Last Updated : 16 Oct, 2015 12:28 PM

 

Published : 16 Oct 2015 12:28 PM
Last Updated : 16 Oct 2015 12:28 PM

டைம்லெஸ் டெரக்கோட்டா... செம அப்டேட்டா..!

கைகளில் வண்ணத்தை அப்பிக்கொண்டு ஓவியங்கள் வரைந்த காலம் போய், இப்போது கையில் துளி அழுக்குப் படாமல் கணினியில் 'பெயின்ட்' செய்யும் வசதி வந்துவிட்டது. வசதி வந்ததென்னவோ சரிதான். ஆனால் அதில் கலையம்சம் இருக்கிறதா என்பது பெரும் கேள்வியே!

இந்நிலையில்தான், சென்னை கிறிஸ்தவ கல்லூரி இறுதி ஆண்டு இதழியல் துறை பயிலும் மாணவர்கள் ‘டிண்ட் அண்ட் டேல்ஸ்’ என்ற தலைப்பில் மூன்று நாட்களுக்கு 'கலைகளின் மறுமலர்ச்சி' பற்றிய‌ கலைந்துரையாடல்களை நடத்தினர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக டெரக்கோட்டா சிற்பங்கள் மற்றும் பொம்மைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன‌.

டெரக்கோட்டா என்று அழைக்கப் படும் சுடுமண் சிற்பக் கலை மொஹஞ்சதாரோ, ஹராப்பா காலங் களில் இருந்து வழக்கத்தில் உள்ளது. காலப்போக்கில் டெரக்கோட்டாவைக் கொண்டு ஃபேஷன் நகைகள் தயாரிப்பது பிரபலமாகிவிட்டது.

முன்வர வேண்டும்

"மண் சிற்பங்கள், டெரக்கோட்டா வேலைபாடுகள் செய்வது, அவற்றைக் கையாளும் முறைகள் எனத் தெரிந்து கொள்ள பல விஷயங்கள் உள்ளன‌. டெரக்கோட்டா மூலம் அழகான பல பொருட்களைச் செய்யலாம்.

பானைகள், பொம்மைகள், சிற்பங்கள் மட்டுமல்லாமல் வீட்டு அலங்காரப் பொருட்கள், இளைஞர்கள் விருப்பத்துக்கு ஏற்ற‌ நகைகள், போட்டோ ஃபிரேம்கள் எனப் பலவிதங்களில் இந்தக் கலையை 'அப்டேட்' செய்யலாம். அவற்றுக்கு அழகான வண்ணங்கள் தீட்டி விற்பனை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். மக்களும் டெரக்கோட்டா பொருட்களை வாங்க விருப்பம் காட்டுகின்றனர். ஆனால், அக்கலையை கற்றுக்கொள்ள இளைஞர்களிடையே ஆர்வம் குறைவாக உள்ளது” என்கிறார் மாணவி நிஷித்தா.

காலத்துக்குப் பேசும்

"நுண்கலை பயிலும் மாணவர்கள், டெரக்கோட்டா சிற்பம் செய்வோர் போன்றோருக்கு வேலைவாய்ப்பு இல்லை என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால், கலைப் பணிகளைப்போல வேறு எந்தத் துறையிலும் ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்ய முடியாது.

கலைத் துறையில் சாதிப்பது கடினமே. பேரார்வமும் முயற்சியும் இருந்தால் நம் வேலைப்பாடுகளும் கைவினைப் பொருட்களும் காலத்துக்கும் பேசும். அதேநேரம் பணம் பார்க்கும் எண்ணம் சிற்பக் கலைஞர்களிடம் இருக்க கூடாது” என்கிறார் கிறிஸ்தவ கல்லூரி நுண்கலை மாணவி திவ்யா.

களத்துல இறங்குங்க

வேலைப்பாடுகள் கொண்ட டெரகோட்டா சிற்பங்களை நுண்கலை மாணவர்கள் செய்வதைப் பார்த்து பல மாணவர்கள் ஆச்சரியமாக பிரமித்தனர்.

"பழங்காலத்தில் இருந்த பல கலைகளை நாம் மறந்து வருகிறோம். அவற்றுக்கு மறுமலர்ச்சி தரும் நோக்கத்திலும், அவற்றைப் பாதுகாப்பதில் இக்கால மானவர்களுக்குப் பெரும் பங்கு இருப்பதை உணர்த்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் பல மாணவ, மாணவிகள் டெரக்கோட்டா சிற்பங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். நம் கலைகளின் வரலாற்றை அறிந்து வியந்தனர்” என்கிறார் இதழியல் துறை மாணவியான சாய் தீப்தி.

உங்களுக்கும் டெரக்கோட்டா சிற்பம் செய்ய ஆசையா இருக்கா. அப்ப 'டெரக்கோட்டா சிற்பங்கள் செய்வது எப்படி?'னு கூகுள்ல தேடிட்டு இருக்காதீங்க. முதல்ல களத்துல இறங்குங்க!

"கால்பந்தாட்டக் குடும்பம்தான் உலகிலேயே மிகப்பெரிய குடும்பம்!" பீலே, முன்னாள் கால்பந்தாட்ட வீரர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x