Published : 12 Sep 2013 04:06 PM
Last Updated : 12 Sep 2013 04:06 PM

மகளிர் மட்டும் : ஆபீஸுக்கு இன்று என்ன டிரெஸ்?

இன்று அலுவலகத்துக்கு என்ன உடை உடுத்தலாம்? - ஒவ்வொரு நாள் காலையிலும் ஆபீசுக்குக் கிளம்பும்போது இது ஒரு கேள்வியாக இருக்கும். எதை அணிவது, எதை அணியக் கூடாது என்று முடிவு செய்வது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு உதவ முன்வருகிறார் ஃபேஷன் கன்சல்டண்ட் தபு!

உடையைத் தீர்மானிப்பதில் ஆண்களைவிடப் பெண்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்களாம். உலகம் முழுவதும் இதுதான் நிலைமை. அலுவலகத்துக்கான டிரெஸ் என்று வரும்போது, பெண்மையின் அழகுக்கும் கவர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மறந்துவிடக் கூடாது. இதற்கு என்ன செய்யலாம்?

ஆபீசுக்கு ஃபார்மல் உடை என்பதுதான் உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்ட டிரெஸ் கோட். இப்போதெல்லாம் பல அலுவலகங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் இன்ஃபார்மல் அல்லது செமி-ஃபார்மல் உடைகளை அணிந்துவர அனுமதிக்கின்றன. ஆனால் ஆபீசுக்கு எப்போதும் கவர்ச்சிகரமான உடைகளைத் தவிர்ப்பதே நல்லது. இது உங்களுக்குக் கண்ணியமான இமேஜைக் கொடுக்கும். தவிர, தேவையில்லாத தொல்லைகளிலிருந்தும் தப்பிக்கலாம்.

முதலில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான அலுவலக உடை பற்றி பார்க்கலாம். நீங்கள் அணிந்திருக்கும் உடைதான் உங்கள் குறித்த மதிப்பீட்டை மற்றவர்கள் மனதில் ஏற்படுத்தும் என்பதால் உடை விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் அணிந்திருக்கும் உடை உங்களுக்கு கம்ஃபர்டபிளாக இருக்கிறதா என்பதும் முக்கியம். உங்களுக்குப் பொருந்தாத உடையை அணிந்துவிட்டு, நாள் முழுக்க அதிலேயே கவனம் இருந்தால் உங்கள் அன்றாட வேலைகளில் நிச்சயம் தொய்வு ஏற்படும். அதனால் எந்த உடையில் நீங்கள் மிக சௌகரியமாக உணர்கிறீர்களோ அதையே அணியுங்கள்.

ஃபிட்டிங்காக உடையணிவது தவறில்லை. ஆனால் அதற்காக மிக இறுக்கமாக ஆடையணிவதும் தவறு. உங்கள் சட்டை பட்டன்களுக்கு இடையே இடைவெளி இருப்பதுபோல இருந்தால் உங்கள் இயல்பான அளவைவிட ஒரு அளவு குறைந்த ஆடையை அணிந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இப்படி இறுக்கமாக உடையணிவதைப் போலவே ஃப்ரீ சைஸ் உடைகளை அணிவதும் தவறு. உங்களுக்குப் பொருத்தமான, சுத்தமான, அயர்ன் செய்யப்பட்ட ஆடைகளை அணியுங்கள். கலைந்த தலையும் சுருக்கம் நிறைந்த ஆடையுமாக அலுவலகத்துக்குள் நுழைந்தால் சக ஊழியர்களின் கேலிக்கு ஆளாக நேரிடலாம்.

அலுவலக சூழலுக்கு உகந்த ஆடைகளை அணிவது அவசியம். எப்போதும் ஃபார்மல் மற்றும் செமி ஃபார்மல் ஆடைகளையே தேந்தெடுத்து அணியுங்கள். சாஃப்ட்வேர், பீ.பி.ஓ மற்றும் மீடியா துறைகளில் இருக்கிறவர்கள் பேண்ட்-ஷர்ட் மற்றும் பேண்ட்-சூட்டை அணியலாம். கழுத்தைச் சுற்றி சில்க் ஸ்கார்ஃப் அல்லது ஸ்டோல் அணியலாம். அதேபோல ஃபார்மல் ஸ்கர்ட்-ஷர்ட் மற்றும் காட்டன் புடவையும் கண்ணியமான இமேஜைத் தரும். மற்றவர்கள் சல்வார் அல்லது சுரிதார் அணிந்து செல்ல்லாம். மினி ஸ்கர்ட் மற்றும் டைட் டாப்ஸ் வகையறாக்களைத் தவிர்க்க வேண்டும். உங்கள் அலுவலகம் அனுமதித்தால் வீன் எண்ட்களில் ஜீன்ஸ்-டாப் அணியலாம். டைட் ஜீன்ஸைத் தவிர்க்க வேண்டும்.

அணிந்திருக்கும் உடைக்கு ஏற்றபடி சிம்பிளாக ஆக்ஸசரீஸ் அணிய வேண்டும். சின்ன பிரேஸ்லெட் மற்றும் மெல்லிய மோதிரம் உங்கள் கம்பீரத்தைக் கூட்டிக் காட்டலாம். பகட்டாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கைகளில் டஜன் கணக்கில் வளையல்களை அடுக்குவதும், காது அறுந்துவிடும் அளவுக்கு மெகா சைஸ் கம்மலை அணிவதும் கூடாது. அதிக சத்தம் வராத கொலுசு அணியலாம். கொலுசு மற்றும் வளையல்களில் இருந்து எழும் சத்தம் பிறரை டிஸ்டர்ப் செய்யாத வகையில் இருக்க வேண்டும். கழுத்தையொட்டி மெல்லிய செயினும் விரும்பினால் அதில் சிறிய டாலரும் கோர்த்து அணியலாம். நகைகள் அணிந்து செல்ல வேண்டியது முக்கியம் என்றால் முத்துக்கள் பதித்த மாலையை அணியலாம். இது எந்தவித ஆடைக்கும் பொருந்திப் போவதுடன் உங்கள் தோற்றத்தையும் ரிச்சாக காட்டும். ஸ்டிராப் வைத்த ஷூக்களைத் தவிர்த்து கால் முழுக்க கவர் செய்கிற ஷூக்களை அணியலாம். பாயிண்ட் ஹீல் வகையறாக்கள் முதுகுவலியை ஏற்படுத்தும் என்பதால் மைல்டான ஹீல் வைத்த செருப்புகளை அணிவது நல்லது. மெகா சைஸ் ஹேண்ட் பேகை விட உங்கள் பொருட்களை வைக்கப் போதுமான அளவில் இருக்கும் சின்ன ஹேண்ட் பேக் நல்லது. அதேபோல மணிகள் கோர்க்கப்பட்ட ஃபேன்ஸி ஹேண்ட் பேக்குகளைத் தவிர்க்க வேண்டும்.

சோர்வான அப்ரோச் தரும் டல் கலர் ஆக்ஸசரீஸைத் தவிர்ப்பது நல்லது. அதற்காக கண்ணை குருடாக்கும் பளீர் நிறங்களுக்கும் ஆதரவு தரக்கூடாது. உங்களை பெப்பியாக காட்டும் பிங்க் மற்றும் மஞ்சள் நிறங்களையும் தவிர்க்க வேண்டும். கறுப்பு, வெள்ளை, கிரே, நேவி போன்ற நிறங்கள் நல்லது. நீங்கள் அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்ற அல்லது பொருந்திப் போகிற நிறத்தில் உங்கள் ஷூ அல்லது ஹேண்ட் பேக் இருந்தால் அந்த மிக்ஸ் அண்ட் மேட்ச் காம்பினேஷன் நிச்சயம் பர்ஃபெக்ட் லுக்ட் தரும். சிம்பிளான சிகையலங்காரம் உங்கள் மதிப்பைக் கூட்டும். நீளமான கூந்தல் இருந்தால் சாதாரண பின்னலே போதுமானது. இல்லையெனில் வெறுமனே ரப்பர் பேண்ட் மட்டும் அணியலாம். இன்ச் கணக்கில் மேக் அப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஹேர் ஸ்பிரே மற்றும் பெர்ஃபியூம் வகையறாக்களையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மெல்லிய நறுமணம் தரும் பெர்ஃபியூம் போடுவதும் தனி ஸ்டைல்!

ஆடையும் அலங்காரமும் எப்படி உங்கள் இமேஜை முன்னிருத்துகிறதோ அதேபோல உங்கள் சுத்தமும் உங்களின் மதிப்பீட்டை மாற்றும். சுத்தமான நக பராமரிப்பு, அலைபாயாத கூந்தல், மூக்கை உறுத்தாத பாடி ஸ்பிரே போன்றவையும் உங்கள் மீதான பிறர் பார்வையை மாற்றும். உங்கள் வயதும் அதற்கேற்ப நீங்கள் அணிகிற உடையும் ஒன்றுக்கொன்று பொருந்திப் போக வேண்டும்.

உங்களது தோற்றம்தான் உங்கள் கேரக்டரை முன்னிறுத்தும். சூழலுக்குத் தகுந்தபடி ஆடை அணிந்து சென்றால் உங்கள் சக ஊழியர்கள் உங்களை கண்ணியமாக பார்ப்பதுடன் உங்கள் டிரெஸ்ஸிங் சென்ஸ் குறித்துப் புகழவும் செய்வார்கள். கவலையில்லாமல் கலக்குங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x