Published : 23 Dec 2016 10:26 AM
Last Updated : 23 Dec 2016 10:26 AM
மூர்ச்சையான நண்பர் இயல்பு நிலைக்கு வந்தவுடன் தொடர்ந்த எங்கள் பயணத்தில் திஸ்ராப் (Tsrap) என்ற ஆறு குறுக்கிட்டது. வடக்கில் இருந்து பாயும் இந்த ஆறு சாகச விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அதைக் கடந்து 84 கி.மீ. கடந்த பிறகு சார்ச்சு (Sarchu) என்ற இடத்தை அடைந்தோம். இது நம் ராணுவத்தினர் தங்கக்கூடிய முக்கியமான பகுதி. குளிர்காலத்தில் இந்தப் பாதை மூடப்பட்டுவிடும்.
அங்குக் கூடாரம் அடித்துக் கடைகள் நடத்தப்படுகின்றன. ஒரு திபெத்தியரின் கூடாரத்துக்குச் சென்றோம். ஒரு திபெத்தியப் பெண் எங்களை உபசரித்தார். கூடாரத்துக்குள்ளே வரிசையாக இருந்த படுக்கைகளில் அவருடைய குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இஞ்சி டீயும் நூடுல்ஸும் உட்கொண்டோம். அந்த இடம் தரைமட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் இருந்தது. இதுபோன்ற ஏதுமற்ற பகுதியில் கிடைத்த அந்த உணவு அமுதமாக இருந்தது. அரை மணி நேர ஆசுவாசத்துக்குப் பிறகு புறப்பட்டோம்.
புவியியல் வியப்பு
தொடர்ந்து அதிக உயரத்துக்கு ஏறினோம். திடீரென்று ஒரு பள்ளத்தாக்கு தெரிய ஆரம்பித்தது. அங்கே குட்டிக்குட்டி கிராமங்கள் தென்பட ஆரம்பித்தன. இப்படி 14,000 அடி உயரத்தில் பூமியின் மாறுபட்ட தோற்றம் ஏற்படுத்திய விசித்திரம் எங்களைப் பிரமிக்க வைத்தது.
புவியியல் மாணவனான எனக்கு, அங்கிருந்த பாறை அமைப்பு வியப்பைத் தந்தது. வார்த்தைகளில் எளிதாக வர்ணித்துவிட முடியாத எண்ணங்களுடன் மௌனமாக அதைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்தேன்.
பிஸ்கிநாலா (Biskynala) வழியே சென்றோம். 10 வீடுகளைக் கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதி தென்பட்டது. அங்குப் பனியே இல்லை. எங்கும் வறட்சியாக வெயில் காய்ந்து கொண்டிருந்தது.
மீண்டும் மூச்சுத்திணறல்
மூன்று மணி நேரப் பயணத்துக்குப் பிறகு பாங் கணவாய் வழியே கடந்தோம். இந்திய ராணுவத் தளம் அமைந்துள்ள இடம். 15,700 அடி உயரத்தில் இரண்டு பக்கங்களிலும் ஓங்கி உயர்ந்த மலைகள், நடுவில் நேராகக் கோடு போட்ட மாதிரிச் சாலை அமைந்து இருந்தது, ஒரு சொர்க்கப் பூமியைப் போலிருந்தது. ஆனால், அங்கே தொடர்ந்து உயிர் வாழ முடியாது. அந்தப் பகுதிக்கு ‘மோர்’ சமவெளி என்று பெயர்.
உலகின் 4-வது உயரமான கணவாயை ஏற்கெனவே கடந்ததாகச் சொல்லியிருந்தேன். அடுத்ததாக உலகின் 2-வது உயரமான கணவாயான பாங் கணவாயையும் கடந்தோம். 17,400 அடி உயரத்தில் அமைந்திருந்த கணவாயைக் கடந்தோம். கடந்ததும், சாலை உயரமாக ஏறியது. தொடர்ந்து 35 கி.மீ. தொலைவுக்கு ஒரே நேர் ரோடு.
அதைக் கடந்து முடித்தால், மீண்டும் என்னுடன் வந்த இரண்டு நண்பர்களுக்கு மயக்கமும் மூச்சுத்திணறலும் ஆரம்பித்தது. ஆக்சிஜன் இல்லாமல் சிரமப்பட்டார்கள். உடனே அங்கிருந்து இறங்க ஆரம்பித்தோம். நிறைய தண்ணீர் குடிப்பதற்குக் கொடுத்து, அவர்களுடைய உடல்நிலையைக் கவனமாகப் பார்த்துக்கொண்டோம்.
அடுக்குப் பாறைகளின் அழகு
சிஸ்பாவில் இருந்து 259 கி.மீ. தொலைவில் ரம்ப்ஸி (Rumpse) என்ற பெரிய ஊர் முதன்முதலாகத் தென்பட்டது. அங்கே மனிதர்கள் வாழத் தகுதியான நிலஅமைப்பைப் பார்க்க முடிந்தது. அப்பகுதியில் மக்கள் வீடு கட்டி குடியேறி இருந்தார்கள். சுற்றிலும் மனித முயற்சியில் உருவாக்கப்பட்ட தோட்டங்களுடன் பள்ளத்தாக்கு பச்சை பசேலெனக் காட்சியளித்தது.
அந்தப் பகுதியில் உள்ள சிந்துப் பள்ளத்தாக்கில் இரும்புத் தாதுவை அதிகமாகக்கொண்ட சிவப்பு வண்ணப் பாறைகள், கனிமங்கள் கொட்டிக் கிடந்தன. சிவப்பு, பச்சை என்று வண்ண ஜாலங்களைக் கொண்ட மடிப்பு மலைப் பாறைகள் எங்களைச் சுற்றிலும் இருந்தன. அந்த அடுக்குப் பாறை களின் அழகு என்னைப் பெரிதும் ஈர்த்தது.
மருத்துவரின் எச்சரிக்கை
அப்சி (Upsi) என்ற இடத்தில் சிந்து ஆற்றை எதிர்கொண்டோம். 3,180 கி.மீ. நீளமுள்ள சிந்து ஆறு, மானசரோவர் ஏரியில் உருவாகிப் பாய்ந்து, பாகிஸ்தான் நாட்டைச் செழிப்பாக்குகிறது. இந்திய ராணுவப் படை பெருமளவு முகாமிட்டுள்ள காரு (Karu) பகுதியைக் கடந்தோம். அங்கே மலை மேல் இருந்து பார்த்தால் இடது பக்கம் மஞ்சள் நிறப் பாறைகள், வலது பக்கம் சாம்பல் நிறம் கலந்த சிவப்பு வண்ணப் பாறைகளின் அடுக்குகள் மிகத் தெளிவாகத் தெரிந்தன.
அங்கிருந்த ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். இனிமேல் இதுபோன்ற உயரமான மலைப்பகுதிகளில் திடீரென்று ஏறாதீர்கள், நிதானமாக ஏற வேண்டுமென மருத்துவர் அறிவுறுத்தினார். அதனால் காருவிலேயே விடுதியில் தங்கி, உடலை நிதானப்படுத்திக் கொள்ள முடிவு செய்தோம். எங்கள் நோக்கம் ‘லே’ பகுதியை அடைந்து பேட்லிங் செய்வதுதான். முன்பே நான் சொன்னதுபோலப் பல தடங்கல்களைக் கடந்து இலக்கை அடைய வேண்டிய நீண்ட பயணம் இது.
பிகாரில் பாட்னாவிலிருந்து புறப்பட்டு ஃபராகா என்ற இடத்தை அடைந்திருக்கிறோம். கங்கை ஆற்றிலேயே உள்ள மிகப் பெரிய தீவு ராகவ்பூர் தீவு. 50 கி.மீ நீளமும் 11 கி.மீ. அகலமும் கொண்டது. அதைக் கடந்தோம்.
இந்தத் தீவுக்கும் முதன்மை நிலப்பகுதிக்கும் இடையிலான ஒரே போக்குவரத்து படகுகள்தான். சஃபாரி காரையே படகில்தான் எடுத்துச் செல்கிறார்கள். ஆறு கடல் போல 2 கி.மீ. தொலைவுக்குப் பரந்து விரிந்து பாய்கிறது. தண்ணீர் அதிகம் இருப்பதால், மாசுபாடு தெரியவில்லை. பாட்னாவுக்குப் பிந்தைய கங்கை ஆற்றில் பனிமூட்டம் கிடையாது, ஆனால் இன்னமும் குளிர் அடிக்கவே செய்கிறது. இதற்கிடையே நிறைய ஆறுகள் கலக்கின்றன. எங்களுடைய பேட்லிங் குழுவில் மொத்தம் இருந்த ஐந்து பேரில் 2 பேர் பாட்னாவுடன் விலகி விட்டார்கள். பிகார் மக்கள், சற்று நெருக்கமற்று பேசினாலும், நல்ல மனிதர்கள்தான்.
பிகாரில் ஆற்றங்கரையில் தங்குவது அவ்வளவு வசதியாக இல்லை. அதனால் ஹோட்டல்களில் தங்கலாம் என முடிவு செய்தோம். ஒரு நாள் வேறு வழியில்லாமல் மணல் கொள்ளை நடக்கும் இடத்தில், ஒரு பெரிய மணல் திட்டிலேயே தங்கினோம்.
நாங்கள் கடந்துவந்த முங்கேர் மலைப் பகுதி ராஜ்மகால் கிரானைட் கற்களுக்காகப் புகழ்பெற்றது. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் வாழ்ந்த இடமும்கூட. இந்தப் பகுதியில் கங்கை வளைந்து, நெளிந்து செல்கிறது. மலைத்தொடரால் ஆறு பெரிதாகத் திரும்புகிறது. விநோதமான எடி நீரோட்டமும் இப்பகுதியில் உண்டு. இது கன்வேயர் பெல்ட்டைப் போல பேட்லிங் பலகையைப் பின்னால் இழுக்கக்கூடியது. முன்பெல்லாம் தினசரி 35 கி.மீ. தொலைவைக் கடந்து கொண்டிருந்தோம். இப்போதெல்லாம் ஒரு நாளில் மிகச் சாதாரணமாக 40 கி.மீ.க்கு மேல் கடக்கிறோம்.
சுல்தான்கஞ்ச் என்ற இடத்துக்கு வந்தபோது, அன்றைய நாளும் 40 கி.மீ.க்கு மேல் கடந்திருப்போம் என்றே நினைத்தோம். ஆனால், நிஜ தொலைவைக் கணக்கிட்டால் 54 கி.மீ. ஆக இருந்தது. காலையில் 8 மணிக்கு பேட்லிங் செய்ய ஆரம்பித்த முதல் 15 கி.மீ. தொலைவுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டோம். ஆனால், அதற்குப் பிறகு மாலை 5 மணிக்குள் கூடுதலாக 39 கி.மீட்டரை ஆச்சரியப்படும்படி கடந்துவிட்டோம்.
ஒரே நாளில் 54 கி.மீ. பேட்லிங் |
(அடுத்த வாரம்: பேட்லிங் பலகையை சில்லிடும் ஏரியில் இறக்கினேன்)
தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT