Last Updated : 02 Dec, 2016 11:46 AM

 

Published : 02 Dec 2016 11:46 AM
Last Updated : 02 Dec 2016 11:46 AM

அலையோடு விளையாடு! 11 - சென்னை ஏரிகளைக் காக்க ஒரு தேடல்

சென்னை ஏரிகள் தேடலின் ஒரு பகுதியாக 2015 டிசம்பர் 10-ம் தேதி மதுராந்தகம் ஏரியில் பேட்லிங் செய்யத் திட்டமிட்டோம். வழியில் வள்ளிபுரம் என்ற இடத்தில் இறங்கி பாலாற்றைப் பார்த்தோம். சில நாட்களுக்கு முன்புவரை மணல்வெளியாக நீண்டு சென்றுகொண்டிருந்த அந்த ஆற்றில், அன்றைக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

சோழர்களின் ஏரி

பாலாறு மிகப் பெரிய ஆறாக இருந்திருக்கிறது, பெரிய அளவில் விவசாயம் செழிப்பதற்குத் தண்ணீரையும் தந்திருக்கிறது. போக்குவரத்துக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். காலப் போக்கில் சிறுத்து இப்போது உள்ள வடிவத்துக்கு வந்துவிட்டது. ஆற்றில் இறங்கும் எண்ணத்தைக் கைவிட்டு, மதுராந்தகம் ஏரியை அடைந்தோம்.

அந்தப் பிரம்மாண்டமான ஏரியை என் சிறு வயதிலிருந்தே பார்த்துவருகிறேன். இதன் மேற்கில்தான் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவை சரணாலயம் உள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் இந்த ஏரிக்கும் இரை தேடி வந்துபோகின்றன. இந்த ஏரியை அமைத்தவர்கள் சோழ மன்னர்கள். ஆயிரம் கிராமங்களின் விவசாயத்துக்கு இந்த ஏரி பயன்பட்டுவருகிறது. இன்றுவரை பயன்தரும் அந்த ஏரிக்காக தொலைநோக்குப் பார்வை கொண்ட சோழ மன்னர்களுக்குத்தான், இதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

குளலை குப்பை

ஏரியில் பேட்லிங் பலகையை இறக்கி பேட்லிங் பண்ண ஆரம்பித்தோம். இரண்டு பலகைகளில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து பேட்லிங் செய்தோம். ஏரி நல்ல ஆழம், காற்று அலைகளை ஏற்படுத்தியது. பாசனத்துக்குத் தண்ணீர் வெளியேறும் வழியில் நீரோட்டம் அதிகம் என்பதால் அதைத் தவிர்த்து, மற்ற பகுதிகளில் வெற்றிகரமாக பேட்லிங் பயணத்தை முடித்தோம்.

அடுத்தாகக் குளலை ஏரிக்குப் போனோம். அது 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. நீர்த்தாவரங்கள் அடர்த்தியாக வளர்ந்து ஏரியை ஆக்கிரமித்திருந்தன. ஆனால், குப்பை கொட்டும் இடமாக அந்த ஏரி மாற்றப்பட்டிருந்தது வருத்தத்தை அளித்தது.

மண்மேடு அதிசயம்

திருக்கழுக்குன்றம் வழியாகத் திரும்ப வந்துகொண்டிருந்தோம், சூரியன் விடைபெறுவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன. அப்போது பெரிய, நீண்ட மண்மேடு குன்றுபோல் தெரிய, அது ஏரியின் கரையைப்போல இல்லையே என்று நினைத்து நண்பர் செல்வத்தை எட்டிப் பார்க்கச் சொன்னேன். கரையின் மேல் ஏறிய செல்வம், மகிழ்ச்சியின் வெளிப்பாடாக விசில் அடித்தார். பேட்லிங் பலகைகளை எடுத்துக்கொண்டு மேட்டில் ஏற ஆரம்பித்தோம்.

அங்கே ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. தேக்கடியைப் போல் ஒரு மிகப் பெரிய ஏரி. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகுடன் சுத்தமாகவும் அந்த ஏரி திகழ்ந்தது. அதற்கு அட்சரேகை 12.40 என்று பெயர் வைத்தேன். கிழக்கு மலைத் தொடர், நல்லதொரு காட்டின் அரவணைப்பில் அந்த ஏரி கம்பீரமாக அமைந்திருந்தது. அமைதியாக அலைகள் தாலாட்ட 30 நிமிடம் பேட்லிங் பலகையில் பயணித்தோம். இங்கு செல்வதற்குச் சிறந்த காலம் நவம்பர் மாதம். காட்டுப்பூனை, கீரிப்பிள்ளை, நரி, மான் போன்ற காட்டுயிர்களும் அங்கே இருந்தன.

பேட்லிங் காப்பாற்றுமா?

அடுத்த மூன்று மாதங்களில் நிறைய ஏரிகளைக் கண்டுபிடித்தேன். ஒவ்வொன்றுக்கும் ‘பொன்னியின் செல்வன்', 'குந்தவை' என்று செல்லப் பெயர்களைச் சூட்டினேன். அவற்றின் உண்மைப் பெயர் வேறாக இருக்கும். எதற்காக உண்மையான பெயரைச் சொல்லவில்லை என்றால், நம் மக்களுக்கு ஒரு ஏரி கிடைத்துவிட்டால் உடனே அதை மாசுபடுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். ரியல் எஸ்டேட், தண்ணீர் சுரண்டல், ஆக்கிரமிப்பு என்று சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் நடைபெறும் இடமாகவும் இந்த ஏரிகள் மாறலாம் என்பதுதான் பட்டப் பெயர் வைப்பதற்குக் காரணம்.

அதேநேரம் ஏரிகள்-நீர்நிலைகளில் பலரும் தொடர்ச்சியாக பேட்லிங் செய்வதன் மூலம், இந்த ஏரிகளைப் பாதுகாக்கலாம். பேட்லிங் செய்வதற்குச் சுத்தமான தண்ணீர் தேவை. தண்ணீரில் பேட்லிங் எந்த மாசுபாட்டையும் ஏற்படுத்துவதில்லை. ஒரு ஏரியை மக்கள் பலரும் நல்ல விஷயத்துக்காகத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அந்த ஏரியின் மீதான அக்கறையும் பிடிப்பும் சமூகத்தில் அதிகரிக்கும். அதன் பிறகு ஏரியைச் சீரழிக்க யாராவது நினைத்தாலும், கூட்டாக எதிர்ப்பைத் தெரிவிக்க முடியும்.

பேட்லிங் என்ற நீர் சாகச விளையாட்டு பிரபலம் ஆகும் நிலையில் நிறைய நீர்நிலைகளை மக்கள் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். அப்போது நீர்நிலைகள் மாசுபடாமலும் ஏரிகள் காணாமல் போகாமலும் பாதுகாக்கப்படும் என்பது என் நம்பிக்கை.

கங்கையுடன் யமுனை கலக்கும் திரிவேணி சங்கமத்துக்குப் பிறகு ஆறு மிக ஆழமாகவும் அகலமாகவும் மாறிவருகிறது.

அது மட்டுமல்லாமல் இந்தப் பகுதியில் ஆறு பாம்பைப் போல வளைந்து நெளிந்து செல்கிறது. ஒவ்வொரு 10 கி.மீ.க்கும் ஒரு வளைவு வருகிறது. இதனால் முன்பு எளிதாகக் கடந்த தொலைவைக் கடக்கவும் இப்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறோம்.

எதையுமே கணித்துப் பேட்லிங் செய்ய முடியவில்லை. ஆற்றின் ஒரு வளைவில் காற்று எங்களுக்குச் சாதகமாக வீசும், அதனால் அப்பகுதியில் சட்டென்று கடந்துவிடுவோம். வளைவு முடிந்த பிறகு, அதே காற்று எதிர்திசையில் வீசும் என்பதால் ரொம்பவே கஷ்டப்படுகிறோம். அதேபோல Eddy எனப்படும் எதிர் நீரோட்டம் கொண்ட பெரும்சுழல்களும் எங்கள் பேட்லிங் பலகையை இழுக்க முயற்சித்தன. இந்தச் சுழல்களில் சிக்கி இறந்துபோகும் ஆபத்து இல்லையென்றாலும், சிக்கினால் பேட்லிங் பலகையைக் கவிழ்த்துவிடும், பலகை சேதாரமாகிவிடும். இதனால் பேட்லிங் செய்வது மிகுந்த சவாலாக இருக்கிறது, ரொம்பவே களைத்தும் போகிறோம்.

அலகாபாத்தில் இருந்து பாட்னா செல்லும் கங்கை ஆற்றின் ஓரிடத்தில் ஓங்கில்கள் (டால்பின்) நிறைந்த பகுதியைப் பார்த்தேன். அங்கே மட்டும் 120-க்கும் மேற்பட்ட ஓங்கில்களைப் பதிவு செய்தேன். ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி இந்தப் பேட்லிங் பயணத்தில் காட்டுயிர்களைக் கணக்கெடுக்கும் பணியையும் சேர்த்தே செய்துவருகிறேன். இன்னொரு இடத்தில் கரியால் முதலையைப் பார்த்தேன்.

இதற்கிடையில் எங்கள் குழுவைச் சேர்ந்த பாஸ்கலுக்கு திடீரென்று காய்ச்சல். ஒரு நாள் கடுமையாக இருக்கிறது, மற்றொரு நாள் குறைகிறது. டெங்கு காய்ச்சலாகக்கூட இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். அடுத்ததாக வரலாற்று சிறப்புமிக்க வாராணசிக்குப் போகப் போகிறோம்.

பாம்பைப் போன்ற பிரம்மாண்டம்

(அடுத்த வாரம்: உலகக் கூரையின் மீது…)
தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x