Last Updated : 31 Jul, 2015 02:41 PM

 

Published : 31 Jul 2015 02:41 PM
Last Updated : 31 Jul 2015 02:41 PM

தொட்டுவிடும் தூரத்தில் தங்கம்

புதுக்கோட்டை- காரைக்குடி தேசிய நெடுஞ் சாலையோரம் கவிநாடு கிராமத்தில் இருக்கிறது அந்த விளையாட்டு மைதானம்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெ. லட்சுமணன் என்பவர் இங்கே பயிற்சி பெற்றார். பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அவர் இப்போது இந்திய ராணுவத்தில் வேலை பார்க்கிறார். இதே பாதையில் பயணித்த எல்.சூர்யா என்பவரை இந்த மைதானம் தென்னக ரயில்வேயில் பணியமர்த்தியிருக்கிறது.

கவிநாடு யூத் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இலவசமாகப் பயிற்சி பெற்ற ஜெ.லட்சுமணன், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை சீனியர் தடகளப் போட்டியில் 10 ஆயிரம், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற 21-வது ஆசிய தடகளப் போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கமும், 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். மகளிர் பிரிவில் எல். சூர்யா 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 2 தங்கம் வென்றார்.

இவர்கள் இருவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்லும் முயற்சியில் இருக்கிறார்கள். அவர்களிடம் இது தொடர்பாகப் பேசியபோது, “அடிப்படை வசதிகள்கூட இல்லாத இம்மைதானத்தில் பயிற்சி பெற்றோம். ஆனாலும் நாட்டுக்குப் பெருமை சேர்த்த வெற்றியைப் பெற்றோம். அதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு பி.வி.ஆர். சேகரனும், பயிற்சியாளர் லோகநாதனும் முக்கியமான காரணமாக இருந்தார்கள். ஆசிய அளவில் தங்கப் பதக்கம் ஜெயிக்கணும் அதுதான் எங்கள் ஆசை, லட்சியம்” என உற்சாகத்துடன் தெரிவித்தார்கள்.

இங்கு பயிற்சி பெறுவோரெல்லாம் ஏழை, எளியோரின் பிள்ளைகளே எனக் கூறும் பயிற்சியாளர் லோகநாதன், இங்கு பயிற்சி பெற்ற பலர் பல பதக்கங்களைப் பெற்றும் இவர்களது வெற்றியை ஏனோ அரசு அவ்வளவாக வெளிக்காட்டவில்லை என ஆதங்கப்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x