Last Updated : 03 Jan, 2018 11:01 AM

 

Published : 03 Jan 2018 11:01 AM
Last Updated : 03 Jan 2018 11:01 AM

உடல் எனும் இயந்திரம் 4: உடலுக்குள் ஒரு மிக்ஸி!

ம் செரிமான மண்டலத்தில் மூன்றாவது உறுப்பாக இருக்கிறது, இரைப்பை. வாயில் தொடங்கி, மலத்துவாரம் வரையிலான செரிமான மண்டலம் 9 மீட்டர் நீளம் கொண்டது. நாம் சாப்பிடும் உணவு முழுமையாகச் செரிக்கப்படும் பகுதி இது.

வயிற்றுக்குள் மேல் புறத்தில், இடது பக்கத்தில், மண்ணீரலுக்கு மேலேயும், உதரவிதானத்துக்குக் கீழேயும் சற்றே படுத்த வடிவில் இருக்கிறது இரைப்பை. தொண்டையில் தொடங்கும் உணவுக்குழாய் இரைப்பையில் திறக்கிறது. முன்சிறுகுடல் இரைப்பையிலிருந்து தொடங்குகிறது.

இரைப்பை உணவு தங்கும் இடமாகவும், உணவு செரிமானம் ஆகும் இடமாகவும் செயல்படுகிறது. பெரும்பாலான பாலூட்டிகளுக்கு ஓர் அறை கொண்ட இரைப்பைதான் இருக்கிறது. அசைபோடும் விலங்குகளான பசு, எருமை, காட்டெருது, செம்மறி ஆடு, வெள்ளாடு, காளை மாடு, மான், ஒட்டகச்சிவிங்கி போன்றவற்றுக்கு நான்கு அறைகள் கொண்ட இரைப்பை இருக்கிறது. இவை அவசரப்பட்டு விழுங்கிய திட உணவை முதல் அறைக்கு அனுப்புகின்றன. பிறகு, மறுபடியும் அதை வாய்க்குக் கொண்டுவந்து அசைபோட்டு, நன்றாக மென்று, மீண்டும் இரைப்பைக்கு அனுப்புகின்றன. ஒட்டகத்துக்கு மூன்று அறைகள் கொண்ட இரைப்பை உள்ளது. பறவைகளின் இரைப்பை இரண்டு அறைகள் கொண்டது.

நம் இதயத்தைப் போலவே இரைப்பையும் ஒரு தசைக்கூடு. விரிந்து சுருங்கும் தன்மையுடையது. இரைப்பையின் உட்சுவர் ஓய்வாக இருக்கும்போது ஒரு சுருக்குப்பைபோல் மடிந்தும் சுருண்டும் இருப்பதால், அப்போது அதன் கொள்ளளவு சுமார் 50 மி.லி.தான். நாம் சாப்பிடச் சாப்பிட விரிந்து கொடுக்கும். அப்போது அதிகபட்சமாக ஒரு லிட்டர் உணவு பிடிக்கும்.

விலங்கினத்தைப் பொறுத்தும் அது சாப்பிடும் உணவைப் பொறுத்தும் இரைப்பையின் கொள்ளளவு மாறும். குதிரையின் இரைப்பை அதிகபட்சமாக 15 லிட்டர் பிடிக்கும். யானையின் இரைப்பை 70 லிட்டர்வரை கொள்ளும். பன்றியின் இரைப்பை 7.6 லிட்டர்வரை தாங்கும்.

மனித இரைப்பையில் கழுத்து (Fundus), உடல் (Body), முன்சிறுகுடல் முனை (Pylorus) என மூன்று பகுதிகள் உள்ளன. உணவுக்குழாய் இரைப்பையில் திறக்கும் இடத்துக்குக் ‘கழுத்து’ என்று பெயர். இது முன்பற்களிலிருந்து சுமார் 40 செ.மீ. தூரத்தில் உள்ளது. முன்சிறுகுடல் தொடங்கும் பகுதிக்கு ‘முன்சிறுகுடல் முனை’ என்று பெயர். இடைப்பட்ட பகுதிக்கு ‘உடல்’ என்று பெயர்.

இதன் உட்சுவரில் சுமார் 35 கோடி காஸ்டிரிக் சுரப்பிகள் உள்ளன. இவை தினமும் 2-லிருந்து 3 லிட்டர்வரை செரிமான நீரைச் சுரக்கின்றன. இதில் ஹைட்ரோகுளோரிக் அமிலம், பெப்சினோஜென் எனும் என்சைம், மியுசின் எனும் பிசுபிசுப்பான திரவம் ஆகியவை உள்ளன.

அமிலத்துக்கு எதையும் அரித்துச் சிதைக்கும் தன்மை இருக்கும். அப்படியானால், ஹைட்ரோகுளோரிக் அமிலமும் இரைப்பையை அரித்துப் புண்ணாக்கிவிடலாம் அல்லவா? அப்படி அரித்துவிடாமல் இரைப்பையைப் பாதுகாப்பதுதான் மியுசின் திரவம். இது இரைப்பையின் உட்பரப்பில் ஒரு பாலாடைபோல் படர்ந்து, அமிலத்தின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறது. மேலும் இது அமிலத்துடன் கலக்கும்போது, அமிலத்தின் வீரியம் குறைந்துவிடுவதால், இரைப்பையை அமிலம் அரிப்பதில்லை.

இரைப்பையின் சிறப்புத்தன்மையே அதில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரப்பதுதான். செரிமான மண்டலத்தில் இரைப்பை தவிர வேறு எங்கும் இந்த அமிலம் சுரப்பதில்லை. இந்த அமிலத்தின் பலனாகத்தான் இரைப்பையில் செரிமானப் பணி தொடங்குகிறது.

உணவுக்குழாய் வழி இரைப்பையை அடையும் உணவுப்பொருட்களுடன் ஹைட்ரோகுளோரிக் அமிலம் கலந்து, அவற்றைச் சிறுதுகள்களாக உடைக்கிறது; உணவில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கிறது. அதேநேரம் பெப்சினோஜென் என்சைமை பெப்சினாக மாற்றுகிறது. காரணம், அந்த என்சைம் பெப்சின் எனும் நிலைக்கு மாற்றப்பட்டால்தான் செரிமானப் பணியில் ஈடுபடமுடியும். புரத உணவுகளை பெப்சின் செரிக்கிறது.

இரைப்பை ஒரு மிக்ஸிபோல் வேலை செய்கிறது. உணவு இரைப்பைக்கு வந்ததும் அதன் சுவர்கள் சீரான லயத்துடன் விரிந்து சுருங்குகின்றன. இதனால் உணவுப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று நன்றாகக் கலந்துவிடுகின்றன. இந்தக் கலவையில் செரிமான நீரும் சேர்ந்துகொள்கிறது. இரைப்பையின் இயக்கங்களால் மியூசின் திரவமும் திடஉணவுடன் நன்கு கலந்துவிடுகிறது. இவற்றின் மொத்தப் பலனால் திடஉணவு கரைந்து கூழ்போலாகிறது. இதற்கு ‘கைம்’ (Chyme) என்று பெயர். இது அடுத்தகட்ட செரிமானத்துக்குத் தயாராகிறது.

இரைப்பையில் இந்த உணவு சராசரியாக நான்கு மணி நேரம் தங்கும். திரவ உணவாக இருந்தால், 40 நிமிடங்களில் இரைப்பையைவிட்டு முன்சிறுகுடலுக்குச் சென்றுவிடும். உணவில் அதிகக் கொழுப்பு இருந்தாலும், நிறைய புரதம் இருந்தாலும் அந்த உணவு இரைப்பையில் அதிக நேரம் தங்கும்.

(இன்னும் அறிவோம்)

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x