Last Updated : 22 Sep, 2017 11:07 AM

 

Published : 22 Sep 2017 11:07 AM
Last Updated : 22 Sep 2017 11:07 AM

ஒளிரும் கண்கள் 1: கேமராவுக்குக் காத்திருந்த கணங்கள்

அது 1981-ம் ஆண்டு. ஒளிப்படக் கலையைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் எழுந்தது. இன்றைய காலகட்டத்தைப்போல ஒளிப்படக் கலையைக் கற்பதும் கேமராவை அணுகுவதும் அவ்வளவு எளிதாக இல்லை. 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதியதற்குப் பிந்தைய கோடை விடுமுறை. தேய்ந்து, துருப்பிடித்து, நிறமிழந்த பழைய யாஷிகா 120 எம்.எம். ஃபிலிம் கேமரா எங்கள் கைக்கு வந்துசேர்ந்தது. நாங்கள் என்பது நானும் எனது வகுப்புத் தோழன் அன்பரசனும்.

அன்றைக்கு அந்தக் கேமரா கிடைப்பதே அபூர்வம். அதற்கு கறுப்பு எனாமல் வண்ணம் பூசி, வெயிலில் காயவைத்தோம். பிறகு ஆர்வம் மேலிட, அதில் ஃபிலிமை மாட்டிப் படம் எடுக்க ஆரம்பித்தோம். எங்கள் ஆர்வத்துக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. எடுத்த படங்கள் அத்தனையும் கறுப்பாக இருந்தன.

எங்களுக்குள் இடி இடித்து, மின்னல் வெட்டி, மழை தூற ஆரம்பித்தது. வெகு நேரத்துக்குப் பின் நாங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு, அதற்குப் பிறகு ஒரு நல்ல கேமரா வாங்கி மட்டுமே படம் எடுப்பது என்கிற முடிவுக்குவந்தோம். நண்பர் அன்பரசன் பிளஸ் ஒன் படிப்பிலும் குடந்தை அரசு ஓவியக் கல்லூரியில் ஓவியம் பயில நானும் சேர்ந்தோம்.

தீராத மோகம்

கல்லூரியின் ஆரம்ப நாட்களில் பார்த்த பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா ஆகியோருடைய படங்களின் ஒளிப்பதிவு, ஒளிப்படக் கலையின் மீது தீராத மோகத்தை ஏற்படுத்தியது. அந்தக் காலத்தில் இணையம் கிடையாது, ஒளிப்படத் துறை தொடர்பான பயிலரங்கோ அடிப்படைப் பயிற்சியோ அத்தனை எளிதாகக் கிடைக்காது. அந்த நிலையில் திரைப்படங்களையும் ஆங்கில இதழ்களின் ஒளிப்படங்களையும் பார்த்து வியப்பேன். இதுபோல நாமும் படங்கள் எடுக்க வேண்டும் என்கிற தூண்டுதல் மனதுக்குள் வளர ஆரம்பித்தது.

ஓவியம் வரைய நினைக்கும் காட்சிகளை ஓரிடத்தில் அமர்ந்து வெகுநேரம் தீட்ட முடியாதபோது கேமராவில் பதிவுசெய்து, அதை மாதிரியாகக்கொண்டு ஓவியம் தீட்டலாம் என்கிற சிந்தனை தலைதூக்கியது. அப்பாவிடம் கேமரா வேண்டுமெனக் கேட்டேன். 1984 நெய்வேலியில் ஸ்டுடியோக்களைத் தாண்டி மூன்று பேர் மட்டுமே கேமரா வைத்திருந்தார்கள்.

ஆழ்வார் தந்த புரிதல்

மூன்றாவது முறையாகக் கைமாறிய மிகப் பழைய, நூறு சதவீதம் ‘மேனுவ’லாக இயக்கக்கூடிய ‘ஸெனித்’ என்னும் ரஷ்ய தயாரிப்பு கேமரா ஆழ்வார் மூலம் 850 ரூபாய்க்கு என் கைக்கு வந்தது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் கணக்கராகப் பணியாற்றி வந்த ஆழ்வார், ஒளிப்படக் கலையின் மீது தீராக் காதல் கொண்டவர். கேமராவின் அடிப்படைகளை அவரே எனக்குப் Z N.Selvan

புரியவைத்தார். அடிப்படையைக் கற்க ஆறு மாதங்கள் ஆனது. பிறகு விடாமுயற்சி, தொடர்ந்த பயிற்சி என கேமராவின் நுணுக்கங்கள் பலவற்றை நானே கற்றுக்கொண்டேன்.

படம் எடுப்பதற்கென்று தனியே பயணம் மேற்கொள்ளும் அளவுக்குப் பொருளாதார நிலையோ, வாழ்க்கைச் சூழலோ இடம் கொடுக்கவில்லை. என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, காட்சிகளை, இயற்கை ஒளியில் யதார்த்தமாகப் பதிவு செய்வதையே விரும்புகிறேன்.

இந்த உலகை ஒவ்வொருவரும் வெவ்வேறு பார்வையில் பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள், அனுபவிக்கிறார்கள். இந்த உலகைப் பார்த்து, ரசித்து, அனுபவித்து, உள்வாங்கி அதைக் கலைவடிவமாக வெளிப்படுத்தும் ஒருவரே கலைஞராகிறார். அந்தப் பாதையில் என் பயணம் தொடர்கிறது.

கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்

தொடர்புக்கு: selvan.natesan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x