Last Updated : 17 Jul, 2015 01:18 PM

 

Published : 17 Jul 2015 01:18 PM
Last Updated : 17 Jul 2015 01:18 PM

இளைஞர்களை மயக்கும் துள்ளல்

‘எங்கேயும்...எப்போதும்...

சங்கீதம்... சந்தோஷம்...’

‘துள்ளுவதோ இளமை.... தேடுவதோ தனிமை...’

‘மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேத்து வைக்கும் சீமானே...’

இளைஞர்களைத் தாளம் போட்டு ஆட வைக்கும் எம்.எஸ்.வி. என்றழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதனின் மந்திரப் பாடல்களுக்கு இவை சில உதாரணங்கள். 1960 மற்றும் 1970-களில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்தப் பாடல்கள் காலம் கடந்து இந்தக் காலத்து இளைஞர்களையும் உற்சாகத் துள்ளல் போட வைக்கின்றன. கர்நாடக சங்கீத பாணிப் பாடல்களும் இசையும் சினிமாவை ஆக்கிரமித்திருந்த காலத்தில், தனது மெல்லிசையால் துள்ளல் பாடல்களை மீட்டி இளைஞர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர் எம்.எஸ்.வி.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இசையமைத்த பாடல்களை இந்தத் தலைமுறைக்கும் கடத்திக் கொண்டு வந்தவர் எம்.எஸ்.வி. மட்டுமே. டி.வி. ஷோக்களாக இருந்தாலும் சரி; இசைக் கச்சேரிகளாக இருந்தாலும் சரி, எம்.எஸ்.வி.யின் பாடல்களுக்கு முன்னுரிமை அளித்து பாடுகிறார்கள் இளைய தலைமுறையினர். போட்டிகளுக்காக அல்லது மேடைக் கச்சேரிக்காக மட்டுமே இந்தக் காலத்து தலைமுறையினர் எம்.எஸ்.வி. பாடலைப் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால், அவரது பாடல்கள் இளைய தலைமுறையினரின் மனதில் ஊடுருவியுள்ளன என்பதே உண்மை.

இதுபற்றி திருச்சியில் ஆர்கெஸ்ட்ரா நடத்தி வரும் இளைஞர் பிரேம் என்ன சொல்கிறார்? “பொதுவாக ஆர்கெஸ்ட்ராவில் ‘அன்றும் இன்றும்’ என்றுதான் பாடுவோம். அந்தக் கால பாட்டு என்றால் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலைத்தான் தேர்வு செய்வோம். வீதிகளில் போடப்படும் ஆர்கெஸ்ட்ராவில் தூள் பறப்பது போன்ற பாடல்களைப் பாடினால்தான் வரவேற்பு கிடைக்கும். துள்ளலான இசை, ராக் அண்ட் ரோல், ராப் எனப் பல ராகங்களைக் கலந்து துள்ளல் பாடல்களை எம்.எஸ்.வி. கொடுத்திருக்கிறார்.

இதுபோன்ற பாடல்களைப் பாடினால் பாட்டைக் கேட்பவர்கள் எழுந்து ஆட ஆரம்பித்துவிடுவார்கள். மேடைக் கச்சேரிகளுக்காக மட்டுமே அவரது பாடலை பயன்படுத்திக்கொள்வதில்லை. அதையும் தாண்டி அவரது இசையை ரசிக்கும் என்னைப் போன்ற இளைஞர்கள் இன்றும் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்தத் தலைமுறை மட்டுமல்ல, இன்னும் 25, 50 ஆண்டுகள் கழித்தும் அவரது துள்ளல் பாடல்கள் இளைஞர்களை ஆக்கிரமித்திருக்கும்” என்கிறார் பிரேம்.

ஆர்கெஸ்ட்ராவில் மட்டுமல்ல, டி.வி. ஷோக்களில் பங்கேற்கும் இளைஞர்கள் எம்.எஸ்.வி.யின் துள்ளல் பாடல்களை அதிகமாகப் பாடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். “போட்டிக்காக மட்டுமே எம்.எஸ்.வி. பாடல்களைப் பயன்படுத்துவதில்லை. எல்லாத் தளங்களிலும் அவரது பாடல்களைப் பாடுகிறோம். அதையும் தாண்டி அவரது இசை நுணுக்கங்களைக் கற்றுகொள்ளவும், அவரது பாடல்களை பாடும்போது வாய்ப்பு கிடைக்கிறது” என்கிறார் ‘சூப்பர் சிங்கர்’ சீனியர் வெற்றியாளர் திவாகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x