Last Updated : 18 Nov, 2016 11:07 AM

 

Published : 18 Nov 2016 11:07 AM
Last Updated : 18 Nov 2016 11:07 AM

ஆடுகளத்தை உருவாக்கித் தரும் இளைஞர்கள்!

ஒலிம்பிக் நடக்கும்போது மட்டும்தான் இந்தியாவின் விளையாட்டுச் சூழலைப் பற்றிய கருத்துகளும் விவாதங்களும் சமூக ஊடகங்களில் அனல் பறக்க ‘ட்ரெண்டிங்’ ஆகிக் கொண்டிருக்கும். பிறகு, ஒலிம்பிக் முடிந்தவுடன் விளையாட்டுத் துறையின் மீதிருக்கும் அக்கறையும் மறைந்துவிடும். இந்தப் பொதுச் சமூகத்தின் சிந்தனையிலிருந்து மாறுபட்டுச் சிந்தித்திருக்கிறார்கள் இரண்டு இளைஞர்கள். தாமஸ் ஆபிரகாம், வி. ரங்கராஜா என்ற இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே ‘ரேடியன்ட் ஸ்போர்ட்’ (Radiant Sport) என்ற தன்னார்வ அமைப்பை உருவாக்கிக் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள்.

இந்த அமைப்பின் மூலம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். அப்படி, சமீபத்தில் நேரு பூங்காவில் ‘அத்லெயான்டிக்ஸ் டிராக் அண்ட் ஃபீல்டு 2016’ (Athleantics Track & Field 2016) என்ற ஒரு விளையாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது ‘ரேடியன்ட் ஸ்போர்ட்’. இந்தப் போட்டியில் இருநூற்றைம்பது குழந்தைகள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

“இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் திறமைகளுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால், அந்தத் திறமைகளைக் கண்டறிவதில்தான் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை முன்வைத்துத்தான் ‘ரேடியன்ட் ஸ்போர்ட்’ அமைப்பை உருவாக்கினோம். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பின்னணியில் வளரும் குழந்தைகளுக்கு விளையாட்டில் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதும் அவர்களுக்கான ஒரு களம் அமைத்துத் தருவதும்தான் எங்களுடைய முதல் நோக்கம். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறோம்” என்று சொல்லும் தாமஸ் ஆபிரகாம் மாநில அளவிலான டென்னிஸ் விளையாட்டு வீரர்.

இவர் ஸ்காட்லாந்தின் ‘ராபர்ட் கோர்டன்’ பல்கலைக்கழகத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு பொறியியலில் பட்ட மேற்படிப்பு முடித்துச் சமீபத்தில்தான் இந்தியா திரும்பியிருக்கிறார். அதேபோல, இவருடைய நண்பரான வி. ரங்கராஜாவும் அமெரிக்காவின் க்ளார்க் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டுதான் எம்.பி.ஏ., முடித்திருக்கிறார். இருவரும் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கும்போது இங்கே சென்னையில் ‘ரேடியன்ட் ஸ்போர்ட்’ சார்பாக விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார்கள். “இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவதற்கு எங்களுக்கு நிதி தேவைப்பட்டது.

அதற்காகக் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து என விளையாட்டுப் போட்டிகளை எங்கள் அமைப்பின் மூலம் நடத்திக்கொடுத்தோம். இந்த ஒருங்கிணைப்புப் பணிகளில் கிடைத்த நிதிகளிலிருந்துதான் ‘அத்லெயான்டிக்ஸ் டிராக் அண்ட் ஃபீல்டு 2016’ போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். மூன்று ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகளை வெளிநாட்டிலிருந்து ‘ஸ்கைப்’ அழைப்புகள் மூலம் தன்னார்வலர்களுடன் இணைந்து நடத்தினோம். இப்போது நான் இங்கே வந்தபிறகு தொடர்ந்து விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார் தாமஸ்.

‘அத்லெயான்டிக்ஸ் டிராக் அண்ட் ஃபீல்டு 2016’ நிகழ்ச்சியில் ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட ஆறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்டனர். “இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்துவருகிறோம். அதற்காகச் சில பள்ளிகளையும் தொடர்புகொண்டிருக்கிறோம். அத்துடன், தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு நகரங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகளைக் கொண்டுசெல்லவிருக்கிறோம். அடுத்த மாதம் ஒரு நீச்சல் போட்டி நடத்தவும் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம்” என்று சொல்கிறார் தாமஸ்.

உங்கள் திட்டங்கள் நிறைவேறட்டும் நண்பா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x