Last Updated : 25 Nov, 2016 11:32 AM

 

Published : 25 Nov 2016 11:32 AM
Last Updated : 25 Nov 2016 11:32 AM

அலையோடு விளையாடு! 10 - சென்னை வெள்ளத்தில் மக்களைக் காத்த பேட்லிங்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் சென்னைவாசிகள் எப்படி இருந்திருப்பார்கள் என்பது சென்னையில் இல்லாதவர் களுக்குக்கூடத் தெரிந்திருக்கும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதற்கான அறிகுறிகள் தெரிந்திருந்தன. நவம்பர் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் பெய்த கனமழை சென்னையின் வெவ்வேறு பகுதிகளை வெள்ளத்தில் தள்ளியது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல டிசம்பர் 1-ம் தேதி வந்த பெருமழை, கிட்டத்தட்ட ஒட்டுமொத்தச் சென்னையையும் தத்தளிக்க வைத்தது.

100 வருடங்களுக்குப் பிறகு பெய்த மிகப் பெரிய மழையால் இந்த வெள்ளம் வந்ததாகப் பதிவுகள் சொல்கின்றன. மற்ற நகரங்களிலிருந்து சென்னையும், சென்னைக்குள்ளேயே பல பகுதிகள் அடுத்த பகுதிகளுடனும் தொடர்பற்றுத் துண்டிக்கப்பட்டு, எல்லாமே தனித்தனித் தீவாக மாறின.

2,500 பேரின் உயிர்

இந்த நேரத்தில் எங்களுடைய பேட்லிங் அனுபவம் பலரது உயிரைக் காப்பாற்ற உதவியது. ‘பே ஆஃப் லைஃப்’ நிறுவனம் மூலம் வெள்ளத்தில் தத்தளித்த சுமார் 2,500 பேரை பேட்லிங் பலகை, படகு மூலம் காப்பாற்றினோம். அதேநேரம் சில இடங்களில் தண்ணீரின் ஆழம், தண்ணீர் இருக்கும் இடம் பற்றிய விழிப்புணர்வு எங்களுக்கு இல்லாத காரணத்தால், மக்களை மீட்க முயற்சிக்கவில்லை.

வெள்ளம் வடிந்து கொஞ்ச காலத்துக்குப் பிறகு, சென்னையில் உள்ள ஏரிகளை ஒவ்வொன்றாகச் சென்று பார்க்கத் தொடங்கினேன். சென்னை, பழைய செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு பகுதிதான் என்பதால் சிறிய, பெரிய ஏரிகள் நிறைந்த ஒரு நகரம்தான். சென்னைப் புறநகரில் அப்படிப்பட்ட ஏரிகள் சில இன்னமும் எஞ்சியிருக்கின்றன. ஆனால், நமக்குத்தான் ஏரிகளின் அருமை பற்றிப் பெரிய கவலைகள் இல்லை.

ஏரிகளைக் காக்க...

மிச்சமிருக்கும் ஏரிகளை ஆக்கிர மிப்பது, குப்பையை மலைபோல் குவித்து வைப்பது, கழிவுநீரைக் கலந்து விடுவது என்று நமக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் நீர்நிலைகளை நாசப்படுத்திக்கொண்டிருக்கிறோம். இதுபோன்ற ஏரிகள்-நீர்நிலைகளில் பேட்லிங் செய்வது சாத்தியமில்லை. நீர்நிலைகளை எப்படியாவது தூய்மைப்படுத்திப் பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்தி ஆக வேண்டும் என்ற தவிப்பு என் மனதுக்குள் இருந்தது.

மேலை நாடுகளில் வாரஇறுதிப் பொழுதுபோக்குக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஐந்து நாட்கள் கடுமையாக உழைத்தார்கள் என்றால், இரண்டு நாட்கள் அலுவலகத்தைத் தள்ளி வைத்துவிட்டு வாழ்க்கையையும் புதிய இடங்களையும் ரசித்து அனுபவிக்கிறார்கள். அதற்கு வசதியாகத் தாங்கள் வாழும் நகரைத் தூய்மையாகப் பராமரிக்கவும் செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

சீர்கெட்ட ஏரிகளைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதுக்குள் இப்படிப்பட்ட விஷயங்களே ஓடும். ஏரிகளையும் நீர்நிலைகளையும் பாதுகாக்க பேட்லிங்கைப் பயன்படுத்த வேண்டும் என்று என் மனதுக்குள் உறுதி எடுத்துக்கொண்டேன். சென்னையின் தெற்கில் 10 முதல் 30 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள் உள்ள ஏரிகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்ய ஆரம்பித்தேன்.

சென்னையில் உள்ள ஏரிகளைக் கண்டுபிடிப்பதற்குப் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தினேன். வரைபடங்கள், இணையதளங்கள் மூலம் ஏரிகள் உள்ள இடங்களைக் கண்டுபிடித்து ஆராயத் தொடங்கலாம் என்று முடிவெடுத்தேன்.



நீங்களும் கற்கலாம் பேட்லிங்

சைக்கிளிங், ஜாகிங் போல் பேட்லிங்கும் (Paddling Stand up Paddling (SUP) உடற்பயிற்சி சார்ந்த ஒரு பொழுதுபோக்கு, சாகச விளையாட்டு.

‘அன்றாட வாழ்க்கைக்கு நீர் அவசியம், அதில் வித்தியாசமான ஒன்றைச் செய்தால் மக்கள் விரும்புவார்கள்’ என்று எழுதி ஃபேஸ்புக், ட்விட்டரில் என்னுடைய கைபேசி எண்ணுடன் முன்பு விளம்பரம் செய்திருந்தேன்.

பலரும் என்னைத் தொடர்புகொண்டார்கள். வந்தவர்களை இரண்டு முதல் ஐந்து பேர்வரை என்னுடைய காரில் நீர்நிலைகளுக்கு அழைத்துச் சென்றேன். உயிர்காக்கும் கவச உடை, காலில் பாதுகாப்புக் கயிறு (Leash) போன்றவற்றை அணிவித்து முதலில் 30 நிமிடங்களுக்குத் தண்ணீரில் அவர்களை மிதக்கவிடுவேன். நம்மில் பலருக்கும் உள்ள மிகப் பெரிய மனத்தடை தண்ணீரைப் பார்த்தால் இருக்கும் பயம்தான். அந்த மனநிலையுடன் பேட்லிங் செய்ய முடியாது. அது தேவையற்ற ஒரு பயமும்கூட. அதைப் போக்கவே தண்ணீரில் மிதக்கவிடுகிறோம்.

அதற்குப் பிறகு எப்படித் துடுப்பு போடுவது என்று பயிற்சி அளிப்பேன். ஆழமில்லாத இடங்களில் அவர்களைத் துடுப்புப் போட வைப்பேன். பிறகு நின்றுகொண்டு துடுப்புப் போடச் சொல்லிக்கொடுப்பேன். கடைசியாக மூச்சு விடும் செயற்கை சுவாசக் குழாயை அணிவித்துத் தண்ணீருக்கு அடியிலும் நீந்தக் கற்றுத் தருவேன். இப்படி 100 பேருக்கு இதுவரை பயிற்சி அளித்திருக்கிறேன்.

பேட்லிங் வாரஇறுதி நாட்களுக்கான நல்ல பொழுது போக்காகவும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் செயலாகவும் இருக்கும் என்பது என் உறுதியான நம்பிக்கை.



இந்தியாவே பண மதிப்பு நீக்கத்தால் திண்டாடிக்கொண்டிருக்கும்போது, நாங்கள் மட்டும் அதிலிருந்து தப்பிக்க முடியுமா என்ன? பேட்லிங் பயணத்துக்கு இடையே ஏற்படும் செலவுகளுக்காக கான்பூர்-அலகாபாத் இடையே பார்க்கும் இடத்தில் உள்ள வங்கியில் எல்லாம் பணத்தை மாற்றுவதற்கு நாங்களும் திண்டாடித்தான் போனோம்.

இப்போது அலகாபாதில் உள்ள திரிவேணி சங்கமத்தை வந்தடைந்துவிட்டோம். இந்த இடம் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது. இங்கு பேட்லிங் செய்யவே தேவையில்லை. ஆற்றின் நீரோட்டம் அவ்வளவு வேகமாகத் தரதரவென்று இழுத்துப் போகிறது. இங்கே வலதுபுறம் யமுனை நதி நீர்ப்பாசிகளுடன் பச்சையும் நீலமும் கலந்த வண்ணத்தில் ஓடி வருகிறது. கங்கை நதியோ கலங்கிய பழுப்பு நிறத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு வண்ண நீரும் கலப்பதைப் பார்ப்பது புதிய அனுபவம்.

கான்பூரைத் தாண்டிய பிறகு அலகாபாதை அடைவது வரையிலான இடைப்பட்ட பகுதியில் கங்கை நதி ஓங்கில்களைத் (டால்பின்) தொடர்ச்சியாகப் பார்க்க முடிந்தது மனதுக்குத் திருப்தி தந்தது. உலகின் மோசமான மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் இருக்கும் கான்பூரிலிருந்து 40 கி.மீ. தாண்டிய உடனேயே ஆற்று ஓங்கில்களைப் பார்க்க முடிந்தது ஆச்சரியம்தான். நாங்கள் பார்த்தபோது ஓங்கில்கள் சிறிய மீன்களை இரையாக வேட்டையாடிக்கொண்டிருந்தன. உலகில் உள்ள புத்திசாலி உயிரினங்களில் பாலூட்டிகளான ஓங்கில்களும் அடக்கம். சீனாவில் மஞ்சள் ஆறு ஓங்கில், இந்தியாவில் சிந்து நதி ஓங்கில், கங்கை-பிரம்மபுத்திரா ஓங்கில், தென்னமெரிக்காவில் அமேசான் ஓங்கில் ஆகிய நான்கு ஆற்று ஓங்கில் வகைகள் முக்கியமானவை. இதில் அமேசான் ஓங்கில் மட்டுமே நல்ல எண்ணிக்கையில் இருக்கிறது. ஆற்று ஓங்கில், தேசிய நீர்வாழ் உயிரினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு இடத்தில் ஓங்கில்கள் இருக்கின்றன என்றால், அந்த ஆற்றுப் பகுதி சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். ஏனென்றால், உணவுச் சங்கிலியின் உச்சத்தில் ஓங்கில் உள்ளது. ஆற்று ஓங்கில்கள் ஆழமான பகுதியிலேயே வாழும், குழுவாகவே இருக்கும். கங்கை ஆற்றில் தண்ணீர் பழுப்பு நிறத்தில் கலங்கி ஓடுவதால், இந்த ஓங்கில்கள் மீயொலி அலைகள் மூலமாகவே இரை தேடுகின்றன. 1982-ல் 5,000-க்கும் மேல் இருந்த இந்த ஓங்கில்கள், இன்றைக்கு ஆயிரமாகச் சுருங்கிவிட்டன. இந்த ஆற்று ஓங்கில்களின் எண்ணிக்கை குறைந்துவருவதற்கு முக்கியக் காரணங்கள்: அணைகள் கட்டி தண்ணீர் தேக்கப்பட்டுவிடுவதால் ஆற்றின் ஆழம் குறைந்து ஓங்கில்கள் இயல்பாக வாழ முடிவதில்லை, அவற்றுக்கான உணவு கிடைக்கும் தன்மையும் குறைந்துவருகிறது, மாசுபாடு மோசமாக அதிகரித்துவிட்டது, அதேபோல மீனவர்களின் நைலான் வலைகளில் சிக்கியும் இவை இறக்கின்றன.

என்னுடைய இந்தப் பயணத்தில் ஓங்கில்களைக் கணக்கெடுக்கவும் ஆரம்பித்திருக்கிறேன். தெளிவான நெறிமுறைகளுடன் இந்தக் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டுவருகிறேன். இதுவரை கங்கை நதியில் 1000 கி.மீ. பேட்லிங் செய்திருக்கிறோம். காசியை நோக்கி இப்போது பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

பணமில்லாமல் அலைந்ததும் ஓங்கில்களுடன் சில பொழுதுகளும்

(அடுத்த வாரம்: சென்னை ஏரிகளைக் காக்க ஒரு தேடல்)
தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x