Published : 12 Apr 2014 03:15 PM 
 Last Updated : 12 Apr 2014 03:15 PM
சேகருக்கு ‘இசை’பட வாழ்தல், வாய்த் திருக்கிறது. வங்கிப் பணியைத் துறந்துவிட்டு ஆன்மிகப் பாடல் கேசட்டுகளைத் தயாரித்து, அவற்றை மக்களுக்கு இலவசமாகத் தரும் சேவையைச் செய்துவருகிறார். இதுவரை கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஆடியோ சிடிகளை அப்படி வழங்கியிருக்கிறார். வங்கிப்பணி சேகர், இன்று ‘கோவை’ சேகராக அறியப்படுவதற்கு இசைதான் காரணம் என்ற அறிமுகத்தோடு பேசுகிறார்.
இசையே என் இலக்கு
“ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் எக்ஸிகியூட்டிவாக இருந்தேன். 14 வருஷத்துக்கு முன்னால விருப்ப ஓய்வு வாங்கிட்டேன். கைநிறைய சம்பளம் வந்த வேலையை விட்டதுக்காகப் பலரும் என்னைக் கேள்விகேட்டாங்க. ஆனா இசைதான் என்னோட இலக்கு என்பதில் நான் தெளிவா இருந்தேன். அந்தத் தெளிவுதான் இன்னைக்கு என்னை மனநிறைவோட இருக்க வைக்குது” என்று சொல்லும் சேகர், தன் வாழ்வின் மிகப்பெரிய தேடல் இசைதான் என்கிறார்.
“என் அம்மா ஜானகி, சிறந்த பாடகி. கே.வி.நாராயணசாமியோட சிஷ்யை அவங்க. நானும் முறைப்படி சங்கீதம் கத்துக்கிட்டேன். வீடு, வேலைன்னு வாழ்க்கை ரொம்ப சாதரணமா போயிட்டு இருந்தது. இசைதான் என்னை இடையிடையே ஆசுவாசப்படுத்தும். அந்த ஆசுவாசம் எப்பவும் கிடைக்கணும்னு நினைச்சேன். ஈச்சனாரி விநாயகர், என் மனதுக்கு மிக நெருக்கமானவர். கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக அவருடைய கோயிலுக்குச் சென்று வருகிறேன். பக்தியும் இசையும் சங்கமிக்கும் புள்ளி அற்புதமானது. அந்த அனுபவம் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதுதான் என் வேலையை விட்டுவிட்டு இசையின் வழியில் நடக்க வைத்தது” என்று சொல்கிறார் சேகர்.
பக்திப் பாடல்களை இவரே எழுதிப் பாடுவது இவருடைய இன்னொரு சிறப்பு. இதுவரை 1500க்கும் அதிகமான பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். பாடல்களை எழுதுவதற்காகச் சம்பந்தப்பட்ட கோயில்களுக்குச் சென்று ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக அணுகுகிறார். பாடலிலேயே ஒவ்வொன்றுக்கும் விளக்கமும் தல புராணமும் வந்துவிடுகிறது.
“வேலையை விட்டதும் முதலில் ஆறு பாட்டுகளை எழுதினேன். அவற்றை வைத்து 500 ஆடியோ சிடிகள் தயாரித்தேன். முதன் முதலில் விநாயகர் சதுர்த்தியன்று ஈச்சனாரி விநாயகர் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அவற்றைக் கொடுத்தேன். என்னுடைய இந்த செயல் பலருக்கு வேடிக்கையாக இருந்தது. சொல்லப்போனால் என் மனைவிக்கும், மகனுக்குமே என் செயல்களில் அத்தனை நம்பிக்கை இல்லை. ஆனால் என் முடிவில் நான் தெளிவாக இருந்தேன். ஆடியோவுடன் சில கோயில்களுக்கு வீடியோ சிடியும் தயாரித்தேன். பிரபல பாடகர்களுடன் இணைந்து பக்தி பாடல்களைப் பாடியிருக்கிறேன்” என்று சொல்லும் சேகர், தமிழகத்தின் முக்கிய கோயில்கள் பலவற்றின் மீதும் பாடல்கள் பாடியிருக்கிறார். ‘ஒன் மேன் ஷோ’ எனப்படும் தனிநபர் இசைக்கச்சேரியையும் நடத்தி வருகிறார்.
தனி நபர் கச்சேரி
“ஜெர்மனியில் ஒருவர் தனியாளாக இசைக்கச்சேரி நடத்துவதை டி.வியில் பார்த்தேன். நாமும் அதை ஏன் முயற்சிக்கக்கூடாது என்று எட்டு லட்ச ரூபாய் செலவழித்து அதற்கான உபகரணங்களை வாங்கினேன். இதோ, கிட்டத்தட்ட 236 பக்திக் கச்சேரிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டேன். நான் இந்த வேலையைத் தொடங்கி முதல் ஐந்து வருடங்கள் யாரிடமும் எந்தப் பண உதவியும் வாங்கவே இல்லை. ஐந்து ஆண்டுகள் கழித்துதான் என் மனைவியிடமும், மகனிடமும் அவர்கள் பங்காக மாதம் கணிசமான ஒரு தொகையை வாங்குகிறேன். இதில் எனக்கு நிறைய பணம் செலவாகிறதுதான். லாப, நஷ்டத்தை எதிர்பார்த்து செயல்பட இது என்ன வியாபாரமா? இல்லை தொழிலா? என்னுடைய இந்தச் செயல் எனக்கு மனநிறைவையும் நிம்மதியையும் தருகிறது. பிறந்தேன், வளர்ந்தேன், நாளை மறைந்தேன் என்பதில் என்ன இருக்கிறது? என்னுடைய அடையாளமாக எதையாவது விட்டுச் செல்ல வேண்டாமா?” என்று அர்த்தத்துடன் முடிக்கிறார் கோவை சேகர் என்கிற ஆடியோ சேகர்.
படங்கள்: ஜெ. மனோகரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT