Published : 05 Feb 2016 01:15 PM
Last Updated : 05 Feb 2016 01:15 PM

ஏ சண்டைக்காரி..!

இந்தியத் திரையுலகைத் தனது நடிப்பால் கட்டிப் போட்டிருப்பவர் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனையான இவர், தனக்குக் கிடைத்த‌ முதல் சினிமா வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்தி இருக்கிறார். 'இறுதிச்சுற்று' படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பால் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தவரிடம் பேசியதில் இருந்து...

உங்க ஃபேமிலி பத்தி சொல்லுங்க?

என் அம்மா டீச்சர், என் அப்பா ஒரு கம்பெனியில அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீசர். என் அண்ணன்/தம்பி ஒரு ஸ்போர்ட்ஸ்மேன். நான் படிப்புல கெட்டிக்காரி. ஸ்கூல், காலேஜ்ல எல்லாம் 'பெஸ்ட் ஸ்டூடன்ட்'னு அவார்ட் வாங்கியிருக்கேன். ஸ்போர்ட்ஸ்லயும் சாம்பியன் நான். 3 வயசுல இருந்தே கராத்தே கத்துக்க‌ ஆரம்பிச்சேன். இப்போ கிக் பாக்ஸிங் போட்டிகள்ல‌ கலந்துக்குறேன்.

‘இறுதிச்சுற்று' வாய்ப்பு எப்படி கிடைச்சுது?

சினிமாவில் நடிப்பேன் என நான் ஒருநாளும் நினைச்சுப் பார்க்கலை. நேஷனல் லெவல்ல‌ நடந்த கிக் பாக்ஸிங் போட்டியில‌ பங்கேற்க முடியாமல் போயிருந்த சமயம். வேதனையில் ரொம்பவும் சோர்ந்து போயிருந்தேன். அப்போ ஒரு நாள் திடீர்னு எனக்கு ஆக்டர் மாதவன்கிட்ட இருந்து போன். ''இறுதிச்சுற்று' படத்தில் நடிக்கிறீங்களா'ன்னு கேட்டார். என்னால அதை இப்ப வரைக்கும் நம்பவே முடியலை. எல்லாம் கடவுள் கருணைனு நம்புறேன்.

உங்களை இந்த ரோலுக்கு எப்படி மாதவன் ‘டிக்' அடிச்சார்னு அவர்கிட்ட‌ கேட்டீங்களா?

கிக் பாக்ஸிங் போட்டி சம்பந்தமா என்னோட‌ போஸ்டர் ஒன்னைப் பார்த்திருக்கிறார். பாக்ஸிங் டிரஸ்ல‌ என் போஸ்டரைப் பார்த்ததுக்கு அப்புறம்தான் அவர் எனக்கு போன் பண்ணியிருக்கார்.

படத்துல ரொம்பவும் ஆக்ரோஷமா நடிச்சிருக்கீங்க‌. உண்மையில நீங்க அப்படித்தானா?

யார் சொன்னது? நான் ரொம்பவும் ஸ்வீட் கேர்ள். எனக்கு கோபமே வராது. எல்லோருடனும் சகஜமா பழகுவேன். போட்டிகள்ல மட்டும்தான் கொஞ்சம் ‘ஃபியர்ஸ்' ஆக இருப்பேன். மத்தபடி நான் லவ்லி பேபி!

முதல் படமே பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட். எப்படி ஃபீல் பண்ணுறீங்க?

ரொம்ப சந்தோஷம். இந்த வெற்றியால நான் மட்டுமல்ல, என் குடும்பமும் பெருமையா நினைக்கிறாங்க. உலக அளவுல இந்தப் படத்துக்குக் கிடைச்சிருக்கிற‌ வரவேற்பு நெகிழ வைக்குது. இதுல நடிச்சதுக்காக எனக்கு தேசிய விருது கிடைக்கும்னு எல்லாம் நான் நினைச்சுப் பார்க்கலை. ஆனா ஒரு நல்ல நடிகைனு மக்கள் தந்திருக்கும் அங்கீகாரமே போதும்.

நிறைய கேம்ஸ்ல இந்தக் குற்றச்சாட்டை நாங்க கேள்விப்படுறோம். நீங்க சொல்லுங்க... பாக்ஸிங் விளையாட்டுல‌ பாலியல் துன்புறுத்தல் இருக்கா?

‘செக்ஷுவல் அப்யூஸ்' எங்க‌தான் இல்லை. எல்லா ஃபீல்ட்டுலயும் அது இருக்கு! புதுசா என்னத்தைச் சொல்ல?

மேரி கோம் பற்றி...

மேரி கோம் அனைவருக்கும் உந்து சக்தியா இருக்கக் கூடிய வீராங்கனை. திருமணம் ஒரு பெண்ணின் வெற்றிப் பயணதுக்குத் தடைக் கல்லா இருக்காதுங்கிறதுக்கு அவரை விட ஒரு சிறந்த உதாரணம் இருக்கவே முடியாது.

அடுத்த ப்ளான்..?

தெரியலை. பாக்ஸிங் போட்டிகள்ல‌ நிச்சயமா என்னைப் பார்க்கலாம். சினிமாவுல அடுத்து எப்போ என்னைப் பார்க்கலாம்ங்கிறது கடவுளுக்குத்தான் தெரியும். ஆனா நடிப்பும் ஜாலியா, அதே சமயம் சவாலாவும் இருக்கு.

சிரித்துக்கொண்டே அவர் பார்த்த பார்வையில் நாம் ‘நாக் அவுட்'!

படம்: பாலாஜி ஹரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x