Published : 24 Jul 2015 03:05 PM
Last Updated : 24 Jul 2015 03:05 PM

ஃபேஸ்புக் கார்னர்: எப்படி இருந்த ஊரு இப்படி ஆயிருச்சு!

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்களின் வேலை ஃபேஸ்புக்கில் போட்டோ போடுவதும், ஸ்டேட்டஸ் போடுவதும் அவற்றுக்கான லைக்குகளை எண்ணுவதும் என்று நினைக்கிறீர்களா? பாஸ் எல்லாரும் அப்படியல்ல. பயனுள்ள விஷயங்களைப் பகிர்ந்துகொள்பவர்கள், ஆக்கபூர்வமான விஷயங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்பவர்கள் என ஏராளமானோர் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள். உதாரணம், ‘ஷைன் திருச்சி’ஃபேஸ்புக் நண்பர்கள்.

திருச்சியைச் சேர்ந்த மனோஜ் பெங்களூருவில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அதே ஊரைச் சேர்ந்த இம்ரான் கல்லூரி ஒன்றில் அனிமேஷன் படிக்கிறார். இருவரையும் நண்பர்களாக மாற்றியது ‘ஐ லவ் திருச்சி’ஃபேஸ்புக் பக்கம்.

இவர்களைப் போல், திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ‘ஐ லவ் திருச்சி’ ஃபேஸ்புக் பக்கத்தைப் பின்தொடரும் நண்பர்கள்.

வேலைவாய்ப்பு, ஆன்மிகம், அன்றாடச் செய்திகள், சொந்த ஊரின் பெருமையைச் சொல்லும் அரிய வரலாற்றுக் குறிப்புகள், படங்கள் எனப் பல்வேறு செய்திகளுடன் சுவாரஸ்யமாக இருக்கிறது ‘ஐ லவ் திருச்சி’ ஃபேஸ்புக் பக்கம்.

ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொண்ட ஃபேஸ்புக் நண்பர்களை ஒருங்கிணைத்து ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யலாமே என யோசித்துள்ளார் மனோஜ். இவர் பெங்களூரு நகரைத் தூய்மையாக்கும் திட்டத்தில் தன்னார்வலராகச் செயல்பட்டவர். தன்னுடைய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு திருச்சியையும் தூய்மையான நகராக மாற்றலாமே என்ற இவரது யோசனைக்கு இம்ரான் ஓ.கே. சொல்ல, பிறந்தது ‘ஷைன் திருச்சி’ என்ற புதிய ஃபேஸ்புக் கணக்கு.

சுத்தமான திருச்சி என்பதே இத்தளத்தின் நோக்கம். அதே நேரத்தில் பசுமையும் பேணப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார் இம்ரான். முதல் முயற்சியாகத் திருச்சி தென்னூர் மேம்பாலத்தின் அடிப்பகுதியைச் சுத்தப்படுத்தியுள்ளார்கள். ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம் என ஒரு அழைப்பை டிசைன் செய்து, ‘ஷைன் திருச்சி’யில் போஸ்ட் செய்தார் இம்ரான்.

நான், நீ’ எனப் போட்டி போட்டுக்கொண்டு இப்பணியில் பங்கெடுக்கப் பலரும் உற்சாகமாகத் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துள்ளார்கள். முதல் புராஜெக்ட் ஜெட் வேகத்தில் தொடங்கியது. பலர் சென்னை, பெங்களூரு, கோவை போன்ற வெளி நகரங்களில் வேலை பார்ப்பதால் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் தூய்மைப்பணித் திட்டத்தைத் தொடரலாம் என முடிவு செய்தார்கள். இது உள்ளூர் இளைஞர்களுக்கும் சரியான யோசனையாகப் பட்டது.

இதையடுத்துத் தாங்கள் மேற்கொள்ள உள்ள பணி குறித்து மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் தெரிவித்து, முறையாக அனுமதி பெற்றார்கள்.

150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் எனப் புறப்பட்ட ஃபேஸ்புக் நண்பர்கள் பாலத்தின் அடியில் இருந்த குப்பைகளை அகற்றினார்கள்; பிரம்மாண்டமான தூண்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைக் கிழித்தெறிந்தார்கள்; பின்னர் சுற்றுச்சூழலுக்கு உகந்த டெரகோட்டா செம்மண் வர்ணத்தைப் பூசினார்கள். தூய்மை மட்டும் போதுமா, பசுமையும் தேவை என்று ஆசைப்பட்டார்களே?

தூண்களைச் சுற்றிலும் கயிற்றால் கொடி அமைத்து, அதில் காலி பிளாஸ்டிக் பாட்டில்களைக் கட்டி, அவற்றில் பாதியளவு மண் நிரப்பி மணி பிளான்ட், டேபிள் ரோஸ் போன்ற செடிகளை நட்டுத் தொங்க விட்டார்கள்.

‘பொழுது போகாம ஏதோ பண்றாங்க’ என அலட்சியமாக அந்த இடத்தைக் கடந்தவர்கள், பணி முடிந்தபின் பாலத்தின் கீழ் பகுதியைப் பார்த்தபோது அசந்துபோனார்கள். குப்பையும் கூளமும் நிறைந்த மண்மேடாகக் கிடந்த பாலத்தின் கீழ் பகுதி படு சுத்தமாக மாறியிருந்தது.

பாலத்தின் தூண்களில் உள்ள செடிகளைப் பராமரிக்கும் பொறுப்பை அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். “எப்படி இருந்த பாலம் இப்படி மாறியிருக்கு பாத்தீங்களா, அடுத்த மாதம் திருச்சியில் இன்னுமொரு பாலம் இதேபோல் பளிச்சென மாறும் பாருங்கள்” என்கிறார்கள் உற்சாகக் குரலில்.

மாற்றத்துக்கான விதை தூவப்பட்டிருக்கிறது. விதை விரைவில் விருட்சமாகும் எனும் நம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள் இந்த ஃபேஸ்புக் நண்பர்கள். தூய்மையான திருச்சி பசுமையாகச் சிரிக்கும் நாள் தொலைவில் இல்லை.

2-வது புராஜெக்ட் சக்சஸ்!

‘ஷைன் திருச்சி’ முகநூல் நண்பர்கள் டி.வி.எஸ். டோல்கேட் பாலத்தைச் சுத்தம் செய்து ஓவியங்கள் தீட்டியுள்ளனர். ஜூலை 11, 12 ஆகிய நாள்களில் ஒன்று கூடி பாலத்தின் தூண்களில் இருந்த விளம்பரங்களை அழித்து வெண்மையாக்கி, கார்கில் போர் வீரர் மேஜர் சரவணன், அப்துல்கலாம் உள்ளிட்டோரின் ஓவியங்களையும், ஹெல்மெட் விழிப்புணர்வு, செடி, பூக்கள் போன்ற கண்கவரும் அழகிய ஓவியங்களையும் வரைந்தனர்.

படங்கள்: ஜி. ஞானவேல்முருகன், ஏ. முரளிதரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x