Last Updated : 04 Nov, 2016 10:27 AM

 

Published : 04 Nov 2016 10:27 AM
Last Updated : 04 Nov 2016 10:27 AM

அலையோடு விளையாடு! 07: கொந்தளிக்கும் காஷ்மீரில் எதிர்கொண்ட எதிர்ப்பு

சென்னை கோவளம் கடற்கரை, சென்னை ஏரிகள், மலேசியா, இலங்கை எனப் பல இடங்களில் பேட்லிங் செய்யும் அனுபவத்தைப் பெற்றிருந்தாலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பேட்லிங் செய்ய வேண்டும் என்பது என் ஆர்வம். புகழ்பெற்ற காஷ்மீர் தால் ஏரியில் பேட்லிங் செய்யும் ஆசையும் இதில் ஒன்று.

கொந்தளிப்பான பகுதியான காஷ்மீரின் அழகை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. பிரம்மாண்ட இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் காஷ்மீர், இயற்கையின் அழகெல்லாம் கொட்டிக்கிடக்கும் நிலம். அங்கிருக்கும் தால் ஏரி பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்க நினைக்கும் இடம் தால் ஏரி.

காஷ்மீரின் அணிகலன்

குளிர் காலத்தில் (அதிகபட்சமாக மைனஸ் 11 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும்) உறைந்து கிடக்கும் இந்த ஏரி, கோடைக் காலத்தில் உயிர் பெற்றுப் பரபரப்பாகிவிடும். அதற்குக் காரணம் இந்த ஏரியில் இருக்கும் வண்ணமயமான படகு வீடுகள் (இவை சிகரா எனப்படுகின்றன). படகுகளைத் தாண்டி மீன் பிடிக்கவும், நீர்த்தாவரங்கள் வளர்க்கவும் இந்த ஏரி முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

முகலாய அரசர் ஜஹாங்கிரின் காலத்திலேயே தால் ஏரி பிரபலமாக இருந்தது. அந்தக் காலத்திலேயே ஷாலிமார் பாஹ், நிஷா பாஹ் போன்ற படகுத்துறைகள் தால் ஏரியின் கரையில் கட்டப்பட்டுவிட்டன. ஏரியின் கரைப் பகுதி மட்டும் 15 கி.மீ.க்கு மேல். இந்தக் கரைப் பகுதி முழுக்கப் பல பூங்காக்கள், தோட்டங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பண்டைக் காலம் தொட்டே தால் ஏரியைக் காஷ்மீரிகள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், காஷ்மீரி மொழியில் ‘தால்’ என்ற சொல்லே ஏரியைத்தான் குறைக்கிறது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், காஷ்மீர் ஒரு சொர்க்கப் பூமி. தால் ஏரியோ காஷ்மீரின் அணிகலன், ஸ்ரீநகரின் அணிகலன் என்றெல்லாம் புகழப்படுகிறது. கேரளத்தைக் கடவுளின் சொந்த நாடு என்கிறார்கள். அப்படியானால் காஷ்மீரை இயற்கை அன்னை மொத்தமாகக் குடியேறிய இடம் என்று சொல்லலாம்.

இவ்வளவு பெருமை மிகுந்த தால் ஏரி, காஷ்மீரில் நிலவும் கொந்தளிப்பான சூழல் காரணமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மிக மோசமாகச் சீரழிந்துவருகிறது.

இமயமலையின் அடிவாரத்தில்

எது எப்படியிருந்தாலும் தால் ஏரிக்குச் சென்று பேட்லிங் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தேன். எப்போதும் போல அங்கு நிலவும் தட்பவெப்ப நிலை, வரைபடம், ஏரியின் தன்மை, எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும், வெற்றிகரமான பயணத்துக்குத் தேவையான மற்ற அம்சங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன்.

என்னுடைய 10 அடி நீளமுள்ள பேட்லிங் பலகை, துடுப்பு, கேமரா, மற்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக்கொண்டேன். எல்லாம் சேர்த்து 15 கிலோ எடை வந்தது.

தால் ஏரியின் பரப்பளவு 18 சதுர கி.மீ., 20 அடியிலிருந்து 30 அடிவரை ஆழமுள்ள நல்ல தண்ணீர் ஏரி. ஏரிக்கு எதிரே இமயமலைச் சிகரங்கள் கம்பீரமும் ரம்மியமும் கலந்த அழகுடன் உயர்ந்தோங்கி நின்றன. சுற்றுலாப் பணிகள் தங்கும் சிகரா படகு வீடுகள், படகு வீடுகளிலேயே கடைகள், உணவகம் என்று தால் ஏரி மிதக்கும் தனி நகரமாகவே இருந்தது.

என்னுடைய வங்க நண்பரும் புவியியல் நிபுணருமான சோமன் சர்கார், மனோஜ் சோனி ஆகியோரும் என்னுடன் வந்திருந்தார்கள். நாங்கள் ஒரு சிகராவை வாடகைக்கு எடுத்தோம். நானோ பேட்லிங் பலகையைத் தண்ணீரில் இறக்கி, பேட்லிங் செய்ய ஆரம்பித்தேன்.

பேட்லிங் எதிரியா?

நான் துடுப்பை வலித்துக் கொண்டிருந்தபோது அந்த ஏரியில் வாழும் மக்கள் என் செயல்பாட்டை விரும்பவில்லை என்பதை என்னால் உணர முடிந்தது. படகை வைத்துப் பிழைப்பு நடத்தும் அவர்களுக்கு, என்னுடைய நவீன பேட்லிங் பலகை எதிரியாகத் தோன்றியிருக்கலாம்.

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களிடம் நெருங்கிப் பேச்சு கொடுத்து பேட்லிங் பலகை பற்றியும் என்னுடைய நோக்கத்தைப் பற்றியும் அவர்களுக்குப் புரிய வைத்தேன். அவர்களையும் என் பேட்லிங் பலகையில் ஏற்றிப் பயிற்சி கொடுத்தேன்.

காலம்காலமாகப் படகு சவாரியில் தேர்ந்தவர்களான அவர்களுக்கு பேட்லிங் பலகை எந்த வகையிலும் புதிதாகவோ பிரச்சினையாகவோ இருக்கவில்லை. மீனுக்கு நீந்தக் கற்றுக்கொடுப்பதைப் போலத்தான் இருந்தது. பேட்லிங் செய்யும் லாகவத்தை அவர்கள் சட்டென்று பிடித்துக்கொண்டார்கள்.

எனக்கு காஷ்மீரி மொழி தெரியாது, அவர்களுக்கோ நான் பேசும் மொழிகள் தெரியாது. எல்லா இடத்திலும் கைகொடுக்கும் சைகை பாஷை, அங்கே கைகொடுத்தது. அங்கிருந்த ஒரு குட்டிப் பையன் நசீர் இதற்கெல்லாம் ரொம்பவும் உதவினான்.

என்னைப் புரிந்துகொண்ட அந்த மண்ணின் மைந்தர்கள் நான் பேட்லிங் செய்வதை வரவேற்றார்கள். என் தன்னம்பிக்கை அதிகரித்தது. பேட்லிங் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. நீர் விளையாட்டுக்கு மிகவும் சிறந்த இடம் ‘தால் ஏரி', என்பது சந்தேகமின்றி நிரூபணம் ஆனது.



கங்கை நதி பேட்லிங் பயணத்தில் இந்த வாரம் கர்முகேஷ்வர் என்ற இடத்தை அடைந்திருக்கிறோம். கங்கை நதியின் 400 கி.மீ. தொலைவைக் கடந்துவிட்டோம். இந்தப் பகுதியில் 12 இடங்களில் கங்கை நதி ஓங்கில்களை (டால்பின்) பார்த்திருக்கிறோம். அப்படியானால், இங்கே தண்ணீர் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.

எங்களுடைய கூகுள் ஆச்சரியங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. நதியின் போக்கு தினசரி ஆச்சரியத்தைத் தந்துகொண்டே இருக்கிறது. கங்கை ஆற்றின் கூகுள் வரைபடத்துக்கும் நிஜத்தில் நாங்கள் பார்ப்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம். பருவமழை முடிந்து ஒரு மாதத்துக்குப் பிறகே பயணத்தைத் தொடங்கினோம்.

இப்போது ஆறு பரந்ததாக இருந்தாலும்கூட, சில இடங்களில் ஆழம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இந்த இடங்களில் பேட்லிங் போர்டை செலுத்த முடியாது. ஆற்றுக்குள் இறங்கி இழுத்துக்கொண்டுதான் போக வேண்டும். அப்படிப் போகும்போது புதைகுழிகள், நகரும் மண் மேடுகள் ஆற்றுக்கு அடியில் இருக்கின்றன. இவை 10 அடி ஆழம்கூடப் போகும். ஒரு நாள் லைஃப் ஜாக்கெட் எல்லாம் போட்டிருந்தும்கூடக் கழுத்துவரை மூழ்கிவிட்டேன்.

பத்து நாள் பயணித்தால் ஒரு நாள் ஓய்வுக்காக இடைவெளி விடுவோம். இந்த வாரம் இரண்டு நாள் இடைவெளி எடுத்து நரோராவில் உள்ளூர் மக்களுடன் தீபாவளியைக் கொண்டாடினோம். தீபாவளிக்கு ஆயிரக்கணக்கில் மண் அகல் விளக்குகளை ஆற்றில் மிதக்க விடுகிறார்கள். ஆனால், ஆற்றில் விடும்போது பிளாஸ்டிக் அல்லது அலுமினியம் பூச்சு கொடுக்கப்பட்ட கோப்பையில் வைத்தே விடுகிறார்கள். இப்படிச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது ரொம்பவே வருத்தத்தைத் தருகிறது.

புதைகுழியில் கழுத்துவரை மூழ்கி…

(அடுத்த வாரம்: கோதாவரி என்ற கலங்கிய நதி)
தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x