Published : 07 Jun 2014 12:12 PM
Last Updated : 07 Jun 2014 12:12 PM

விந்தை உலகம்: 96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி

96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி

பல்வேறு காரணங்களுக்காகப் படிப்பைப் பாதியில் நிறுத்திய பலரும் பிறகு சோம்பல்பட்டு அதைத் தொடரவே மாட்டார்கள். சிலர் அரசு வேலையின் பொருட்டுத் தூசி தட்டுவார்கள். இன்னும் சிலர் ஒழுங்காகப் படித்திருந்தும் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பைப் பாதியில் விட்டுவிடுவார்கள். அமெரிக்காவில் வாழும் ஜெசி ஒயிட். இவர் 1939-ல், பிரிட்டனின் இருந்தபோது அங்குள்ள கல்லூரி ஒன்றில் பட்டப் படிப்பை முடித்தார். ஆனால் பட்டத்தைப் பெறுவதற்கான கட்டணத்தைச் செலுத்த முடியாததால் அவரால் பட்டம் வாங்க முடியாமல் போய்விட்டது. காலங்கள் ஓடிவிட்டன. ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல, 75ஆண்டுகள். இப்போது அவருக்குத் திடீரெனப் பட்ட படிப்பைப் பூர்த்திசெய்ய வேண்டும் எனத் தோன்றியுள்ளது. இதை அறிந்த அவரது நண்பர் டோனா கில்பர்ட், கட்டணம் செலுத்தி பட்டம் பெற ஏற்பாடு செய்தார். 75 ஆண்டுகளுக்குப் பிறகு, 96 வயது அமெரிக்கப் பாட்டி பட்டம் பெற்றுள்ளார்.

நாய்க்கு கௌரவம்

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரைச் சேர்ந்த பார்வையற்ற வில்லியம் ஓ டொன்னெல் (31) பிறவியிலேயே பார்வையை இழந்தவர். ஆனாலும் தனது அயராத முயற்சியின் பலனாக மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். இப்போது திறம்பட முடித்துள்ளார். அவர் பட்டப் படிப்பு முடிக்கும் வரையில் அவருக்கு உதவிசெய்வதற்காக அவர் தனது நாயான மார்ஷலையும் கொண்டுசென்றார். மார்ஷலும் டொன்னெலுக்கு காலம் நேரம் பாராமல் உதவிபுரிந்தது. மார்ஷலின் அர்ப்பணிப்பு பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும் கவர்ந்தது. மார்ஷலின் சேவையைக் கெளரவிக்கும் விதத்தில் மார்ஷலுக்கும் பட்டம் வழங்கியுள்ளனர். பட்டம் வாங்கும் முதல் நாய் என்ற பெருமையை இதன் மூலம் மார்ஷல் பெறுகிறது.

சூட்கேஸ் ஸ்கூட்டர்

சூட்கேஸைத் தூக்கிச் செல்ல சிரமமாக இருந்தபோது சூட்கேஸுகளுக்குச் சக்கரங்கள் பொருத்தப்பட்டன. எளிதாக அதை இழுத்துக்கொண்டு செல்ல முடிகிறது. சீனாவைச் சேர்ந்த ஹீ லியாங்கய், இதிலும் புதுமையாக சூட்கேசையே ஓடும் ஸ்கூட்டராக மாற்றிவிட்டார். 7 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டரில் இரண்டு பேர் பயணம் செய்யமுடியும். ஒரு மணி நேரத்திற்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் 20 கிலோமீட்டரை அந்த ஸ்கூட்டர் சென்றடையும். அதுமட்டுமல்ல இடத்தைக் கண்டறிவதற்கான ஜி.பி.எஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. சரி இந்த வண்டி எதில் ஓடுகிறது எனக் கேட்கிறீர்களா? கவலை வேண்டாம் பெட்ரோலில் இல்லை. பேட்டரியால் இயங்கக்கூடிய வகையில் ஹீ இதை வடிமைத்துள்ளார். இதை எளிதாக ரீசார்ஜ் செய்யகொள்ள முடியும். இந்த சூட்கேஸ் ஸ்கூட்டரை உருவாக்க ஹீக்கு 10 வருடங்கள் ஆனதாம்.

கான்ஸ் நாயகன்

வழக்கம்போல் இந்தாண்டும் கான் திரைப்பட கோலாகலத்துடன் நிறைவடைந்துள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்ட உலகின் முன்னணி நடிகர், நடிகைகளும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தனர். இந்தப் பிரபலங்களுக்கு நடுவே ஒரு பிரபலமாக பாடி என்ற புதுமுக நடிகரும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். ‘பெஹர் இஸ்டென்’ படத்தில் நடித்த அவர் விருதையும் தட்டிச் சென்றார். அவர் விருதை வாங்க, கழுத்தில் கறுப்புடை அணிந்து மேடைக்கு வந்த அழகைக் கண்ட பார்வையாளர்களும் உலக சினிமாப் பிரபலங்களும் பெரும் கரவோலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். அவர் வேறு யாருமல்ல லேப் ரடார் இனத்தைச் சேர்ந்த நாய்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x