Published : 11 Mar 2016 12:23 PM
Last Updated : 11 Mar 2016 12:23 PM

கைபேசியைக் கீழே வையுங்கள், பயத்தை நேருக்கு நேர் சந்தியுங்கள்!

ரயிலில் ஒரு சாண்ட்விச் வாங்கும்போது சொல்ல முடியாத அளவுக்குப் பதற்றம் ஏற்பட்டது. தடுமாறினேன், துழாவினேன். எனக்குப் பின்னால் நின்றவர்கள் என்னால் சற்றே பொறுமை இழந்துபோனார்கள். என் நெற்றியில் வியர்த்து வடிந்தது. கழுத்து, முதுகு, கக்கம், கைகள், கால்கள், தாடை என்று உடல் முழுதும் வேர்த்து வடிந்தது.

சாதாரண வெப்பநிலைதான் அங்கே இருந்தது என்பதால் இவ்வளவு வியர்வைக்கு எந்தக் காரணமும் இல்லை. ரயிலும் நிதானமாகவே சென்றுகொண்டிருந்ததால் என் தடுமாற்றத்துக்கும், கால்களின் நடுக்கத்துக்கும் எந்தக் காரணமும் இல்லை. அதே போல் தலைசுற்றலுக்கும் எந்த அவசியமுமில்லை. குறுகலான குகை வழியேயும் ரயில் சென்றுகொண்டிருக்கவில்லை. கைகளில் எந்தக் குடைச்சலும் இல்லை.

எனக்குப் பசியும் இல்லை என்பதால் சாண்ட்விச் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. இப்படியாக எந்தக் காரணமும் இல்லாமல் எனக்கு எல்லாமும் நடந்துகொண்டிருந்தது. ஏனென்றால், எனக்கு ‘பீதித் தாக்குதல்’ (Panic attack) ஏற்பட்டிருக்கிறது; அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ செய்துகொண்டிருந்தேன். (இனம்புரியாத பதற்றமும் பீதியும் திடீரென்று உச்சத்துக்கு சென்று, நம்மை நிலைகுலைய வைப்பதற்கு ‘பீதித் தாக்குதல்’ என்று பெயர்).

எப்போதும் உள்ள பதற்றம்தான். சில வாரங்களாக மேலும் அதிகரித்துக்கொண்டிருந்தது. ‘இந்த இடத்தில் போயா நான் பீதித் தாக்குதலுக்கு உள்ளாவது’ என்று ரயில் புறப்பட்ட அடுத்த நொடியே நான் நினைத்துப் பார்த்தேன். ஆனால், எனது மூளையோ, “எந்த இடத்தையும் விட மோசமான இடம் இல்லை இது; அதேபோல் பீதித் தாக்குதல் உள்ளாவதற்கு எந்த நியாயமும் இல்லை” என்று சொன்னது. ஆனால், எந்த சமாதானத்தையும் காரணத்தையும் ஏற்றுக்கொள்ளாத எனது மனதின் இன்னொரு பக்கம் போட்ட சத்தத்தால் எனது அறிவு அடங்கிப்போனது. எனது உடல் முழுவதும் ‘அட்ரீனலின்', ‘விர்'ரென்று ஏறியது.

ரயிலில் உள்ள உணவு விற்பனைப் பிரிவுக்குப் போனதும் கூட ஒரு தப்பித்தல் முயற்சியாகத்தான். என்னிடமிருந்தே தப்பிப்பதற்கு, எனது எண்ணங்களிடமிருந்து, என்னுடைய மனதிடமிருந்தே தப்பிக்கும் முயற்சிதான் அது. மூச்சுப் பயிற்சி, மனஅமைதிக்கான ‘சிடி' உபன்யாசங்கள் போன்ற வழிமுறைகளெல்லாம் எனக்கு எப்போதும் பயனளித்ததே இல்லை. என்ன செய்தாலும் எனது கவனத்தை ஒருமுகப்படுத்த முடியவே இல்லை.

ஆனால், மற்றவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதால் ஒரு ஆறுதல் கிடைக்கும். ஆகவே, புன்சிரிப்புடன் தோன்றக்கூடிய அந்நியரின் பார்வை ஏதும் எனக்குக் கிடைக்குமா என்று தேடினேன். நட்போடு சிரிக்கக்கூடிய நடுத்தர வயதுப் பெண் என்றால் நல்லது. நாம் இருக்கும் பதற்ற நிலையில் அப்படிப்பட்ட பெண்ணைப் பார்க்கும்போது ஒரு தாயைப் பார்க்கும் உணர்வு கிடைக்கும். ஒரு முதியவரின் புன்னகை நமக்கு நமது தாத்தாவை நினைவுபடுத்தக்கூடும். ஒரு கவர்ச்சிகரமான நபரைப் பார்ப்பதையே நான் அதிகம் விரும்புவேன். யாரையெல்லாம் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளலாம்! ஆனால், எல்லோரும் கீழே குனிந்துகொண்டல்லவா இருந்தார்கள்.

தங்கள் கைபேசியையோ, மடிக்கணினித் திரையையோ, டேப்லெட்களையோதான் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த 'ஸ்பிரெட்ஷீட்'கள், ஃபேஸ்புக் போன்றவற்றின் பிம்பங்கள் அவர்களது நெற்றியில் பிரதிபலித்தன. எல்லோருடைய முகங்களும் நீல நிறத்திலோ சாம்பல் நிறத்திலோதான் தெரிந்தன. எனக்குத் தலைசுற்ற ஆரம்பித்தது. எல்லாமே சாம்பல் நிறத்திலும் நிறமற்றதாகவும் தோன்ற ஆரம்பித்தன. எனக்கு நிலைதடுமாறியது. ஆதரவாக யாரும் இல்லாமலும் பற்றிக்கொள்ள ஏதும் இல்லாமலும் நான் மிதந்துகொண்டிருந்தேன்.

என் இருக்கைக்கு மீண்டும் வந்து அமர்ந்தேன். இனிமேல் என்னால் இயல்பாக இருக்க முடியாது என்ற சிந்தனை மட்டுமே எனக்கு ஏற்பட்டது. மனநல மருத்துவமனையில் கட்டிலில் சுருட்டிக்கொண்டு அடக்கமாகப் படுத்துக்கொள்ள விரும்பினேன். மருந்துகளைக் கொடுத்துவிட்டு, எல்லாம் சரியாகிவிடும் என்று யாராவது சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். நம்பிக்கை தரும் மனிதத் தொடர்பு ஒன்றுக்காக இறுதியாக ஒருமுறை சுற்றிலும் பார்த்தேன். ஏதுமில்லை. எனது இறுதிப் புகலிடமான எனது கைபேசியை வெளியில் எடுத்தேன். அடுத்த 50 நிமிடங்களை இன்ஸ்டாகிராம், டுவோலிங்கோ, ஸ்னாப்சாட், டிண்டர், ஃபேஸ்புக், யூடியூப் ஆகியவற்றில் சஞ்சரித்தேன். இப்படியாக, கணக்கற்ற இணையதளங்கள், கணக்கற்ற யூடியூப் வீடியோக்கள்…

பதற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் செய்யக்கூடிய மிக மோசமான செயல், ‘தவிர்த்தல்’தான். நமக்கு பதற்றத்தைத் தரக்கூடிய விஷயங்களையும் சூழல்களையும் நாம் எந்த அளவுக்குத் தவிர்க்கிறோமோ அந்த அளவுக்கு பதற்றம் நமக்கு அதிகரிக்கும். நமக்குப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல்களும் கூடிய விரைவில் அதிகரிக்கும். வாழ்க்கை மிகமிகக் குறுகியதாகவும் இந்த உலகமே மிகவும் அச்சுறுத்தும் விஷயங்கள் நிறைந்த ஒரு இடமாகவும் ஆகிவிடும்.

நம் சட்டைப் பைக்குள்தான் ஒரு சாதனம் இருக்கிறதே. எல்லா சமயங்களிலும் எல்லாவற்றையும் நாம் தவிர்த்துவிட்டுப் போவதற்கு அந்த சாதனம்தான் நமக்கு உதவுகிறதே. மனப்பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு சாதனம் என்றுதான் ஆரம்பத்தில் நான் நினைத்தேன். ஆனால், நமது கைபேசி நமது பிரச்சினையைத் தீவிரப்படுத்திவிடுகிறது என்பதை விரைவிலேயே கண்டறிந்தேன். அது நமது சுயமதிப்பைக் குறைத்து, பயங்களை அதிகரித்து, வாழ்க்கையை மிகவும் குறுக்கி, முடிவே இல்லாமல் இணையத்தில் தேடிக்கொண்டிருக்கச் செய்துவிடுகிறது.

சமூக ஊடகங்களால் மனநலனில் ஏற்படும் பாதிப்பைப் பற்றிய நிறைய ஆய்வுகள் வந்துவிட்டன. மனஅழுத்தத்தின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வரும் காலம் இது. 35 வயதுக்குட்பட்டோரின் மரணங்களில் தற்கொலைதான் முதலிடம் வகிக்கிறது என்பதை மேற்கண்ட பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். ஆகவேதான், நமது யுகம் ‘மனப்பதற்றத்தின் யுகம்’ என்று அழைக்கப்படுகிறது. இரவில் வெகு நேரம் உங்களைக் கண்விழிக்க வைக்கும் கணினியின் பிரகாசமான ஒளி என்பது நாம் புரிந்துகொண்டிருப்பதை விட மிகவும் சிக்கலானது. ஆனால், நமது பிரச்சினையிலிருந்து நம்மை விடுவிடுப்பது கணினித் திரையால் முடியவே முடியாது.

நீரில் வட்டமடித்து நீந்தும் வாத்துக்கள் வீடியோவை எனது கைபேசியில் பார்க்க ஆரம்பித்தேன். பீதியின் இடத்தையும் பயத்தின் இடத்தையும், இப்போது ஒருவிதப் பதற்றமும் சுயவெறுப்பும் எடுத்துக்கொண்டன. இந்த பூமியில் நான் இருக்கப்போவதே மிகச் சிறிய கால அளவு! அந்தக் கால அளவுக்குள் ஒரு ஒன்றரை மணி நேரத்தை எனது வாழ்க்கையைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் பரிதவிப்புடன் செலவிட முயன்றேன். வாழ்க்கையைத் தவிர்ப்பதற்காக நான் செய்ததெல்லாம் என் கைபேசித் திரையில் வட்டமடித்துக்கொண்டிருந்த வாத்துக்களை வெறுமனே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்ததுதான். அடக் கடவுளே!

எனது ஹெட்போனை எடுத்துவிட்டுக் கைபேசியைத் தள்ளிவைத்தேன். எனது இருக்கையில் முட்டி போட்டபடி அந்த பெட்டியில் உட்கார்ந்தவர்களைப் பார்த்தேன். யாரும் என்னை ஏறிட்டுப் பார்க்கவில்லை. எல்லோரும் தங்கள் சாதனங்களின் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எதிலிருந்து தப்பிக்க அவர்கள் இப்படிச் செய்துகொண்டிருக்கிறார்கள்?

நாம் அனைவரும் இணையத்தை ஒரு தப்பித்தலுக்காகவே பயன்படுத்துகிறோம். இணையத்திடம் அடிபணிய நாமெல்லோரும் ஏதாவது காரணம் வைத்திருக்கிறோம். மன அழுத்தம், பதற்றம், சலிப்பு என்று ஏதேதோ காரணங்கள். இணையம் என்பது எப்போதும் நம் விரல் நுனியில் இருப்பதால் நமது பலவீனமான தருணங்களுக்காக அது எப்போதும் காத்திருக்கிறது. அமைதியையும் சலிப்பையும் கண்டு மட்டுமல்ல, நமது சொந்த எண்ணங்களை எதிர்கொள்வதற்கும்கூட நாமெல்லோரும் அஞ்சுகிறோம்.

மனப்பதற்றப் பிரச்சினை உள்ளவர்கள் மட்டுமல்ல, ரயிலில் உள்ளவர்களும், ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்க முடியாதவர்களாகிய எல்லோருமே அப்படித்தான். அப்படி வேடிக்கை பார்த்தால் ஏதாவது துயரமான, அசௌகரியமான உணர்வுகள் ஏற்படும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

நாம் எல்லோரும் சாதாரண வகைக் கைபேசிகளுக்கும் மேசைக் கணினிகளுக்கும் மாற வேண்டும் என்று நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். நான் சொல்வதே வேறு. நமது மன உளைச்சலைத் தவிர்ப்பதற்காக இணையத்தை நோக்கிச் செல்வதென்பது மேலும் மேலும் நமக்குள் பீதியை வளர்க்கத்தான் செய்யும்; மன அழுத்தத்தைத் தவிர்க்க நினைத்தால் நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் அதிகரிக்கும்; சலிப்பைத் தவிர்க்க நினைப்பதால் நமக்குச் சலிப்பூட்டும் விஷயங்கள் அதிகரிக்கும். இதையெல்லாம் நாம் உணர வேண்டும் என்பதைத்தான் நான் சொல்கிறேன். நமது பயத்துக்கும் நமக்குமிடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்திக்கொள்வதில் நாம் பெரும் வித்தகர்களாக ஆகிவிட்டோம். யதார்த்தத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று எப்போதும் ஏங்கிக்கொண்டே இருப்பதால் பிரச்சினைகளின் தீவிரம் அதிகரிப்பது மட்டுமல்ல, பிரச்சினைகளைப் புதிதாக உண்டுபண்ணவும் கூடும். நமது சுயமதிப்பையும் தூக்கத்தையும் காலிசெய்துவிடுவது மட்டுமல்லாமல் இந்த உலகத்தையும் வாழ்க்கையையும் அதன் யதார்த்தத்தையும் எதிர்கொள்ளும் திறனை நமக்கு இல்லாமல் ஆக்கிவிடும்.

பீதித் தாக்குதலிலிருந்து நான் விடுபட்டபோது எனக்கு நானே ஒன்று சொல்லிக்கொண்டேன்: ‘அடுத்த முறை இப்படி நிகழ்ந்தால் எனது கைபேசியை வெளியில் எடுக்க மாட்டேன். அமைதியாக உட்கார்ந்தபடி எனது பயத்தை எதிர்கொள்வேன். எனது அறிவைக் கொண்டு அதை அடித்துக் கீழே சாய்ப்பேன்.’

நான் இறங்குமிடம் வந்தது. இறங்குவதற்கு முன்பு பெட்டியில் இருந்த எல்லோரையும் பார்த்தேன். ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரும் தங்கள் சாதனங்களின் திரைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

©தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x