Published : 12 Jun 2015 02:36 PM
Last Updated : 12 Jun 2015 02:36 PM

உறவுகள்: காதலித்தால் உயிர் போகுமா?

எனக்குக் கல்யாணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இப்போது ஒரு குழந்தை உள்ளது. திருமணத்துக்கு முன்பு நானும் ஒரு பெண்ணும் காதலித்தோம். நான் காதலித்த விஷயத்தை என் மனைவியிடம் திருமணத்துக்கு முன்பே சொல்லிவிட்டேன்.

நான் காதலித்த காலத்தில் என் வீட்டில் எங்கள் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டி னார்கள். சுமார் ஒன்றரை வருடங்கள் எங்கள் காதல் தொடர்ந்தது. நான் அவளிடம் எவ்வளவு பேசியும் எங்கள் காதலை அவள் தன் குடும்பதாரிடம் தெரிவிக்கவில்லை. நான் அவள் தந்தையிடம் பேச முயன்றபோது அவள் பயத்தின் காரணமாக வேண்டாம் எனச் சொல்லிவிட்டாள்.

சில மாதங்கள் கழித்து, “என்னால் என் வீட்டில் நம் காதல் விஷயத்தைச் சொல்ல முடியாது. நீ வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்” என சொல்லிப் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டாள். அவள் நினைவாகவே பல நாட்கள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் என் பெற்றோரின் சொல் கேட்டுத் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டேன். காலப் போக்கில் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தேன்.

ஒரு நாள் என் காதலி அழைத்து, “என் சூழல் காரணமாக நான் விலகிப் போனேன். ஆனால் “நீ ஆண். எனக்காகக் காத்திருந்திருக்கலாம்” என்று சொன்னாள். அன்று முதல் நான் ஒரு பெண்ணை ஏமாற்றிவிட்டேன் எனும் குற்றவுணர்வு என்னைக் கொல்லுகிறது. அவள் நினைவுகள் என்னை வதைக் கின்றன. என் மனைவியிடமும் இதைச் சொல்லி அவளையும் கஷ்ட்டப் படுத்தக் கூடாது என்பதால் நான் தனியாகத் தவிக்கிறேன். சில நேரம் என் காதலியோடு ஒரு நாளாவது வாழ வேண்டும் என்று தோன்றினாலும் . அவள் வாழ்கையையும் என் மனைவி வாழ்க்கையையும் எண்ணி என்னைக் கேவலமாகத் திட்டிக் கொண்டபடி மன வருத்ததுடன் வாழ்ந்துவருகிறேன்.

மனைவிக்குத் துரோகம் செய்ய விரும்பாத உங்களை வணங்குகிறேன்! உங்கள் காதலி இன்னும் மணம் செய்துகொள்ளவில்லை போலும்; அதனால் தான் ‘நீ ஆண், எனக்காகக் காத்திருந்திருக்கலாம்' என்று அவர் சொன்னது உங்களைக் கலங்கவைத்திருக்கிறது.

பெற்றோர் ஒரு பக்கம் காதலி ஒரு பக்கம் இருக்கையில், காதலி பக்கம் வலுவிழந்து போனதால்தானே இந்த முடிவு! முடிந்ததைப் பற்றி வருந்துவதால், குற்றவுணர்வுக்குத் தீனி போட்டு வளர்ப்பீர்கள்; பிறகு குடும்ப வாழ்க்கை நரகமாகிவிட்டதே என்று வருந்திப் பயனில்லை!

உங்கள் காதலியால்தான் இருவரும் வண்டியைத் தவறவிட்டுவிட்டீர்கள். அவர் துணிந்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாமே! அவர் பெற்றோர் சொல்படி நடந்ததால்தானே நீங்களும் உங்கள் பெற்றோர் விருப்பத்துக்கு இணங்கினீர்கள்.

அவர் ஏற்படுத்திய முடிவு இது. ‘ஓவரா'க உருக வேண்டாம். குற்ற உணர்வை விரட்டிவிட்டாலே மனது அமைதியாகிவிடும். தன் தப்புக்குப் பொறுப் பேற்காமல் பிறரைக் குற்றம் சொல்வதுதான் மனித குணம்.

ஆனால் நீங்களும் பழியை வாங்கிக்கொள்ள முன்வந்தீர்கள். உங்கள் காதலியை நிந்திக்கவில்லை. அவரது சூழ்நிலையின் நிர்ப்பந்தம்!

இனி நடக்க வேண்டியதை யோசிப்போம். நல்ல மனைவி, அழகான குழந்தை இருக்கும்போது அவர்களுக்காக வாழுங்கள். இந்தக் காலகட்டம் திரும்பி வராது. குழந்தையின் விளையாட்டுகளை ரசியுங்கள். குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி மனைவியோடு சேர்ந்து கனவு காணுங்கள்.

எனக்கு 23 வயதாகிறது. நானும் என் காதலியும் கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்துவருகிறோம். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

இருவரும் பொறியியல் பட்டதாரிகள். நான் மட்டும் வேலையில் இருக்கிறேன். எங்கள் குடும்பத்தைக் காட்டிலும் அவர்களுடையது செல்வாக்கு மிக்கது.

அவளுடைய வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். அப்போது அவள் வேலை பார்க்க விரும்புவதாகச் சொல்லி, கல்யாணம் வேண்டாம் என்றாள். ஆனால் அவள் அண்ணனிடம் மட்டும் உண்மையைச் சொல்லிவிட்டாள். அவன் காதலை மறந்து விடு என மிரட்டியிருக்கிறான்.

இவள் தன் பெற்றோரை எளிதில் ஒத்துக்கொள்ள வைக்க முடியும், பின்பு அண்ணனைச் சமாளித்துவிடலாம் என நம்பினாள். ஆனால் அவள் பெற்றோர் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டியிருக்கிறார்கள்.

அப்படியென்றால் நானும் செய்துகொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறாள். விஷயம் தெரிந்த நாள் முதல் அவள் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது. என்னிடம் போனில், “உன் வழியில் நீ போ.

எங்க வீட்டுப் பொண்ணை நாங்க பார்த்துக்கறோம். இல்லைனா இரு வீட்டிலும் உயிர் போகும்” என்று மிரட்டினார்கள்.

நீ இல்லை என்றால் இறந்துவிடுவேன் என என் காதலியிடம் சொன்னேன். நான் இறந்துவிட்டால் அவளும் இறந்துவிடுவேன் என்கிறாள். இந்நிலையில் அவள் வீட்டார், அவர்கள் பார்த்துவைத்த மாப்பிள்ளை வீட்டுக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர்.

அவள் வேறொருவரை மணந்தாலும் அது மிகப் பெரிய தண்டனையாகத்தான் இருக்கும். இந்தக் கடினமான சூழலிலிலிருந்து அவளை விடுவிக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று தயவுசெய்து சொல்லுங்கள். கடும் மன உளைச்சலில் இருக்கிறோம்.

உங்கள் தவிப்பு கடிதத்தில் பிரதிபலிக்கிறது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் சுதந்திர இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு அவள் விரும்பியவரை மணக்கும் உரிமை இல்லை என்பது கொடுமையே! ஆனால் இக்கடிதம் அந்தப் பெண்ணிடமிருந்து வந்திருந்தால் அதை வைத்துக்கொண்டு சில முயற்சிகள் எடுக்க முடியும்.

காந்திஜி சொன்னதுபோல பெண்ணுரிமை பற்றிய சட்டங்களினால் பலனில்லை - பெண் தன் உரிமையைப் பற்றி தைரியமாகக் குரல் கொடுக்காதவரை. ஒரு பெண் துன்புறுத்தப்பட்டால்.

அவளே காவல் நிலையங்களில் அல்லது வன்முறைத் தடுப்புக்காகப் பாடுபடும் பெண்கள் அமைப்புகளில் புகார் கொடுத்தால், உடனே அவளை அந்தச் சூழ்நிலையிலிருந்து விடுவிக்கச் செயல்படுவார்கள்.

உங்கள் விஷயத்தில், அவர் மட்டும் ஒரு அடி எடுத்துவைத்தால் அவருக்காகப் பல பெண்ணியக்கங்கள் போராடுவார்கள். ஏனெனில் இது ஒரு பெண்ணின் தனி உரிமை பற்றிய பிரச்சினை. காதலியோ அல்லது அவர் சம்மதத்துடன் நீங்களோ புகார் கொடுக்கலாம். துணிவிருந்தால் வழியுண்டு!

உங்கள் காதலியை அவர் குடும்பம் திட்டவில்லை, அடிக்கவில்லை என்று சொல்கிறீகள். திட்டாமல், அடிக்காமல் வார்த்தைகளால் துன்புறுத்துவது (verbal abuse), மிரட்டுவது (emotional abuse) இவையெல்லாம்கூட வன்முறைதான் என்று சட்டம் கூறுகிறது. ஜாதி வெறி பிடித்த அந்தக் குடும்பம் (பற்று வேறு, வெறி வேறு; எதிலுமே பற்றினால் பாதகம் விளையாது;

ஆனால் வெறி மனிதனை கொடூரமாக மாற்றிவிடும்!) கௌரவக் கொலை / தற்கொலை என்கிற ரீதியில் சிந்தித்தால், மகளைவிட கௌரவம்தான் அவர்களுக்கு முக்கியம் என்று தெரிகிறது.

காதலியின் பெற்றோருக்கு ஒரு வார்த்தை: இந்த அளவுக்கு ஜாதிப் ‘பற்று' உங்களுக்கு இருந்தால், உங்கள் பெண்ணைப் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிட்டு, உங்கள் ஜாதிப் பையனாகப் பார்த்து மண முடித்திருக்கலாமே!

திருமணத்துக்குப் பின் அவர் படிப்பைத் தொடர்ந்திருக்கலாமே! இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் ஆணுக்கு நிகராகப் பெண்ணை ஏன் படிக்கவைக்க வேண்டும், பின் அவர்கள் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்களே என்று ஏன் கோபப்பட வேண்டும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x