Last Updated : 14 Oct, 2016 11:25 AM

 

Published : 14 Oct 2016 11:25 AM
Last Updated : 14 Oct 2016 11:25 AM

அலையோடு விளையாடு! 04 - ஜெல்லி மீன்களுக்கு இடையே திகில் அனுபவம்

வெளிநாடுகளில் நான் செய்த பேட்லிங்கில் மறக்க முடியாதது, மலேசியாவில் உள்ள 'லங்காவி'யில் மேற்கொண்டது. இந்தப் பெயர் ரொம்ப பரிச்சயமானது போல இருக்கில்லையா. இது நம்ம இலங்கை தீவைப் போன்ற பெயரைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டம். காவி நிறத்தில் இருக்கும் கழுகைக் குறிக்கும் வகையிலேயே, இந்தத் தீவுக் கூட்டத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஒரு மணி நேரத்தில் இந்தத் தீவுக்குப் போய்விட்டேன். அங்கே போனவுடன் மூன்று நாட்களுக்கு வாடகைக் கார் ஒன்றை எடுத்துக்கொண்டேன். நாமே ஓட்டிக்கொள்ளக்கூடிய வாடகை கார் அது.

478 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவே கொண்ட சிறிய தீவாக லங்காவி இருந்தாலும், தீவின் வடக்கு பகுதியில் ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைகளின் கூட்டம், கிழக்குப் பகுதியில் அடர்த்தியான சதுப்புநில அலையாத்திக் காடுகள், தெற்கு பகுதியில் சமதளமாகத் தீவு - இதுதான் லங்காவியின் நிலஅமைப்பு. இங்கே துறைமுகமும் உண்டு.

புகை மண்டலம் தந்த கவலை

அங்கே இருக்கும் தீவுக் கூட்டங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பேட்லிங் செய்வதே என் திட்டம்; ஆனால் நான் போன நேரம் 'இந்தோனேசியா'வில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அருகே இருக்கும் லங்காவியையும் புகை மண்டலம் சூழ்ந்திருந்தது.

அந்தச் சூழ்நிலை என்னைக் கொஞ்சம் பலவீனப்படுத்தியது. ஏனென்றால், இந்தப் பேட்லிங் பயணம் கடலில் மேற்கொள்ள வேண்டியது என்பது மட்டுமில்லாமல், இரண்டு தீவுகளுக்கு இடையிலான தொலைவு மிக அதிகம் என்பதுதான் என் கவலைக்குக் காரணம். புகை மண்டலத்தால் சூரிய வெளிச்சம் மறைக்கப்பட்டுவிட்டால், பேட்லிங் செய்வது சாத்தியமில்லை. இந்த எண்ணங்கள் என் மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்க, அந்த நாள் கடந்துபோனது.

மறுநாளில் கவலையைத் தள்ளி வைத்துவிட்டு, துடுப்பை வலித்துப் பேட்லிங் பலகையைச் செலுத்த ஆரம்பித்தேன். கடலில் பெரிதாக அலைகள் இல்லாமல், தண்ணீர் குளம் போல் இருந்தது. அலையடித்தால் துடுப்பு போடுவது கஷ்டம். அப்படியில்லாததால் வசதியாக இருந்தது. வானத்து நீல நிறம் கடலில் முகம் பார்க்க, ஆபத்தான உயிரினங்கள் எதுவும் இல்லாத இனிமையான சூழ்நிலையில் முதல் நாள் பேட்லிங்கை வெற்றிகரமாக முடித்தேன்.

நீரில் நட்சத்திரங்கள்

மூன்றாவது நாள் எல்லாமே ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் அதிகாலையிலேயே என் தளவாடங்களோடு பயணத்தைத் தொடங்கினேன். மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆளே இல்லாத ஒரு தீவுக்குச் செல்வதுதான் திட்டம். சீக்கிரமாகப் புறப்பட்டால்தான், அதை அடைவது சாத்தியம்.

துடுப்பு போட ஆரம்பித்துக் கொஞ்சத் தூரமே ஆகியிருந்தது. திடீரெனக் கடலில்தான் போகிறோமா அல்லது வானத்து நட்சத்திரக் கூட்டங்களிடையே நகர்ந்துகொண்டிருக்கிறோமா என்று சந்தேகமாகிவிட்டது.

காரணம், என்னைச் சுற்றிக் கணக்கற்ற சொறி மீன்கள் (ஜெல்லி மீன்) - உலாவிக்கொண்டு இருந்ததுதான். 2 அடி முதல் 30 அடிவரை நீளமுள்ள உணர்கொம்புகளுடன் அவை நீந்திக்கொண்டு இருந்தன.

எங்குக் குப்பை, அசுத்தம் அதிகமாக இருக்குமோ, அங்குச் சொறி மீன் கூட்டம் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் உணர்கொம்புகள் நம் உடல் உறுப்பைச் சுற்றிக்கொண்டால், அதைப் பிய்த்து எடுக்கும்போது ஊசி குத்தும் வலி ஏற்படும். சில நேரம் இதயம் நின்றுவிடும் நிகழ்வுகூட ஏற்படும் சாத்தியம் உண்டு.

கணக்கற்ற வகைகள் கொண்ட சொறி மீன்களில் நஞ்சு உள்ளவையும் நஞ்சு அல்லாதவையும் இருக்கின்றன. நஞ்சு அல்லாதவை நம்மைச் சுற்றினாலும் கொஞ்சம் ஆபத்து உண்டு. அப்படிச் சுற்றும்போது, உணர்கொம்புகளின் மீது வினிகரை ஊற்றினால் வாலை நீக்கிவிடலாம், ஆபத்தில் இருந்தும் தப்பிவிடலாம். சொறி மீன் சற்றே ஆபத்தான உயிரினம். இது பற்றிய செய்திகளை முன்கூட்டியே படித்துத் தெரிந்துகொண்டிருந்ததால், ஒரு லிட்டர் வினிகரை கையோடு எடுத்துச் சென்றிருந்தேன்.

தனியே, தன்னந்தனியே

என் மனம் இதையெல்லாம் அசை போட்டுக்கொண்டிருந்ததில் இருந்து, சட்டென்று நிஜ உலகுக்கு மனதைத் திருப்பித் துடுப்பு போட்டேன். குப்பை, மாசு இருக்கும் இடங்களை எச்சரிக்கையுடன் தவிர்த்துப் பயணத்தைத் தொடர்ந்தேன். சொறி மீன்கள் அதற்குப் பிறகு வரவில்லை.

ஒரு பக்கம் கண்ணால் பார்க்க முடியாத தொலைவுக்குக் கடல், கரைப் பகுதியில் அடர்ந்த காடுகளுடன் கூடிய மலைகள் உயர்ந்தோங்கி நிற்கின்றன, இந்தப் பிரம்மாண்டங்களுக்கு இடையே ஒரு பேட்லிங் பலகை, கையில் துடுப்புடன் தன்னந்தனியாக நான். சொல்லில் எளிதாக வடித்துவிட முடியாத கொஞ்சம் பயம் கலந்த இனிமையான பயணம். இப்படியே சுண்ணாம்புப் பாறைகளால் ஆன மூன்று தீவுகளையும் பார்த்துவிட்டுப் பேட்லிங்கையும் முடிக்க, லங்காவி பேட்லிங் பயணம் இனிதே முடிந்தது.



கழுகு நகரம்?

மலேசியாவின் 'கெடா மாகாணத்தின் அணிகலன்' என்று பெருமையாகக் கருதப்படுகிறது லங்காவி தீவுக் கூட்டம் (இந்தக் கெடா மாகாணம் என்பது வேறொன்றும் இல்லை, சோழர்கள் சென்று வென்று வந்த கடாரம்தான்). அந்தமான் கடற் பகுதியில் 104 தீவுகளைக் கொண்ட லங்காவி தீவுக்கூட்டம் மலேசியாவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தத் தீவுகளைப் பற்றி 15-ம் நூற்றாண்டில்தான் தெரியவந்தது. 16-ம் நூற்றாண்டில் லங்காவி என்ற பெயர் வந்துவிட்டது. லங்கா, லங்க்கா, லன்சுரா, லங்கபுரா போன்ற பெயர்களாலும் இந்தத் தீவுக் கூட்டம் அழைக்கப்பட்டிருக்கிறது.

மலாய் மொழியில் கழுகு, ஹெலங் எனப்படுகிறது. அதில் உள்ள 'லங்' என்ற பின்பகுதியும், நாமக்கட்டியைப் போன்ற ‘காவிக்கல்’ என்ற பெயரில் இருந்து காவி என்ற சொல்லும் வந்தன. இரண்டும் இணைந்து லங்காவி என்ற பெயர் உருவானதாகக் கருதப்படுகிறது. லங்காவியின் சின்னமாகக் குவா நகரில் கழுகு சதுக்கம் என்ற இடம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கே பெரிய செம்பழுப்பு நிறக் கழுகு சிலையொன்றும் வைக்கப்பட்டுள்ளது. லங்காவி என்ற சொல்லுக்கு வடமொழியில் அழகான தீவுக்கூட்டம் என்றொரு அர்த்தமும் உண்டு.

தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x