Last Updated : 11 Nov, 2016 11:43 AM

 

Published : 11 Nov 2016 11:43 AM
Last Updated : 11 Nov 2016 11:43 AM

இறகுப் பந்துக்காக ஒரு இளைஞர்!

கிரிக்கெட் என்ற விளையாட்டைத் தாண்டி கால்பந்து, கபடி என இதர விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கத் தொடங்கியிருக்கும் காலம் இது. அந்த வரிசையில் இப்போது இறகுப் பந்து விளையாட்டின் மீதும் இளைஞர்களின் கவனம் குவிய ஆரம்பித்துள்ளது. அதிலும் ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து இந்த விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவுடன், இந்த விளையாட்டின் மீது பலருக்கும் ‘கிரேஸ்!’

பல இளைஞர்கள் இந்த விளையாட்டில் களம் காண முயற்சித்துக் கொண்டிருக்க, மேலும் பல இளைஞர்களை இந்த விளையாட்டுக்குள் ஈர்க்க இளைஞர் ஒருவர் முயற்சித்துவருகிறார். அவர் ஹேமச்சந்திரன். சென்னையில், ‘பிராண்ட் அவதார்’ எனும் நிறுவனத்தை நடத்திவருகிறார்.

“பிறந்தது; வளர்ந்தது எல்லாமே அரக்கோணம் பக்கத்துல இருக்கிற காலிவாரி கண்டிகைன்ற கிராமத்தில்தான். மத்திய தர‌ விவசாயக் குடும்பம். தமிழ் மீடியத்துலதான் படிச்சேன். ப்ளஸ் டூ ஃபெயில். அதனால சந்திச்ச அவமானங்கள் நிறைய. அப்புறம் கொஞ்சம் சிரத்தை எடுத்துப் படிச்சு, பாஸ் பண்ணினேன்”என்று தன் பள்ளிப் பருவத்தை அசைகோடுகிறார்.

அப்புறம் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில‌ டிப்ளமோ சேர்ந்து ஸ்டேட் ரேங்க் வாங்கினார். சென்னையில் ஒரு இன்ஜினியரிங் காலேஜ்ல ஃப்ரீ ஸீட் கிடைத்தது. அது 2002-ம் வருஷம். சென்னைக்கு நான் அப்போதான் முதல் தடவையா வர்றேன். இங்கிலீஷ் பேசத் தெரியாது, நல்ல ட்ரெஸ் கிடையாது, பைக் கிடையாது, கல்ச்சுரல் ஷாக்னு நிறைய சவால்கள் இப்படியான நிலையில, நான் காலேஜ் சேர்ந்த ஆறு மாசத்துல என்னோட அப்பா இறந்துட்டார். எங்கள் குடும்பத்துல அவர் ஒருத்தர்தான் அப்போ சம்பாதிச்சிட்டு இருந்தார். அவரோட இறப்பு என்னை ரொம்பவும் பாதிச்சது. காலேஜையும் பாதியில விட வேண்டிய நிலைமை. என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். என்னோட பலம் என்னன்னு தேடிப் பார்த்தேன்” என்று சொல்லும் ஹேமசந்திரன் தன்னுடைய பாதை மாறிய கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.

அப்போ எல்லாம் என்னோட நண்பர்கள் காலேஜ் லைப்ரரியில ரெஃபரன்ஸ் புக்ஸ் எடுத்துப் படிப்பாங்க. அதெல்லாமே வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதியதா இருக்கும். அதைப் படிச்சுப் புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால நான் அவங்களுக்கு சொல்லித்தருவேன். இந்த நிலையில பசங்களுக்குப் பயன்படுற மாதிரி நாமே ஏன் தமிழில் புத்தகம் எழுதக் கூடாதுன்னு யோசிச்சேன்.

அப்படி ஒரு புத்தகத்தை எழுதிட்டு ‘ஸ்வாதி பப்ளிஷர்ஸ்’ங்கிற பதிப்பகத்தைத் தேடிப் போனேன். மாணவனா இருந்தாலும், டெக்னிக்கல் விஷயங்கள்ல‌ நான் ஸ்ட்ராங்கா இருந்ததால என்மேல நம்பிக்கை வைச்சு அதைப் பதிப்பிச்சாங்க. அது நல்லா போச்சு. அந்த விற்பனை கொடுத்த நம்பிக்கையால நான் அடுத்து 25 புத்தகங்கள் எழுதினேன். அதில் வந்த வருமானத்தை வெச்சு என் படிப்பை முடிச்சேன்” என்பவர், அடுத்து எடுத்த முடிவு நம்மை வியக்க வைக்கும்.

“2006-ம் வருஷம் நானும் என்னோட நண்பர்கள் சிலரும் சேர்ந்து ‘லோக் பரித்ரன்' அப்படிங்கிற கட்சி ஆரம்பிச்சோம். 7 தொகுதிகள்ல நின்னு 40 ஆயிரம் வாக்குகள் வாங்கி தோற்றும் போனோம். அப்புறம் ஜெகத் கஸ்பர், ‘மாஃபா' பாண்டியராஜன் மாதிரியான ஆளுமைகளிடம் சேர்ந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கக் கத்துக்கிட்டேன். அந்த அனுபவங்கள் நான் தனியா ஒரு ‘ஈவென்ட் மேனேஜ்மென்ட் அண்ட் பிராண்டிங்’ கம்பெனியை ஆரம்பிக்க உதவுச்சு” என்பவர் சமீபத்தில் உருவாக்கிய பிராண்ட்தான் ‘செலிப்ரிட்டி பேட்மிண்டன் லீக்’ (சி.பி.எல்).

“2006-ம் வருஷம் நானும் என்னோட நண்பர்கள் சிலரும் சேர்ந்து ‘லோக் பரித்ரன்' அப்படிங்கிற கட்சி ஆரம்பிச்சோம். 7 தொகுதிகள்ல நின்னு 40 ஆயிரம் வாக்குகள் வாங்கி தோற்றும் போனோம். அப்புறம் ஜெகத் கஸ்பர், ‘மாஃபா' பாண்டியராஜன் மாதிரியான ஆளுமைகளிடம் சேர்ந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கக் கத்துக்கிட்டேன். அந்த அனுபவங்கள் நான் தனியா ஒரு ‘ஈவென்ட் மேனேஜ்மென்ட் அண்ட் பிராண்டிங்’ கம்பெனியை ஆரம்பிக்க உதவுச்சு” என்பவர் சமீபத்தில் உருவாக்கிய பிராண்ட்தான் ‘செலிப்ரிட்டி பேட்மிண்டன் லீக்’ (சி.பி.எல்).

“நம்ம நாட்ல விளையாட்டுக்கும் என்டர்டெய்ன் மென்ட்டுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மார்க்கெட் இருக்கு. அதை இரண்டையும் ஒண்ணா கொண்டு வந்தா என்ன அப்படிங்கிற ஐடியாவுல உருவானதுதான் இந்த லீக். நிறைய நடிகர்கள்கிட்ட பேட்மிண்டன் விளையாடுற திறமை இருக்கு. அவங்க தங்களோட விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்த‌ ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, அதன் மூலமா இந்த விளையாட்டுக்கு நிறைய இளைஞர்களை ஈர்க்கலாம்னு முடிவு பண்ணோம். உடனே ‘சி.பி.எல். சீஸன் 1’ ஆரம்பிச்சுட்டோம்” என்றார்.

இந்த சீஸனில் கோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட், டோலிவுட் என தென்னிந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த நடிகர்கள் சிலர் பங்கேற்றிருக்கிறார்கள். இறுதிப் போட்டி மலேசியாவில் 12-ம் தேதி (நாளை) நடக்கிறது. முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் அணிக்கு முறையே ரூ.25 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் என ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.

“மற்ற விளையாட்டுகளைப் போல நடிகைகள் வெறும் ‘பிராண்ட் அம்பாசிடர்’ ஆக மட்டுமல்லாமல், இந்த லீக்கில் விளையாடவும் செய்கிறார்கள். அது இதன் சிறப்பு. இந்த விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை மெருகேற்றி, தேசிய, சர்வதேச அளவில் வெற்றி பெறச் செய்வதுதான் எங்கள் லட்சியம்!” என்று கண்கள் மின்னப் புன்னகைக்கிறார்.

இதன் முதல்படியாக, திறமையான மாணவர்களை அடையாளம் காண டிசம்பர் 10-ம் தேதி ‘ரோட்டராக்ட் இந்தியா’ அமைப்புடன் இணைந்து மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சென்னையில் இறகுப் பந்து போட்டி ஒன்றை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

முதல் தமிழச்சி!

பயிற்சியாளர் சரவணனுடன் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

றகுப் பந்து விளையாட்டுக்கு அதிகளவில் இளைஞர்களை ஈர்க்க ஹேமச்சந்திரன் முயற்சி செய்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் அந்த விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்றுத் தனது திறமையை நிரூபித்திருக்கிறார் மதுரை மாணவி ஒருவர்.

மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் வர்ஷினி. மதுரை டி.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவரும் இவர், கடந்த மாதம் 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகுப் பந்துப் போட்டி 15 வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். தேசிய அளவிலான பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற முதல் தமிழகப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இவர்!

நூறுக்கும் மேற்பட்ட கோப்பைகள் இவர் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அவரிடம் பேசியபோது...

“சிறு வயதில் நடனம், இறகுப் பந்து விளையாட்டு என இரண்டிலும் எனக்கு ஆர்வமிருந்தது. இரண்டிலும் பயிற்சி செய்துகொண்டிருந்தேன். பின்னர் நடனத்தை விட விளையாட்டிலேயே எனக்கு ஆர்வம் இருப்பது தெரிந்தது. எனவே தினந்தோறும் காலை 2 மணி நேரம் வில்லாபுரத்தில் உள்ள மைதானத்திலும், மாலை 3 மணி நேரம் ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்திலும் பயிற்சியில் ஈடுபடுவேன்.

அந்தப் பயிற்சிகள் என்னை மாவட்ட, மாநில அளவிலான பல போட்டிகளில் வெற்றிபெறச் செய்தன. மாவட்ட சாம்பியன்ஷிப் பட்டியலில் 11 முறை இடம் கிடைத்துள்ளது. தற்போது தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பயிற்சியாளரே என் வெற்றிக்குக் காரணம்” என்றார்.

இது குறித்து அவரின் பயிற்சியாளர் சரவணன் கூறும்போது, “வர்ஷினிக்கு கடந்த 4 ஆண்டுகளாகப் பயிற்சி வழங்கிவருகிறேன். ஆனாலும் பயிற்சியால் மட்டுமே ஒருவரை வெற்றியடைய வைக்க முடியாது. அவருக்கு ஆரம்பத்திலேயே விளையாட்டில் ஆர்வமும் திறமையும் இருந்தன. அதனைச் சரியான முறையில் பயன்படுத்தியுள்ளோம்.

இதுவரை பெண்கள் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் தேசிய அளவில் வெற்றி பெற்றது கிடையாது என்ற நிலை இருந்தது. பிற மாநிலங்களைச் சேர்ந்த பெண்களே தொடர்ந்து வெற்றி பெற்றுவந்தனர். போதிய பயிற்சி இருந்தால் எங்கிருந்தாலும் தேசிய அளவிலான‌ போட்டியில் சாதிக்கலாம் என வர்ஷினி நிரூபித்துள்ளார்.

கடந்த ஆண்டு அவுரங்காபாதில் நடைபெற்ற பள்ளி அளவிலான போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்றார். தற்போது டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்ற அவர் தேசிய தரவரிசை பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். இன்னும் 2 புள்ளிகளும், சாம்பியன் பட்டமும் பெற்றால் இந்தியா சார்பிலான அணிக்கு விளையாட தகுதியுண்டு. அவர் அந்த நிலையை விரைவில் அடைவார். சர்வதேச அளவிலும் நிச்சயம் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தருவார்!” என்றார் நம்பிக்கையுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x