Published : 26 May 2017 09:56 AM
Last Updated : 26 May 2017 09:56 AM
நகரங்களின் பரபரப்பான சாலைகளில் ஆண்கள் பைக்கில் போவதை யாரும் வாயைப் பிளந்துகொண்டு பார்ப்பதில்லை. அதுவே ஒரு பெண் பைக்கில் சென்றால் போதும். எல்லோரது கவனமும் அந்தப் பெண்ணின் மீதுதான் பதியும். பெண்ணாகப் பிறந்தால் பைக் ஓட்ட கூடாது என்று ஏதேனும் சட்டம் உண்டா என்ன?
ரன்னிங், ஜாக்கிங் , யோகா போன்று பைக் ரைடிங்கும் இக்காலப் பெண்களில் சிலருக்கு சாதாரண விஷயமாகிவிட்டது. பெண்களுக்காகச் சென்னையில் 'பைக்கர் பேப்ஸ்' ( biker babez) என்னும் பெயரில் பைக் ரைடிங் கிளப் ஒன்று செயல்பட்டுவருகிறது.சௌந்தரி சிண்டி என்பவர் இந்த கிளப்பை, பைக் மீது ஆர்வம் கொண்ட பெண்களுக்காக 2013-ம் ஆண்டில் தொடங்கியிருக்கிறார். இவர் தொழில்முறைப் பயிற்சி பெற்ற பைக் ரேஸர்.
சிண்டி தனது 20 வயதில் பைக் ரேஸிங் சாகசங்களில் ஈடுபட ஆரம்பித்தார். 2013-ம் ஆண்டில் இவர் சந்தித்த பெரும் விபத்து காரணமாக முழுமையாக 6 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று. ‘பைக்கர் பேப்ஸ்’ கிளப்பை ஆரம்பித்த பிறகு அதற்கென ஃபேஸ்புக்கில் தனிப் பக்கத்தையும் உருவாக்கினார். இந்தப் பக்கத்துக்குக் கிடைத்த வரவேற்பால் ஊக்கம் பெற்றிருக்கிறார். “அந்த ஊக்கம் காரணமாகவே மீண்டும் என் இலக்கை நோக்கிச் செயல்பட முடிந்தது” என்கிறார் இவர்.
சௌந்தரி சிண்டி பல சாதனைகள் படைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஹோண்டா ஒன் மேக் சாம்பியன்ஷிப் இரண்டாம் சுற்றில் வெற்றிபெற்றிருக்கிறார். பெங்களூருவில் நடைபெறும் (vroom) ட்ராக் ரேஸிங்கில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். தன் முதல் தலைக் கவசத்தை முன்னால் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிடம் பரிசாகப் பெற்றார். சிறு வயதிலிருந்தே பைக் என்றால் அவருக்குக் கொள்ளை பிரியம். சாலையில் பைக் ஓட்டிச்செல்லும்போது தனித்துத் தெரிவதால் பைக் சாகசங்களில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று என்றும் அதனாலாயே பைக் ரேசர் ஆனதாகவும் சொல்கிறார்.
2013-ம் ஆண்டு இரண்டு பெண்களுடன் ஆரம்பிக்க பட்ட கிளப்பில் இன்று 12 பெண்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.
“பெண்கள் பைக் ரேஸிங் அதிகமாக ஈடுபடாமலிக்க ஆண்களே காரணம். பெண்கள் பைக் ஓட்டிச் செல்வதைக் கேலி செய்வது, குடும்ப ஆதரவு இல்லாமல்போவது போன்றவையும் காரணங்கள். பொண்ணுன்னா சமையல் கத்திட்டு கல்யாணம் செய்யணும் என்றே சொல்லுவாங்க” என்கிறார் ஸ்வேதா. இவர் பைக்கர் பேப்ஸ் கிளப்பில் உறுப்பினர். ஏழாம் வகுப்பு படிக்கும்போதே பைக் ஓட்டத் தொடங்கிவிட்ட ஸ்வேதா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். பைக் மீது கொண்ட தணியாத ஆசையாலேயே பைக் ரைடராக உள்ளார்.
இந்த கிளப்பின் மற்றொரு முக்கிய உறுப்பினர் சோஃபி. இவர் கடந்த 11 வருடங்களாக பைக் ரேஸிங்கில் ஈடுபட்டுவருகிறார். "முதலில் சமுதாயம் மாற வேண்டும் அப்போது தான் குடும்ப ஆதரவை எதிர்பார்க்க முடியும், ரேஸிங் என்பது ஆண்களுக்கு மட்டுமே என்ற தோற்றம் மாற வேண்டும்" என்று கூறுகிறார் சோஃபி.
இன்னும் பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசை கொண்ட பல பெண்கள் யாரும் எதுவும் சொல்வார்களோ எனப் பயந்தே வெளிவராமல் இருக்கிறார்கள். அந்தப் பயத்தை எல்லாம் எறிந்துவிட்டு அவர்கள் வெளிவரும் காலம் தொலைவில் இல்லை. விண்வெளிப் பயணத்துக்குச் சென்ற பெண்களால் வீதியில் பயணம் போக முடியாதா என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT