Published : 15 Sep 2017 10:31 AM
Last Updated : 15 Sep 2017 10:31 AM
வீட்டுக்குள் நுழையும்போதே மொபைல் போன் தானாக சார்ஜர் ஆனால் எப்படி இருக்கும்? மாயவித்தை நடந்தால்தான் இது நடக்கும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அறிவியலின் வளர்ச்சியால், இஸ்ரேலின் புதிய கண்டுபிடிப்பான ‘வை-சார்ஜ்’ என்ற கருவி இதை சாத்தியமாக்கியிருக்கிறது.
இந்த ‘வை-சார்ஜ்’ என்பது வயர்லெஸ் சார்ஜர். எந்தவித நேரடித் தொடர்பும் இல்லாமல் நம் கைபேசிக்கு சார்ஜ் செய்யும் கருவி இது. இந்தக் கருவியில், ட்ரான்ஸ்மிட்டர், ரிசீவர் என்ற இரண்டு முக்கியமான அலகுகள் உள்ளன. இதில் ட்ரான்ஸ்மிட்டர் என்பது சூரிய ஒளியிலிருந்து அகச்சிவப்புக் கதிர்களைச் சேகரித்து, ரிசீவர் யூனிட்டுக்கு அனுப்புகிறது. அப்படிப் பெற்ற ஒளிக்கதிர்களை, ரிசீவர் தன் மின் அழுத்த செல் என்ற பகுதி மூலமாக, மின் திறனாக மாற்றுகிறது.
இந்தப் புதிய கருவி, ஸ்டெப்லைசர்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது வீடுகளிலோ அலுவலகங்களிலோ இதைப் பொருத்திக்கொள்ளலாம். வீட்டில் நுழைந்தால் எப்படி வை-ஃபை தானாக கனெக்ட் ஆகிவிடுகிறதோ, அதேபோல வை-சார்ஜஜை ஆன் செய்துவிட்டால், இந்தக் கருவியில் உள்ள ட்ரான்ஸ்மிட்டர் மொபைலை சார்ஜ் செய்யத் தொடங்கிவிடுகிறது.
சரி, ஒருவேளை ஏற்கெனவே முழு சார்ஜுடன் உள்ள மொபைலையும் தானாக சார்ஜ் செய்யுமா என்று நினைக்க வேண்டாம். இந்தக் கருவியில் உள்ள ட்ரான்ஸ்மிட்டர் மொபைலுக்குப் போதுமான அளவு சார்ஜ் இருக்கிறதா என்று சரிபார்த்த பிறகு சார்ஜ் செய்யத் தொடங்கும். சார்ஜ் ஆகிவிட்டால் தானகவே சார்ஜ் செய்வதை நிறுத்திக்கொள்ளும்.
இனி வீட்டுக்கு வந்தால், சார்ஜைத் தேடி அலைய வேண்டாம். நம் பொபைலை ஓரமாக வைத்துவிட்டு வேலையைப் பார்க்கலாம். மொபைல் தானாகவே சார்ஜ் ஆகிவிடும். இந்தக் கருவி உள்ள இடத்திலிருந்து 10 மீட்டர் தொலைவுவரை நாம் எங்கிருந்தாலும் மொபைலுக்கு சார்ஜ் செய்துகொள்ளலாம். வீட்டில் ஒரு கருவி இருந்தாலும், ஒரே சமயத்தில் இரண்டு மொபைலை இது சார்ஜ் செய்துவிடும்.
மொபைல் மட்டுமல்ல, வயர்லெஸ் வெப்கேம், வயர்லெஸ் ஆடியோ போன்ற பிற மல்டிமீடியா சாதனங்களையும் சார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த வை-ஃபை சார்ஜ் அடுத்த ஆண்டு முதல் அமெரிக்காவில் ரயில்நிலையங்கள், ஷாப்பிங் மால்களில் அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
சீக்கிரம் இந்தியாவிலும் அறிமுகப்படுத்துங்க!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT