Last Updated : 12 Jun, 2015 02:18 PM

 

Published : 12 Jun 2015 02:18 PM
Last Updated : 12 Jun 2015 02:18 PM

பாட்டும் நானே படிப்பும் நானே!

குறும்புத்தனமாகத் “திக்கித் தெணறுது தேவதை” எனப் பாடினால் யூ டியூபில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து, கேட்டு ரசிக்கிறார்கள். 2013 ம் ஆண்டுக்கான பிக் தமிழ் மெலடி அவார்ட் வீடு தேடி வருகிறது.

அடுத்தடுத்து திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைக்கிறது. பரீட்சை எழுதினால் 1172 மதிப்பெண்களோடு 2015-ல் பிளஸ் 2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் மாணவி என்ற அங்கீகாரம் கிடைக்கிறது.

படிப்பிலும் அசத்தி பாட்டிலும் கலக்கும் இந்த சுட்டிப் பெண்ணின் பெயர் ஸ்ருதி நாராயணன். தற்போது சென்னைக் கல்லூரி ஒன்றில் பி.காம் இளங்கலைப் படிப்பில் சேரப்போகும் ஸ்ருதி எப்போதுமே கையில் புத்தகம், வாயில் பாட்டு என இருப்பவர் அல்ல. “நான் எதையும் சிரமப்பட்டு செய்ய மாட்டேன்.

என்னால் ஒரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து படிக்க முடியாது. அதே போல அதிகாலை எழுந்து சாதகம் செய்ய வேண்டும் என்றெல்லாம் என்னை என் பெற்றோர் வற்புறுத்துவதில்லை. பாட வேண்டும் என நினைக்கும்போது பாடுவேன். படிக்கத் தோன்றும்போது படிப்பேன்.

சொல்லப்போனால் பிளஸ் 2 இறுதிப் பரிட்சைக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பாடல் ரிக்கார்டிங்கில் இருந்தேன்” என்கிறார் குழந்தைத் தனமான சிரிப்போடு.

சொன்னதை அப்படியே சொல்ல மாட்டேன்

சினிமா பின்னணிப் பாடகியாக ஸ்ருதி இதுவரை மூன்று பாடல்கள் பாடி உள்ளார். மேலும் ஏழு தமிழ்ப் படங்களில் பின்னணி பாடி வருகிறார்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜுனியர் புகழ் ஆஜித்துடன் இணைந்து ‘உ’ படத்துக்காக இவர் பாடிய “திக்கித் தெணறுது தேவதை” பாடல் தமிழ் சினிமாவின் இசைக் கதவுகளை ஸ்ருதிக்குத் திறந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் அப்படலை எழுதிய முருகன் மந்திரம்தான் என்கிறார்.

படிப்பிலும், பாட்டிலும் சொன்னதை அப்படியே சொல்லும் கிளிப்பிள்ளையா அல்லது தன்னைத் தானே செதுக்கும் சிற்பியா ஸ்ருதி எனக் கேட்டபோது, “நான் மனப்பாடம் செய்து படித்ததில்லை. அதே போல பாடல் பதிவின்போதும் பாடலில் ட்ராக்கை இரண்டு முறைதான் இசைத்துக் காட்டுவார்கள்.

அதற்குள் சட்டெனப் பாடலைப் பற்றிக்கொள்ள வேண்டும். அந்தப் பாடலுக்குத் தேவைப்படும் உணர்வு, குரலில் பாவம், மேற்கொண்டு மெருகேற்றுதல் என அத்தனையும் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்கிறார்.

ஜானகி அம்மா பேத்தி

‘அகத்திணை’ படத்தில் தற்போது வைரமுத்துவின் வரிகளில் “தந்தையும், நீயே, தாய்மடி நீயே” என்ற பாடலைப் பாடியுள்ளார் ஸ்ருதி. இந்தப் பாடலுக்காகத் தன் குரலைப் பத்து வயதுச் சிறுமியின் குரல்போல மாற்றிக் கொண்டு பாடியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் குரலைப் பெரிதளவு மாற்றி மாயா ஜாலங்கள் செய்தவர் கானக்குயில் ஜானகிதான். ஆனால் இந்தச் சின்னப் பெண் இவ்வளவு அழகாகக் குழந்தைக் குரலில் பாடுவதை பாராட்டி தமிழ் இசை உலக நட்சத்திரங்கள் ஸ்ருதியை “ஜானகி அம்மா பேத்தி” என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

எக்கச்சக்க அவதாரம்

ஸ்ருதிக்கு கைவரப்பெற்றது படிப்பும், வாய்ப்பாட்டும் மட்டும்தானா எனக் கேட்டால் அசந்துபோவீர்கள். கவிதை படைப்பது, கட்டுரை எழுதுவது, நடனமாடுவது, பேச்சுப் போட்டிகளில் விட்டு விளாசுவது, கீபோர்ட் வாத்தியம் இசைப்பது என மாவட்ட அளவில் தொடங்கி தேசிய அளவு வரை நடத்தப்படும் அத்தனை கலை சார்ந்த போட்டிகளிலும் பரிசுகளைக் குவித்துள்ளார்.

போதாததற்கு, உள்ளூர் தொலைக்காட்சி தொகுப்பாளராக ராமநாதபுர மக்களை திணறடித்துள்ளார். இவர் கால்படாத தொலைக்காட்சி இசைப் போட்டி மேடைகள் இல்லை.

பாட்டும் நானே படிப்பும் நானே!

ஸ்ருதிக்கு கைவரப்பெற்றது படிப்பும், வாய்ப்பாட்டும் மட்டும்தானா எனக் கேட்டால் அசந்துபோவீர்கள். கவிதை படைப்பது, கட்டுரை எழுதுவது, நடனமாடுவது, பேச்சுப் போட்டிகளில் விட்டு விளாசுவது, கீபோர்ட் வாத்தியம் இசைப்பது என மாவட்ட அளவில் தொடங்கி தேசிய அளவு வரை நடத்தப்படும் அத்தனை கலை சார்ந்த போட்டிகளிலும் பரிசுகளைக் குவித்துள்ளார்.

போதாததற்கு, உள்ளூர் தொலைக்காட்சி தொகுப்பாளராக ராமநாதபுர மக்களை திணறடித்துள்ளார். இவர் கால்படாத தொலைக்காட்சி இசைப் போட்டி மேடைகள் இல்லை.

இத்தனை இளம் வயதில் ஸ்ருதி இசைப் போட்டி நடுவர் எனும் அவரதாரமும் எடுத்துவிட்டார். சிங்கப்பூர், மலேசியா, துப்பாய் உள்ளிட்ட உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக பிரத்தியேகமாக இணையம் மூலம் நடத்தப்படும் சேட் ரூம் (chat room) இசைப் போட்டிகளுக்குக் கடந்த ஒரு வருடமாக நடுவராக இருந்து வருகிறார் ஸ்ருதி.

அதாவது, போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், பார்வையாளர்கள், நடுவர் என அத்தனைபேரும் ஆன்லைன் சேட்டில் ஆடியோ மூலம் இணைக்கப் பட்டிருப்பார்கள். வெவ்வேறு ஊர், நாடு என எங்கிருந்தும் பங்குபெறலாம். அனைவரும் தமிழராக இருக்க வேண்டும் என்பதுமட்டும்தான் ஒரே விதி. “அப்படிப்பட்ட சேட் ரூம் இசைப் போட்டியில் என் சக வயது இளைஞர்களுக்கு நான் நடுவராக இருந்துவருகிறேன் என நினைத்தால் பெருமையாக உள்ளது” என்கிறார் இந்த ஜானகி பேத்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x