Published : 02 Dec 2016 12:20 PM
Last Updated : 02 Dec 2016 12:20 PM

"நம்ம டப்ஸ்மாஷ் மிரு... டா!"

இளைஞர்கள் மத்தியில் தற்போது ‘டப்ஸ்மாஷ்’ என்பது மிகவும் பிரபலமாகி விட்டது. டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டதன் மூலமாகவே, இளம்பெண் ஒருவரைத் திரைப்பட‌ இயக்குநர்கள் பலர் தங்கள் படங்களில் நாயகியாக்கத் தொடர்புகொண்டு வருகிறார்கள். அவர் பெயர் மிருணாளினி. பெங்களூரில் இருப்பவரிடம் ‘ஸ்கைப்’ மூலம் “எப்படி இந்த ஆர்வம் வந்தது?” என்று கேட்டால் டப்ஸ்மாஷில் பேசுவதுபோலவே ‘தடதட’க்கிறார்.

“இன்ஜினியரிங் படிச்சிட்டு வீட்டில் 2 மாதம் சும்மா இருந்தேன். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் டப்ஸ்மாஷ் என்னை இந்த அளவுக்குக் கொண்டு போகும் என நினைக்கலை. நண்பர்கள்தான் உனக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதால், டப்ஸ்மாஷ் பண்ணிப் பழகுன்னாங்க‌.

டப்ஸ்மாஷ் பண்ணி ஃபேஸ்புக்கில் சும்மா போட்டேன். அப்போதான் ‘டப்ஸ்மாஷ் தமிழ் ஃபன்’ அப்படிங்கிற‌ ஃபேஸ்புக் பக்கத்தில் என்னுடைய டப்ஸ்மாஷை எல்லாம் வீடியோவா போஸ்ட் பண்ணியிருந்தாங்க. அதுக்கப்புறம் ஓவர்நைட்ல நான் ஃபேமஸ் ஆகிட்டேன்!” என்றவரிடம், ‘உங்களுக்கு ரசிகர் மன்றங்கள் எல்லாம் ஆரம்பிச்சுட்டாங்களாமே?’ என்று கேட்டால், பதறி வருகிறது அவரது உதட்டில் புன்னகை.

“அதை ஏன் கேட்கிறீங்க? ‘அடுத்த டப்ஸ்மாஷ் எப்போங்க’ என்று ரசிகர்களின் கேள்வி என்னைத் துரத்திக்கிட்டே இருக்கு. எனக்கே ஆச்சர்யமா இருக்கு. இவ்வளவு பெரிசா ரீச்சாகும்னு கற்பனைகூட பண்ணலை. நான் தீவிரமா யோசித்துப் பண்ணி ரீச்சாகி இருந்தாதான் பெரிய விஷயமாக இருந்திருக்கும். ‘என்னடா இது... விளையாட்டா செய்யப்போய் இப்படி ஆகியிருச்சு. இது நமக்கு மட்டும்தானா’ என்று யோசிச்சுக்கிட்டிருக்கிறேன். அந்த‌ ஆச்சர்யம் என்னை விட்டு இன்னும் விலகலை” என்கிறார்.

‘ஃப்ரெண்ட்ஸ் என்ன சொல்...?’ என்று கேள்வியை முடிக்கும் முன்பே தயாராக இருக்கிறது அவரிடம் பதில். “இப்போவே செல்ஃபி எடு, ஆட்டோ கிராப் போடுன்னு கிண்டல் பண்றாங்க. ‘நீ நடிகையாகிட்டா எங்களை மறந்துவே'ன்னு ‘டீஸ்’ பண்றாங்க. அவங்களை எப்படி மறக்க முடியும்? அவங்க‌ சொல்லித்தானே நான் டப்ஸ்மாஷ் பண்ணவே ஆரம்பிச்சேன். மத்தபடி, நம்ம ஃப்ரெண்ட் இவ்வளவு ஃபேமஸாகிட்டான்றதுல அவங் களுக்கு ரொம்ப‌ சந்தோஷம்” என்றார்.

‘சென்னை மாதிரியே பெங்களூரிலும் நீங்க ஃபேமஸா?’ என்று கேட்டதற்கு அவரிடம் சுருதி குறைந்தது."பெங்களூரில் தமிழ் டப்ஸ்மாஷ் நிறைய பேர் பார்க்க மாட்டாங்க. போன‌ மாச‌ம் சென்னை வந்திருந்தேன். பெசன்ட் நகர் பீச்சில் என்னைப் பார்த்ததும் ‘ஹேய்... நம்ம டப்ஸ்மாஷ் பெண்ணு மிரு..டா’ன்னு படபடக்கிறாங்க. எனக்கு சந்தோஷம் தாங்க முடியலை. சென்னையில இருக்கும் பாப்புலராட்டி எனக்கு பெங்களூரில் கிடையாது!”

‘நடிகையாக உங்களுக்கு வாய்ப்புகள் குவிகிறதாமே?’ என்று கொக்கியைப் போட்டால் “நிறைய வாய்ப்புகள் வருது. இப்போ ஐ.பி.எம்.மில் வேலைக்குச் சேர்ந்திருக்கேன். என் குடும்பத்தினர் ‘சும்மா உன் ஆர்வத்துக்கு வேண்டுமானால் ஒன்னு ரெண்டு படங்கள் நடிச்சுப் பார். மத்தபடி அந்தத் துறை நமக்குச் சரிப்பட்டு வராது’ன்னு சொல்றாங்க. பெரிய படங்கள் எல்லாம் பண்ணலாமா வேண்டாமா என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது.

எனக்கு வாய்ப்புகள் தர விரும்பிய அனைவருமே புதிய இயக்குநர்கள்தான். என்னுடைய டப்ஸ்மாஷ் வீடியோக்கள், போட்டோஸ் எல்லாம் கேட்டிருந்தாங்க‌. நடிகையாவதற்கு 50 சதவீதம் தயாராகிட்டேன். ஆஃபீஸ்ல‌ வேலையில் இருக்கும்போது, நடிக்கக் கூப்பிட்டா எப்படி உடனே போறதுங்கிற டவுட் இருக்கு. ‘ஆக்டிங் கரியர்’ பத்தி இன்னும் முடிவெடுக்கலை. ஆறு மாசம் ஆஃபீஸ் வேலை பார்த்துட்டு, அதற்குப் பிறகு நல்ல வாய்ப்புகள் வந்தால் பார்க்கலாம்னு யோசிக்கிறேன்!” என்று வெட்கப்பட்டுச் சிரித்தார்.

‘சரி. யாருக்கு ஹீரோயினாக நடிக்க ஆசை?’ என்று கேட்டதும், யோசிக்காமல் பதில் வருகிறது. “சூர்யா” என்று சொல்லிவிட்டு, ‘சைன் ஆஃப்’ செய்தார்!

இவருடைய யூ-டியூப் பக்கம்: >https://www.youtube.com/channel/UCE5EKmV8uoLkEHtVn6Bx9mg?app=desktop

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x