Published : 02 Aug 2023 06:07 AM
Last Updated : 02 Aug 2023 06:07 AM
மீன் தண்ணீரில் சுவாசிக்கிறது. ஆனால், மனிதனால் தண்ணீரில் சுவாசிக்க முடிவதில்லையே ஏன், டிங்கு?
- ஆர்.எம். நித்திலன், 5-ம் வகுப்பு, நசரேத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கன்னடபாளையம், ஆவடி.
மனிதர்கள் நிலத்தில் வாழும் பாலூட்டி வகையைச் சேர்ந்தவர்கள். நம் உடல் காற்றிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் சுவாசிக்கும்போது காற்று மூச்சுக்குழாய் வழியே நுரையீரலுக்குள் செல்கிறது. அங்கிருந்து சிறு காற்றுப்பைகள் மூலம் ரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. அங்கிருந்து கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு நுரையீரலுக்கு வந்து, மூச்சுக்குழாய் வழியே வெளியே சென்றுவிடுகிறது.
நாம் வெப்ப ரத்தப் பிராணிகள். மீன்கள் குளிர் ரத்தப் பிராணிகள். இவை நீரில் இருக்கும் ஆக்சிஜனைச் சுவாசிக்கும் விதத்தில் இவற்றின் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீரில் இருக்கும் ஆக்சிஜனைச் செவுள்கள் மூலம் எடுத்துக்கொள்கின்றன. மனிதர்களுக்குச் செவுள்கள் கிடையாது என்பதால், நீரிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்து சுவாசிக்க இயலாது.
கடல்வாழ் பாலூட்டிகளான திமிங்கிலமும் ஓங்கிலும் நீரிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதில்லை. காற்றிலிருந்தே ஆக்சிஜனை எடுத்துக்கொள்கின்றன. இதற்காகவே அடிக்கடி நீர்ப்பரப்புக்கு மேலே வருகின்றன. ஆனால், ஒரு முறை காற்றை இழுத்துக்கொண்டால், நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கும் விதத்தில் இவற்றின் உடல் அமைப்பு அமைந்திருக்கிறது, நித்திலன்.
மேகம் ஏன் உயரத்தில் இருக்கிறது, டிங்கு?
- மு. வர்ஷினி, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.
மேகம் என்பது நீராவியால் ஆனது. அதில் சின்ன சின்ன நீர்த்திவலைகள் இருக்கின்றன. நிலப்பகுதியில் இருக்கும் சூடான காற்றுக்கு மேகத்தைவிட அடர்த்தி அதிகமாக இருக்கும். எனவே, அடர்த்தி மிகுந்த சூடான காற்று, அடர்த்தி குறைந்த குளிர்ந்த காற்றை மேல் நோக்கித் தள்ளிக்கொண்டே இருக்கிறது. இதனால் மேகங்கள் காற்றில் மிதந்துகொண்டேயிருக்கின்றன, வர்ஷினி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT