Last Updated : 12 Aug, 2016 01:10 PM

 

Published : 12 Aug 2016 01:10 PM
Last Updated : 12 Aug 2016 01:10 PM

ஒலிம்பிக் டைரி: இரண்டு முறை தகர்ந்த கனவு!

இரண்டு முறை தகர்ந்த கனவு!

தெற்கு சூடானைச் சேர்ந்தவரும் அகதியாக ஆஸ்திரேலியாவில் இருப்பவருமான சுவோட் என்ற ஓட்டப்பந்தய வீரரைப் பற்றிக் கடந்த வாரம் 'இளமை புதுமை'யில் எழுதியிருந்தோமல்லவா! ஒலிம்பிக்கில் ஓடப்போகிறோம் என்ற கனவுடன் இருந்தார் சுவோட். ஆனால், அவர் ஒலிம்பிக்கில் ஓடுவதற்கு அவரது நாட்டு ஒலிம்பிக் தேர்வுக் குழுவாலேயே கடந்த வாரம் அனுமதி மறுக்கப்பட்டது. ஆஸ்திரேலியா, தெற்கு சூடான் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமைகளையும் வைத்திருக்கும் சுவோட் இப்போது எந்த நாட்டுக்காகவும் ஓட முடியாது. தெற்கு சூடான் தேர்வுக் குழுவின் இந்த முடிவுக்கு விளம்பரதாரரின் அழுத்தமும் ஒரு காரணம் என்று பேசப்படுகிறது. கடந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு தகுதி பெறும் கனவில் இருந்த சுவோட்டை, சூடானியர்களே அடித்துக் கைகால்களை முறித்துப்போட அந்த முறை அவரது கனவு தகர்ந்து போனது. ரியோ ஒலிம்பிக்கிலாவது ஓடலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார் சுவோட். இம்முறையும் அவரது கனவு தகர்ந்து போனது. இனிமேல் ஓட்டப்பந்தயத்தின் பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டேன் என்று விரக்தியுடன் பேசுகிறார் சுவோட்.

சுவோட்.

ஜொலித்ததா ரியோ?

அட்டகாசமாக, அமர்க்களமாகத் தொடங்கியது ரியோ என்று சொல்லிவிட முடியாது. காரணம், பட்ஜெட்! இந்த ஒலிம்பிக் தொடக்க நிகழ்வுகளுக்காக முதலில் ஒதுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தொகை 113.9 மில்லியன் டாலர்கள் (சுமார் 683 கோடி ரூபாய்). ஆனால் அந்த ‘ப்ளானில்' விழுந்தது பல வெட்டுக்கள். அதனால் 55.9 மில்லியன் டாலர்களுக்குள் (சுமார் 335 கோடி ரூபாய்) சமாளிக்க வேண்டிய கட்டாயம். இந்த பட்ஜெட் லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் செலவழிக்கப்பட்ட தொகையைவிட 12 மடங்கும், பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் செலவழிக்கப்பட்ட தொகையை விட 20 மடங்கும் குறைவானதாகும். ஆக, 1896-ம் ஆண்டு முதல் இப்போது நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் வரை, தொடக்க நிகழ்வுகளுக்காக அதிகமாக செலவிட்ட நாடு என்ற பெருமையை சீனா பெறுகிறது. 2008ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் சீனா செலவழித்த தொகை 100 மில்லியன் டாலர்கள் (சுமார் 600 கோடி ரூபாய்). ஆனால் 'இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டதா என்பதில் சந்தேகம் உண்டு' என்று சில ஒலிம்பிக் விமர்சகர்கள் குரல் எழுப்பவும் செய்கின்றனர்.

கொடி பறக்குது!

‘ஃப்ளாக் பியரிங்' அதாவது, தங்கள் நாட்டுக் கொடியை ஏந்தி, தங்கள் நாட்டின் வீரர்களை அழைத்துக் கொண்டு மைதானத்தில் கம்பீர நடை போடும் கனவு, ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் உண்டு. ஆனால், அந்தப் பெருமை முன்னர் நடந்த ஒலிம்பிக் விளையாட்டில், பதக்கம் பெற்றவர்களுக்குத்தான் பொதுவாக் கிடைக்கும். இந்த முறை 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ராவுக்குக் கிடைத்தது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்குபெறத் தொடங்கிய காலம் முதல் மிக அதிகளவில் வீரர்களை இந்தப் போட்டிகளுக்கு அனுப்பியது இதுவே முதன்முறையாகும். 118 வீரர்கள்! ஆனால், இந்தப் பெருமையைத் தாண்டி, ஒலிம்பிக் வரலாற்றில் முக்கியமான ஒரு சாதனையை இரான் நாடு முதன்முறையாக நிகழ்த்தியுள்ளது. அது, சஹ்ரா நெமாத்தி எனும் மாற்றுத் திறனாளி வில் வித்தை வீராங்கனையை கொடி ஏந்தி, தங்கள் நாட்டு வீரர்களை வழிநடத்தியதுதான்!

சஹ்ரா நெமாத்த

இந்த வில்வித்தை விளையாட்டுக்குத் தனி பெருமை உண்டு. காரணம், இந்தப் போட்டியில் வயது வித்தியாசமின்றி, மாற்றுத் திறனாளிகளும் நல்ல உடல்நலத்துடன் உள்ளவர்களுடன் இணைந்து போட்டியிட வழி செய்துள்ளது, என்பதுதான் அது. 1984-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நியூஸிலாந்தைச் சேர்ந்த நெரோலி ஃபேர்ஹால் என்பவர்தான் இந்தப் போட்டியில் பங்குகொண்ட முதல் மாற்றுத் திறனாளி ஆவார். பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றுள்ள சஹ்ரா நெமாத்தி இந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாவிட்டாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

வெச்ச குறி தப்பாது!

இந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில், முதல் தங்கப் பதக்கம் பெற்ற பெருமைக்குரியவர் வர்ஜினியா த்ராஷர். இவர் ஒரு பெண். அமெரிக்காவின் பதக்கப் பட்டியலை முதல் தங்கத்துடன் மங்களகரமாக ஆரம்பித்து வைத்திருக்கிறார். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் முதல் பதக்கத்தைப் பெற்றிருக்கும் இவரின் வயது 19! ஆச்சர்யம்... 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இதே பிரிவில் முதல் தங்கப் பதக்கம் பெற்றவரும் ஒரு பெண்மணிதான். அவர் சீனாவைச் சேர்ந்த பெண்மணி யீ சிலிங். ஆனால் துர்பாக்கியம்... இந்த ஒலிம்பிக்ஸில் அவருக்குக் கிடைத்தது என்னவோ வெண்கலப் பதக்கம்தான். இந்தியர் அபிநவ் பிந்த்ராவுக்கு 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இதே பிரிவில்தான் தங்கம் கிடைத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வர்ஜினியா த்ராஷர்.

நீதா அம்பானிக்குப் பூங்கொத்து!

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் முதன்முறையாக ஓர் இந்தியப் பெண்மணி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் நீதா முகேஷ் அம்பானி. மும்பை ஐ.பி.எல். அணியின் முதலாளி, இந்தியாவில் கால்பந்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்த 'இந்தியன் சூப்பர் லீக்' எனும் அமைப்பை உருவாக்கியவர் போன்ற காரணங்களால், இவருக்கு இந்தப் பதவி கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டாலும், சமூக வலைதளங்களில் இதுகுறித்து விமர்சனங்கள் அலையடிக்க ஆரம்பித்துவிட்டன.

நீதா முகேஷ் அம்பானி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x