Last Updated : 09 Oct, 2015 11:18 AM

 

Published : 09 Oct 2015 11:18 AM
Last Updated : 09 Oct 2015 11:18 AM

கடல்காகங்களும் முப்பது கேமராக்களும்

கோடியக்கரை!

தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ஒரு ஊர். இங்கு ஒவ்வொரு வருடமும் உலகின் பல மூலைகளில் இருந்து பல விதமான பறவைகள் வலசை வருகின்றன.

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?

இந்தப் பறவைகளைக் காண இந்தியாவின் பல மூலை முடுக்குகளிலிருந்து இளைஞர்கள் பலர் வருகின்றனர் என்பதுதான் இதில் விசேஷம்.

இந்தியாவில் பறவை ஆராய்ச்சிகளுக்கென்று புகழ்பெற்ற மையம் மும்பையில் இருக்கும் ‘பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகம்' (பி.என்.ஹெச்.எஸ்) இது 1883-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

உலகறிந்த பறவையியலாளர் சலீம் அலி போன்றவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த அமைப்பு, கடந்த மாதம் 15-ம் தேதி தன‌து 132வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறது.

இந்த அமைப்பின் கிளை ஒன்று நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் உள்ளது. ஆய்வுகளுக்காகப் பறவைகளுக்கு வளையம் இடும் அதிகாரம், இந்தியாவிலேயே இந்தக் கிளை அமைப்புக்கு மட்டுமே உண்டு.

இந்தக் கிளை அமைப்புக்கு ‘பாம்பே இயற்கை வரலாற்றுக் கழக பறவை வலசை ஆய்வு மையம்' என்று பெயர். இதன் தலைவராகப் பறவையியலாளர் முனைவர் எஸ்.பாலச்சந்திரன் செயல்பட்டுவருகிறார். பறவைகளுக்கு வளையமிட்டு, அவற்றைத் தொடர்ந்து ஆய்வுகளுக்கு உட்படுத்திவரும் ஒரே இந்திய பறவையியலாளர் இவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் சரி. இளைஞர்களுக்கும் இந்த மையத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? சம்பந்தம் உண்டு.

பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகத்தில் பறவைகளைப் பற்றி அடிப்படையான சில விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கு ஒரு வருட ஆன்லைன் படிப்பு ஒன்று நடத்தப்படுகிறது. அந்தப் படிப்பின் ஒரு பகுதியாக இந்த மையத்துக்குக் கள ஆய்வுக்கு இளைஞர்கள் வருகை தருவார்கள்.

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மூன்றாம் அல்லது நான்காம் வாரத்தில் இந்த கள ஆய்வு நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதே அக்டோபர் 2-ம் தேதி முதல் 8ம் தேதி வரை வருடந்தோறும் ‘தேசிய வனவிலங்கு வார விழா' நாடு முழுக்க கொண்டாடப்படுவது நினைவுகூரத்தக்கது. கழகத்தின் 132-வது ஆண்டு விழா, வனவிலங்கு வார விழா ஆகியவற்றுடன் இந்த கள ஆய்வும் நடைபெற்றதால், இந்த ஆண்டு முகாம் மிகவும் சிறப்புக்குரியதாக இருந்ததாக இதில் பங்கேற்ற இளைஞர்கள் தெரிவித்தனர்.

இதே அக்டோபர் 2-ம் தேதி முதல் 8ம் தேதி வரை வருடந்தோறும் ‘தேசிய வனவிலங்கு வார விழா' நாடு முழுக்க கொண்டாடப்படுவது நினைவுகூரத்தக்கது. கழகத்தின் 132-வது ஆண்டு விழா, வனவிலங்கு வார விழா ஆகியவற்றுடன் இந்த கள ஆய்வும் நடைபெற்றதால், இந்த ஆண்டு முகாம் மிகவும் சிறப்புக்குரியதாக இருந்ததாக இதில் பங்கேற்ற இளைஞர்கள் தெரிவித்தனர்.

இந்த வருடம் இந்தக் கள ஆய்வில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 30 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் இளைஞர்களாவர். இந்தக் கள ஆய்வை மேலும் சிறப்பாக்கியது கூரலகு கடல்காகங்களின் கூட்டம்.

"ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் மூன்றாம் அல்லது நான்காம் வாரத்தில்தான் வலசைப் பறவைகள் இந்தப் பகுதியில் அதிக அளவில் தென்படும். அவற்றில் மென்னலகு கடற்புறாக்களின் (ஸ்லெண்டர் பில்ட் கல்ஸ்) எண்ணிக்கையும் குறைவாகத்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், இந்தப் பகுதியில் அவற்றைக் காண்பதே அரிதாக இருக்கும்.

ஆனால், இந்த வருடம் அக்டோபர் முதல் வாரத்திலேயே பறவைகள் வலசை வரத் தொடங்கியிருக்கின்றன. மேலும், கூரலகு கடல்காகங்களும் அதிக அளவில் தென்படுகின்றன" என்றார் பாலச்சந்திரன்.

இந்தக் கள ஆய்வின்போது பறவைகளைக் கையாள்வது, பறவைகளுக்கு வளையமிடுவது, பறவைகள் கணக்கெடுப்பு, பறவைகளை ஒளிப்படங்கள் எடுப்பது உள்ளிட்ட பல துறைகளில் இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.

இந்த முகாம் குறித்து பி.என்.ஹெச்.எஸ். கல்வி மற்றும் மக்கள் தொடர்பியல் துறை உதவி இயக்குநர் அதுல் சாத்தே கூறும்போது, “பி.என்.ஹெச்.எஸ். அமைப்பானது ஆய்வு, இயற்கைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கல்வி என மூன்று தடங்களில் பயணிக்கிறது. ஆய்வின் மூலம் கிடைக்கும் தகவல்களை சாதாரண மனிதகர்களும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இந்த இணைய வழி பறவையியல் பாடத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள முக்கியமான பறவையியல் வாழிடங்களைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைய இளைஞர்கள்தான் நாளைய தலைவர்கள் என்பதால், இந்தப் பாடத் திட்டங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிகள் மேற்கொள்கிறோம்" என்றார்.

பறவைகளுக்கு வளையமிடுவது ஏன்?

உலகில் பலவிதமான பறவை இனங்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை வலசை செல்லும் வழக்கம் உடையவை. பறவைகளுக்கு வளையமிடும்போது, அந்தப் பறவை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு வலசை செல்லும்போது, இது எந்த நாட்டுப் பறவை, அதன் குணாதிசயங்கள் என்ன, அவற்றின் வாழிடங்கள் என்ன, அவை எந்த வழியில் வலசை மேற்கொள்கின்றன என்பன உள்ளிட்ட பல விவரங்கள் தெரியவரும்.

அந்த தகவல்களைக் கொண்டு அந்த பறவைகள் வலசை வரும் இடங்களையும், பாதைகளையும் நம்மால் பாதுகாக்க முடியும். அவற்றைப் பாதுகாப்பதன் மூலம் நாம் பறவைகளையும் பாதுகாக்க முடியும்.

படங்கள்: ந.வினோத்குமார், வினோத்வேணுகோபாலன், அருண்வர்கீஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x