Published : 23 Oct 2015 12:09 PM
Last Updated : 23 Oct 2015 12:09 PM

ஐ.டி. உலகம் 20: 30-களில் வேலை காலி?

எல்லாத் துறைகளிலும் அனுபவம் கூடக்கூடப் பொறுப்புகளும் பதவிகளும் கூடும். ஆனால், ஐ.டி. துறையில் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க ஊழியர்களிடம் பதற்றமும் குழப்பங்களும் அதிகரிக்கின்றன‌. 30-களின் மத்தியைத் தாண்டிய பலருக்கு எப்போது வேண்டுமானாலும் வேலை போகலாம் என்பதுதான் இதற்கு காரணம்.

இந்தியாவில் ஐ.டி. துறை வளர்ச்சி என்பது 2000 முதல் 2008-ம் ஆண்டுவரை உச்சத்தில் இருந்தது. அப்போதெல்லாம் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் கூட நல்ல சம்பளத்தைப் பெற்றனர். இதையடுத்தே கணினி தொடர்பான அறிவியல் மற்றும் பொறியியல் பாடங்கள் பிரபலமாகின.

இன்றைக்கு ஐ.டி. துறை அடைந்துள்ள வளர்ச்சிக்கு அன்றைக்கு உழைத்த ஊழியர்கள் பலரின் அர்ப்பணிப்பும் ஒரு காரணம். ஆனால் 2000-ல் பணி செய்த பலர், இன்றைக்கு ஐ.டி. வேலையில் இருக்கிறார்களா என்றால், அதுதான் இல்லை.

‘இந்திய ஐ.டி. நிறுவனங்கள், கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யக் காரணமாக இருந்தவர்களில் பலர், இன்றைக்கு மார்க்கெட்டிங்கிலும், சுய தொழில் செய்தும் வாழ்க்கையை நடத்துகின்றனர்' என்கிறார் அறிவுசார் பணியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சீத்தாராமன்.

இதற்கெல்லாம் ஒரே காரணம் வயதுதானாம். 2008-க்கு முன் வேலைக்கு சேர்ந்த பலர் லட்சங்களிலோ அல்லது அதற்கு நிகரான சம்பளத்தையோ வாங்கினார்கள். அவர்களைத்தான் முதலில் குறி வைக்கின்றன நிறுவனங்கள்.

அப்படி என்னதான் நடந்தது? கிண்டியைச் சேர்ந்த சரவண குமார் என்னும் முன்னாள் ஐ.டி. நிறுவன ஊழியரிடம் பேசினோம். "எனது 25-வயதில் ரூ.10 ஆயிரம் சம்பளத்துக்கு ஒரு சிறு ஐ.டி. நிறுவனத்தில் 2002-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தேன். அடுத்த சில ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது.

என்னுடைய கடின‌ உழைப்பின் காரணமாக ஐந்து வருடத்தில் டீம் லீடராக ஆனேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் புராஜக்ட், பிஸினஸ் மீட், ஆஃப்ஸைட் என்று பிஸியானது என‌து வாழ்க்கை. பல நாடுகளுக்குப் பறந்தேன். எனது இரு தங்கைகளுக்குத் திருமணம், ஊரில் சொந்தமாக ஒரு வீடு, எனது திருமணம், பள்ளிக்கரணை அருகே வங்கிக் கடன் உதவியோடு ஃபிளாட் என எல்லாம் நன்றாகப் போனது.

ஆனால், 2008-ம் ஆண்டில் உலகம் முழுக்க‌ப் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அப்போது கொத்துக் கொத்தாக வெளியேற்றப்பட்ட ஊழியர்களில் நானும் ஒருவன் என்பது எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

சரி, அனுபவத்தை வைத்து வேறு நிறுவனங்களில் வேலை செய்யலாம் என்று முயற்சித்தபோது, வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தது. ‘ஓவர் குவாலிஃபிகேஷன்' என்று நிறுவனங்கள் என்னை ஒதுக்கின.

அப்படியும், போராடி வேலை கிடைத்தபோது, மீண்டும் பூஜ்யத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டிய சூழல் வரவே, அதை உதறிவிட்டு இப்போது சொந்தமாகத் தொழில் செய்துவருகிறேன். எனது மனைவி அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிக்குச் செல்கிறார். குழந்தைகளையும் அரசுப் பள்ளிக்கு மாற்றலாமா என யோசித்துவருகிறேன்" என்றார் அவர்.

சரவண குமாரைப் போலவே, புழுதிவாக்கம் செந்திலும் வயதின் காரணத்தால் வேலையை இழந்துள்ளார். அவர் கூறும்போது, “ஓ.எம்.ஆரில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் 8 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்துவந்தேன். ஒரு நாள் காலை 8 மணிக்கெல்லாம் மீட்டிங் என்றார்கள். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றேன்.

போகிற வழியில் ஒரு சிறு விபத்து. என் காலில் காயம். சிகிச்சைக்காக விடுப்பு கேட்டேன். ஒரே அடியாக அனுப்பிவிட்டார்கள். என்னை வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள் என்பது பிறகுதான் எனக்குப் புரிந்தது. ஏனென்றால் நான் 38-வயதை கடந்திருந்தேன்" என்றார்.

சீனியர் ஒருவர் வாங்குகிற சம்பளத்தைக் குறைந்தபட்சம் 4 ஜுனியர்களுக்குப் பிரித்துக் கொடுத்து அதிக வேலை வாங்கலாம் என்ற கணக்கு தான் அனுபவமிக்கவர்களை வேலையிலிருந்து தூக்குவதன் பின்னணியாக உள்ளது.

அப்படி வேலையிலிருந்து அனுப்புவதால், பலரின் வாழ்க்கையே சூனியமாகிவிடுகிறது. பணிப் பாதுகாப்புக்கென சட்டங்கள் இல்லை. அப்படியே வேலை போனாலும் பி.எஃப், இ.எஸ்.ஐ என்று வாழ்க்கையைத் தொடரலாம் என்றால், அவையும் முறையாகக் கிடைப்பதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இதற்கெல்லாம் ஒரே வழி அரசாங்கம் வலுவான சட்டங்களை இயற்றுவதுதான் என்கின்றனர் ஐ.டி. ஊழியர்கள் பலர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x