Published : 24 Jul 2015 01:06 PM
Last Updated : 24 Jul 2015 01:06 PM

ஐ.டி. உலகம்- 7: தன்னம்பிக்கையைக் குலைக்கும் பணிநீக்கம்

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி, வேலை நீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொழிலாளரின் வாக்குமூலம்:

“என் பெயர் சிவகுமரன். ஐ.டி. துறையில் 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இப்போது எனக்கு 47 வயதாகிறது. முதலில் பணிக்குச் சேர்ந்த நிறுவனத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றினேன். வேலைக்குச் சேர்ந்த புதிதில் வேலை நீக்கம் பற்றிய அச்சம் இருந்தது. போகப் போகத் தன்னம்பிக்கையும், உற்சாகமுமாக நாட்கள் நகர்ந்தன.

வீட்டுக்கடன், அவசரச் செலவுகளுக்கு கிரெடிட் கார்ட் என வாழ்க்கை முறையும் மாறிப்போனது. நவம்பர் மாதம் 25-ம் தேதி, காபி குடித்துவிட்டு எனது மேசைக்குச் சென்றேன். வேலை தொடங்கும்போது ஒரு அழைப்பு வந்தது: ‘ஹெச் ஆர் அழைக்கிறார்’.

ஹெச்ஆர் அலுவலகத்தில் தனிப்பட்ட அழைப்பென்றால் யாருக்கும் ‘பகீர்’ என்றுதான் இருக்கும். அறைக்குள் நுழையும்போதே பதற்றமாகியது. ‘மிஸ்டர் சிவகுமரன் இது நிர்வாக முடிவு. உங்களிடம் அறிவிக்கத்தான் அழைத்தோம். இதுவரை எங்களோடு உழைத்தமைக்கு நன்றி!. அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்ட செல்போன், லேப்டாப் ஆகியவற்றை உடனே கொடுத்துவிட்டுக் கிளம்புங்கள்’

அவ்வளவுதான்! அதுவரை இருந்த உறுதி குலைந்து இனிமேல் என்ன செய்வது என்று உளைச்சல் ஏற்பட்டுவிட்டது. எல்லாம் முடிந்துவிட்டது என்று ஆகிப்போனேன். நமது நிலை அப்படித்தானா? தேவையில்லை என்றால் தூக்கி வீசிவிடுவார்களா? - தன்னம்பிக்கை சிதைந்து வாழ்க்கை சூன்யமானது.

முதலாளிகளுக்குத்தான் சங்கம் உண்டு. தொழிலாளிக்கு இங்கே தனித்து விடப்பட்ட நிலைமைதான். நண்பர்களை நெருங்கினால் விலகி ஓடினார்கள். பொருளாதார நெருக்கடி வாழ்வைச் சூழ்ந்தது. 8 மாதங்கள் போராடி ஒரு நிறுவனத்தில் வேலை பெற்றேன். அங்கு நிலைத்திருக்க முடியவில்லை. தன்னம்பிக்கையை மொத்தமாகச் சிதைத்துவிட்டனர்.

இங்கே ஒவ்வொரு நிறுவனமும் தனது தொழிலாளர்களை அவர்களுக்கு ஏற்ப வடிவமைத்துவிடுகிறது. வேறு நிறுவனத்தில் நுழைந்தால் எல்லாம் முதலிலிருந்துதான் தொடங்க வேண்டும்.

இப்போது ஒரு நிறுவனத்தில் பணியில் இருக்கிறேன். எந்தவொரு வேலையைச் செய்தாலும் உள்ளூர அச்சம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. சுதந்திரமாக எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை. தவறென்றால் சுட்டிக்காட்டக்கூடத் தைரியம் வருவதில்லை. ஐ.டி. நிறுவனங்களுக்கு அரசு, அதிகார மட்டத்தில் ஆதரவு இருக்கிறது. பணியாளர்களுக்கு யாரும் இல்லை. அதனால்தான் நிலைமை இப்படி இருக்கிறது”

பணி நீக்கம்

சிவகுமரன் மட்டுமல்ல, இது போன்ற பல்லாயிரம் வாக்குமூலங்களும், துயரக் கதைகளும் ஐ.டி. துறையில் நிறைந்துள்ளன. சென்ற ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேர் திடீர் பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படுவது பொருளாதாரப் பாதிப்பு மட்டுமல்ல. உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஊழியர்கள் பணிபுரியும் விதத்தைக் கொண்டு, மிகச் சிறப்பு, எதிர்பார்ப்புகளை விட அதிகம், எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வது, எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை, மிகவும் மோசம் என்றுதான் பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை வகை பிரிக்கின்றன. இதில் கடைசி இரண்டு பிரிவுகளில் இருப்பவர்களுக்குப் பணித்திறனை வளர்த்துக்கொள்ள சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

ஆட்குறைப்புக்கு ஐ.டி. நிறுவனங்கள் பொதுவாகக் கூறும் காரணம் குறைவான பணித்திறன் (poor performance) கொண்ட ஊழியர்களை வெளியேற்றுகிறோம் என்பதுதான். பணித் திறன் மதிப்பீட்டின் மூலம் (performance appraisal) ஊழியர்களை வகை பிரித்து அவர்களில் குறைவான பணித் திறன் கொண்டவர்களை வெளியேற்றுவதாக நிறுவனங்கள் கூறுகின்றன. ஒரு ஊழியரை எந்தப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்பது பெரும்பாலான நேரங்களில் மேலாளரின் முடிவாகவே இருக்கிறது. எனவே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அங்கே இடமுண்டு. ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்த்தால், அவர் ஏற்கெனவே அதிக சம்பளம் பெறுபவர் என்று அவருக்குக் குறைவான மதிப்பீடு வழங்கப்படும். பேறு கால விடுமுறையில் செல்லவிருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதே நிலைதான்.

ஆட்குறைப்பு

இந்தப் பிரச்சினையை உண்மை அறியும் அறிக்கையின் மூலம் வெளியே கொண்டுவந்தவர் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றத்தின் (FITE) தமிழ்நாடு தலைவர் ப.பரிமளா.

ஆட்குறைப்பு எப்போதும் நடந்து கொண்டிருப்பதாகவும், பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யும் போதுதான், அது வெளியே தெரிகிறது என்றும் அவர் கூறுகிறார். இவ்வாறு பாதிக்கப்படுவோர் பலர் 10 முதல் 15 வருட அனுபவம் பெற்றவர்களாக இருப்பவர்கள். அவர்களை நீக்கிவிட்டு அதே வேலைக்குக் குறைந்த சம்பளத்தில் புதிதாக வருபவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.

பணித் திறன் குறைவு என்று நிரூபிக்க முடியாத பட்சத்தில், தாங்க முடியாத வேலைப் பளுவுக்கும், மன உளைச்சலுக்கும் அந்த ஊழியரை ஆளாக்கி, தானாகவே ராஜினாமா செய்ய வைத்துவிடுகிறார்கள். எந்தவொரு ஐ.டி. நிறுவனத்திலும் voluntary attrition rate என்ற, தானாக முன்வந்து பணியிலிருந்து விலகுபவர்கள் சராசரியாக 10 முதல் 15 சதவீதமாக இருக்கிறார்கள். குறைவான சம்பளத்தில், குறைந்த ஆட்களைக் கொண்டு அதிக வேலை வாங்குவதுதான் ஐ.டி. நிறுவனங்களின் நோக்கமாக இருக்கிறது என்று பரிமளா சொல்கிறார்.

பணித்திறன் மதிப்பீடு வெளிப் படையானதோ பாரபட்சமற்றதோ இல்லை என்கிற நிலையில் தொழிலாளர் நலச் சட்டங்களின் அவசியம் எழுகிறது. இன்று ஐ.டி. துறையில் வலுவான தொழிற்சங்கம் வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களை அரசு கறாராக அமலாக்க வேண்டும் என்பதுதான் பெரும்பான்மை ஐ.டி. தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x