Last Updated : 10 Jan, 2018 11:17 AM

 

Published : 10 Jan 2018 11:17 AM
Last Updated : 10 Jan 2018 11:17 AM

உடல் எனும் இயந்திரம் 5: செரிமான மைதானம்

நீ

ண்ட குழல் போன்ற அமைப்பைக் கொண்ட சிறுகுடல் இரைப்பையின் கீழ் முனையில் தொடங்குகிறது. சுமார் 5 மீட்டர் நீளமுள்ளது. முன்சிறுகுடல் (Duodenum), நடுச்சிறுகுடல் (Jejunum), பின்சிறுகுடல் (Ileum) என மூன்று பகுதிகளைக் கொண்டது. சிறுகுடல் பெருங்குடலில் முடிகிறது.

தோட்டத்துக்குத் தண்ணீர்விடும் ரப்பர் குழாயைச் சுற்றிவைத்திருப்போம், இல்லையா? அதேபோல வயிற்றின் மத்தியப் பிரதேசத்தில் சிறுகுடல் வளைந்து நெளிந்து படுத்திருக்கிறது. இந்தக் குழாய் எல்லாப் பகுதிகளிலும் ஒன்றுபோலிருப்பதில்லை. அகலமாக ஆரம்பித்துப் போகப்போக இதன் உள்ளளவு குறுகிவிடுகிறது. இதன் வலப்பக்கம், மேற்பக்கம், இடப்பக்கம் தலைகீழாக இருக்கின்ற ‘ப’ எழுத்தைப் போல் பெருங்குடல் இருக்கிறது. இது ஒரு கோட்டைச் சுவர்போல் அமைந்து சிறுகுடலைப் பாதுகாக்கிறது.

முன்சிறுகுடல் 25 செ.மீ. நீளமுள்ளது. இது ‘C’ வடிவத்தில் உள்ளது. தொப்புளுக்கு மேல்பகுதியில் பின் முதுகைச் சார்ந்து உள்ளது. இதில்தான் கணையமும் கல்லீரலும் தொடர்புகொள்கின்றன. ஒன்றரை மீட்டர் நீளமுள்ள நடுச்சிறுகுடலும், இரண்டரை மீட்டர் நீளமுள்ள பின்சிறுகுடலும் இதன் தொடர்ச்சியாக உள்ளன.

மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கும் ஊர்வனவற்றுக்கும் உள்ளது போலவே பெரும்பாலான பறவைகளுக்கும் குடலமைப்பு உள்ளது. ஆப்பிரிக்க யானையின் குடல் நீளம் 19 மீட்டர். அசைபோடும் விலங்குகளுக்குக் குடலின் நீளம் பல மடங்கு அதிகம். இரண்டு மீட்டர் நீளமுள்ள பசுவின் குடல் நீளம் 40 மீட்டர். அதாவது, 20 மடங்கு அதிகம். நீலத் திமிங்கிலத்தின் குடல் 220 மீட்டர் நீளமுள்ளது!

சிறுகுடல் ஒரு செரிமான மைதானம். இதன் உட்பரப்பில் வட்டவடிவத்தில் நிறைய மடிப்புகள் உள்ளன. இவற்றுக்கு ‘பிளைக்கே’ (Plicae) என்று பெயர். சாலையில் வேகத்தடைகள் உள்ளதுபோல், சிறுகுடலில் இப்படி நிறைய மடிப்புகள் உள்ளதால், அதன் வழியாகப் பயணம் செய்யும் உணவுப்பொருள் வேகமாக வெளியேறிவிடாமல், மெதுவாக நின்று செல்கிறது. அப்போது செரிமானம் முழுமையாக நடைபெறுகிறது.

சிறுகுடலின் உட்பரப்பில் சுமார் 30 கோடி புடைப்புகள் உள்ளன. இவற்றுக்கு ‘விரலிகள்’ (Villi) என்று பெயர். இவைதாம் உணவுச்சத்துகளை உறிஞ்சி ரத்தத்துக்கு அனுப்புகின்றன. ஒரு விரலியின் நீளம் அதிகபட்சமாக 1.6 மி.மீ.

 

விரலிகளுக்கு நடுவில் உள்ள சிறுகுடல் சுவரில் நிறைய சுரப்பிகள் உள்ளன. இவை சிறிய துவாரங்களில் திறக்கின்றன. இவற்றுக்கு ‘லீபர்கூன் பள்ளங்கள்’ (Crypts of Lieberkuhn) என்று பெயர். இந்தப் பள்ளங்களில் சிறுகுடல் சுரப்பிகள் சிறுகுடல் சாற்றைச் சுரக்கின்றன.

இரைப்பையிலிருந்து உணவுக்கூழ் முன்சிறுகுடலுக்கு வருகிறது. இது இரைப்பையின் அமிலத் தன்மையுடன் இருக்கிறது. சிறுகுடல் அமிலத்தைத் தாங்காது. சிறுகுடலின் உட்சுவரில் ‘பிரன்னர் சுரப்பிகள்’ (Brunner’s glands) எனும் சிறப்புச் சுரப்பிகள் உள்ளன. இவை காரத்தன்மையுள்ள ஒரு திரவத்தைச் சுரக்கின்றன. இந்தத் திரவம் உணவுக்கூழுடன் கலந்து, அமிலத்தன்மையைச் சமன்படுத்திவிடுகிறது.

அதேநேரத்தில் சிறுகுடற்சாறு உணவுக்கூழில் உள்ள உணவுப்பொருள்களை இன்னும் சிறிய துகள்களாக உடைக்கின்றன. சிறுகுடலில் உணவுச்சத்துகள் செரிமானம் ஆவதற்கும் விரலிகள் சத்துகளை முழுவதுமாக உறிஞ்சிக்கொள்வதற்கும் இது உதவுகிறது.

சிறுகுடலுக்குக் கணையத்தின் சுரப்புநீர்களும் கல்லீரலின் பித்தநீர்ச் சுரப்பும் வந்துசேர்கின்றன. கல்லீரலில் கிளம்பும் கல்லீரல் நாளம் பித்தப்பைக்குச் செல்கிறது. அங்கிருந்து பித்தப்பை நாளமாக கீழிறங்கி வந்து, கணைய நாளத்தில் இணைந்து, சிறுகுடலில் திறக்கிறது. இந்தப் பாதை வழியாகப் பித்தநீரும் கணையநீரும் சிறுகுடலை அடைகின்றன. இவைதாம் உணவுக்கூழுடன் கலந்து, செரிமானப் பணியைத் தொடங்குகின்றன.

நாம் சாப்பிடுவதை ‘உணவு’ என்று பொதுவாகச் சொன்னாலும், அதில் புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாதுஉப்புகள், தண்ணீர் என ஆறு வகை சத்துகள் உள்ளன. இவற்றைத் தனித்தனியாக உறிஞ்சி உடலுக்குள் அனுப்புவதுதான் சிறுகுடலின் வேலை. இதற்குக் குடற்சாறு, கணையநீர், பித்தநீர் ஆகிய செரிமான நீர்கள் உதவுகின்றன. தினமும் இரண்டரை லிட்டர் குடற்சாறும், ஒன்றைரை லிட்டர் கணையநீரும், அரை லிட்டரிலிருந்து ஒரு லிட்டர்வரை பித்தநீரும் சுரக்கின்றன.

குடற்சாற்றில் என்சைம்கள் குறைவு என்பதால், கணையநீரும் பித்தநீரும்தான் பெரும்பாலான செரிமானப் பணியைச் செய்கின்றன.

இவ்வாறு செரிக்கப்பட்ட உணவுக்கூறுகளைச் சிறுகுடலின் மூன்று பகுதிகளிலும் உள்ள விரலிகள் உறிஞ்சுகின்றன. விரலிகளைச் சுற்றி ரத்தத் தந்துகிக் குழாய்கள் வலைபோல் பின்னியுள்ளன. விரலிகளின் நடுவில் நிணநீர்நாளங்கள் சூழ்ந்துள்ளன. கொழுப்புச் சத்தை இவை உறிஞ்சிக்கொள்கின்றன. வைட்டமின்கள், தாதுக்கள், தண்ணீர் ஆகியவை தனித்தனியே பிரிந்து ஊடுபரவல் மூலம் நேரடியாகவே ரத்தத்தை அடைகின்றன. மற்ற சத்துகளைத் தந்துகிகள் உறிஞ்சிக்கொள்கின்றன. தினமும் சுமார் ஏழரை லிட்டர் திரவ உணவுக்கூறுகளை இவை உறிஞ்சுகின்றன. இப்படி உறிஞ்சப்பட்ட உணவுச்சத்துகள் உடலின் வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் பயன்படுகின்றன.

(இன்னும் அறிவோம்)

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x