Last Updated : 16 Jul, 2014 12:41 PM

 

Published : 16 Jul 2014 12:41 PM
Last Updated : 16 Jul 2014 12:41 PM

பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம்

பாலம் எதற்காகக் கட்டுவார்கள்? ஆற்றையோ, கடலையோ கடப்பதற்காகக் கட்டுவார்கள். ஆனால், ஆற்றின் மேலேயே ஒரு நீர்ப் பாலத்தை ஜெர்மனியில் அமைத்திருக்கிறார்கள். இதைவிடப் பெரிய வியப்பு, அந்த நீர்ப் பாலத்தின் மேலே படகுப் போக்குவரத்தும் நடைபெறுகிறது.

உலகில் அமைந்துள்ள மிக நீளமான நீர்ப் பாலம் எனப் புகழ்பெற்ற இது மேக்டீபர்க் (Magdeburg) என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. பாலத்தின் மொத்த நீளம் 918 மீட்டர். பாலத்தின் அகலம் 34 மீட்டர். பாலத்தின் ஆழம் 4.25 மீட்டர். கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் இணைப்பதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது.

1997-ம் ஆண்டு இந்தப் பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2003-ம் ஆண்டு பணிகள் முடிந்து பாலம் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. ஆனாலும் இந்தப் பாலம் கட்ட நூறாண்டுகளுக்கு முன்பு 1905-ம் ஆண்டிலே திட்டமிடப்பட்டது. பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு 1930-ம் ஆண்டு தொடங்கி 1942-ம் ஆண்டு வரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், இரண்டாம் உலகப் போர் காரணமாகப் பணிகள் நிறுத்தப்பட்டன. போர் முடிந்த பிறகு மீண்டும் பாலம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது இரு நாடுகளாகக் கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் பிரிந்திருந்தன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதனால், கட்டுமானப் பணிகளைத் தொடங்க முடியவில்லை. இறுதியாக 1990-ம் ஆண்டில் கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த பிறகே நீர்ப் பாலம் கனவு நிறைவேறியது.

தற்போது ஜெர்மனியின் தலைநகரான பெர்லினின் உள் நாட்டுத் துறைமுகத்தையும், போர்ட் என்றழைக்கப்படும் கண்டெய்னர்கள் தயாரிக்கப்படும் துறைமுகத்தையும் ரைன் நதி வழியாக இந்த நீர்ப் பாலம் இணைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x