சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு செல்லச் சொல்கிறார்கள். இடி இடிக்கும்போது முதல் குழந்தை என்பதால் அர்ஜுனன் பேர் பத்து என்று சொல்லச் சொல்கிறார்கள். இவ்வளவு காலமும் அவர்கள் சொல்வதை எல்லாம் மறுப்பின்றி செய்துகொண்டேதான் வந்தேன். ஆனால், இப்போது ஏன் என்று கேள்வி கேட்கிறேன். அவர்கள் செய்யச் சொல்வதைச் செய்ய மாட்டேன் என்கிறேன். இதற்காக வீட்டில் என்னைப் பலரும் கடிந்துகொள்கிறார்கள். நான் செய்வது தவறா, டிங்கு?

- கே. மாதங்கி, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

உங்கள் கேள்வியில் உள்ள நியாயம் புரிகிறது. எல்லாவற்றையும் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்று அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் முன்னோர்கள் வழிவழியாகச் சொல்லிவந்த விஷயங்களைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை எவ்வளவோ விதங்களில் மாற்றங்களைச் சந்தித்திருக்கிறோம். அறிவியலில் முன்னேறியிருக்கிறோம். நாம் படித்து அறிவைப் பெருக்கிக்கொள்ளும்போது, இவை போன்ற கேள்விகள் வருவது இயல்புதான். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்பது, நீங்கள் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்பதையே காட்டுகிறது. பக்குவமாக வீட்டில் உள்ளவர்களுக்குப் புரிய வைத்தால், புரிந்துகொள்வார்கள், மாதங்கி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x