Published : 21 Oct 2016 10:38 AM
Last Updated : 21 Oct 2016 10:38 AM

காதல் வழிச் சாலை 05: திரும்பத் திரும்பக் காதலிக்கலாமா?

அந்த இளைஞரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். பேயறைந்தவர் போல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தார். ஒரு பெண்ணின் பெயரைத் திரும்பத் திரும்ப உச்சரித்துக்கொண்டிருந்தரர். “இவன் சரியா தூங்கி மூணு நாளாச்சு சார். வீட்டுக்கே வராம எங்கேயோ சுத்திக்கிட்டு இருந்தான். வேலையை விட்டு நின்னுட்டான். தேவையில்லாத நிறைய மாத்திரைகளை பைக்குள் வெச்சிருந்தான். தற்கொலை பண்ணிக்கப்போறானோன்னு பயமா இருக்கு. இவன் ஒரு பொண்ணை காதலிக்கறான்னு எங்களுக்குத் தெரியவந்தது. அதுல ஏதாவது பிரச்சினையான்னும் தெரியலை. எங்க பையனை மீட்டுக்கொடுங்க சார்” என்று கலங்கியபடியே சொன்னார்கள் அந்த இளைஞனின் அப்பாவும், அண்ணனும்.

அந்த இளைஞரின் மொபைலை எடுத்துக் காட்டினார் அவருடைய அண்ணன். “நான் சாகப் போகிறேன். எனக்கு நீ வேண்டும். என்னை நீ புரிந்துகொள்ளவில்லை. நான் உன்னை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்கிறேன். நீ இல்லாமல் நான் இருக்கமாட்டேன். நான் எங்கோ கண் காணாத இடத்துக்குப் போகிறேன் சாவதற்கு. என் பிணத்தைப் பார்க்கவாவது நீ வருவாயா மாட்டாயா?” - இப்படியான மெசேஜ்கள் நிறைந்திருந்தன. காதல் விவகாரங்களில் இது சகஜம்தான். ஆனால் இந்தக் குறுந்தகவல்களின் எண்ணிக்கை சுமார் இருநூறைத் தாண்டியிருக்கிறது, அதுவும் இரண்டே நாளில். அது இயல்பில்லை, அசாதாரண நடத்தை!

“அந்தப் பொண்ணைப் போட்டு டார்ச்சர் செய்திருப்பான் போல சார். அவங்களும் இவனைக் காதலிக்கறாங்க. ஆனால் சமீபகாலமாக இவன் ரொம்ப தொந்தரவு தர்றான்னு தோணுது. ஒரே நாளில் நூத்துக்கணக்கில் மெசேஜ் அனுப்பறது. நிமிஷத்துக்கு நிமிஷம் போன் பண்றது, அவங்க வேலை செய்யற ஆபீஸுக்குத் தொடர்ந்து ஃபேக்ஸ் குடுத்துட்டே இருக்கறதுன்னு இவனோட தொந்தரவு எல்லை மீறியிருக்கு. ரெண்டு பேருமே ஒருவரையொருவர் புரிஞ்சிக்கிட்டு காதலிக்கறபோது இவன் ஏன் இந்த மாதிரி நடந்துக்கறான்னு புரியலை” என்று வருத்தப்பட்டார் அவருடைய அண்ணன். அப்பாவும் அண்ணனும் பேச, அந்த இளைஞரோ எந்த உணர்வுமின்றி விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தார்.

ஆட்டிப்படைக்கும் அதீத உணர்வு

ஒரு விஷயம் நமது எண்ண வெளியெங்கும் நிறைந்திருப்பது, வேறு எதையும் ஒரு பொருட்டாக எண்ணத் தோன்றாமல் சமூகம், குடும்பம், தொழில் என எல்லாவற்றையும் புறந்தள்ளி ஒரு நபரைப் பற்றியே மீண்டும் மீண்டும் எழும் ஆரோக்கியமற்ற உந்துதலான உணர்வுகள் போன்றவற்றை ஆங்கிலத்தில் ‘அப்செஷன்’ என்று சொல்வார்கள். தான் நேசிக்கும் ஒரு பெண் அல்லது ஆணிடத்தில் இதுபோன்ற அசாதாரணமான உணர்வுகளைச் செலுத்தித் தானும் நிம்மதி இழந்து அடுத்தவரையும் உயிரோடு கொல்லும் இந்த விசித்திரக் காதலே ‘அப்செஷனல் லவ்’. அந்த இளைஞர் இப்படி ஒரு உணர்வுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டேன்.

துன்புறு காதல்

கீழ்வரும் அறிகுறிகளைப் பாருங்கள்:

# தாழ்வு மனப்பான்மை நிறைய இருக்கும்.

# ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். உதாரணமாக, ‘நீ என்னைக் காதலிக்கிறாய்தானே?’ என்று தினமும் நாற்பது முறையாவது கேட்பது.

# திரும்பத் திரும்பக் கைப் பேசியில் அழைப்பது, குறுந்தகவல் அனுப்புவது. ஒன்று, தமக்குப் பிடித்தவரின் நேர்மறை விஷயங்களைச் சிலாகித்துப் பேசுவது. இல்லையென்றால் அவரின் எதிர்மறைப் பக்கங்களைப் பற்றியே பேசி இம்சிப்பது. இப்படித்தான் இருப்பார்களே ஒழிய நடுநிலைக் கண்ணோட்டமே இருக்காது.

# நேசிப்பவர்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்துகொண்டு அவை கிடைக்காமல் இருக்கச்செய்ய முயல்வது. உதாரணம் பணம், உணவு. # தான் நேசிக்கும் நபருடன் உலகின் எல்லை முடிந்து போவதாகக் கருதுவது. வேலை, ஓய்வு, நட்பு, குடும்பம், கடமை இவற்றையெல்லாம் விலக்கிவைத்து விடுவார்கள்.

# நேசிப்பவரின் அண்மையும் அவரது ‘க்ரீன்’ சிக்னலும் போதும். அதீத சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் பெறுவார்கள்.

# எங்கே கை நழுவிப்போய் விடுவாரோ என்ற பயத்திலும் சந்தேகத்திலும் அனைத்து விதங்களிலும் வேவு பார்ப்பது. ஏதேனும் தவறாகத் தென்பட்டால் எந்த அளவுக்கு வன்முறை என்றாலும் துணிந்து இறங்குவது.

இந்த அறிகுறிகளுடன் ஒரு காதல் பயணிக்கிறது என்றால் அது ஆரோக்கியமானதல்ல. காதல் தன்னலமற்றது. கருணை மிக்கது. தியாகங்கள் நிறைந்தது. நம்மவரின் சுக துக்கங்களை நம்முடையது போல கருதுவது. பொது வாழ்க்கையிலும் நம்மை வெற்றியாளனாக்கி முழு மனிதனாக வாழச்செய்வது.

நிழலும் நிஜமும்

இந்தத் துன்புறு காதலைப் போன்று இம்சைக்கு ஆளாக்குவதல்ல காதல். பெரிய அளவிலான உளவியல் கோளாறுகளின் ஒரு வெளிப்பாடாகவே இந்தத் தொல்லைக் காதலைப் பார்க்க வேண்டும். குடும்பத்தில் யாருக்கேனும் மனக் கோளாறுகள் இருந்தாலும் இப்படி அவர் பாதிக்கப்படச் சாத்தியம் உண்டு. சமூகத்தில் 0.1% பேருக்கு இப்படியான உளவியல் கோளாறுகள் இருக்கின்றன. தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணையோ அல்லது காதலிக்கும் பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்காகவோ கத்தியைத் தூக்கும் வன்முறைகளின் பின்னணியில் இப்படிப்பட்ட உளவியல் பிரச்சினைகள் ஒளிந்திருக்கலாம்.

பல திரைப்படங்களில் காதல் என்ற பெயரால் சித்தரிக்கப்படும் பத்தாம்பசலித்தனங்களின் அடிப்படை இந்த இம்சைக் காதல்தான். திரையில் சுவாரஸ்யமாக இருக்கும், ஆனால் நிஜ வாழ்விலோ இது நோய். மூன்று மணி நேரத்தில் காதலித்து வெற்றி அல்லது தோல்வி பெற்று, வில்லனைக் கொன்று அல்லது தன்னைக் கொன்று முடிந்துவிடுவதல்ல நிஜ வாழ்வின் காதல்.

ஆண், பெண் இரு பாலருமே இந்தத் தொல்லைக் காதலால் பாதிக்கப்படுவதுண்டு. ஆனால் பெண்கள் பெரும்பாலும் தனக்குப் பரிச்சயமானவர்களிடத்திலோ தமக்கு உதவி செய்தவர்களிடத்திலோதான் இப்படி ‘துன்புறு காதலில்’ மாட்டிக்கொண்டுவிடுவார்கள். புதியவர்களிடமோ அறிமுகமில்லாதவர்களிடமோ அவர்கள் இப்படிச் செய்வதில்லை.

எல்லை நல்லது

மேற்சொன்ன இளைஞரின் வாழ்வில் அந்த இளம் பெண்ணின் நிலைமை இன்னும் மோசம். இருவரும் மூன்றாண்டுகளுக்கும் மேலாகக் காதலிக்கிறார்கள். பையன் வீட்டில் திருமணத்துக்கும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் இப்போது மிகுந்த பயத்தில் இருக்கிறார். காதலுக்கும் ஒரு அளவீடு உண்டுதானே? மூச்சுவிட முடியாத அளவுக்கு, காதல் என்ற பெயரில் இப்படி மன ரீதியாகத் துன்பத்துக்கு ஆளானவுடன் அவர் பயப்பட, அதைக்கண்ட நம் இளைஞர் ஏன் என்னை விட்டு விலகுகிறாய் என்று தன் இம்சைகளை மேலும் அதிகரிக்க… இதோ சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டுவிட்டார்.

காதலிக்கிறேன் பேர்வழி என்று ஒரு உறவை ஏற்படுத்திக்கொண்டு அதன் பின்னர் நம்மவரின் உண்மைப் பக்கங்களைக் கண்டு அதிர்ந்து போயிருப்பவர்களுக்காகச் சொல்கிறேன். அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல காதலும் நஞ்சுதான். காதலின் பெயரால் இன்று சமூகத்தில் நிகழும் பல சீரழிவுகளின் பின்னணியில் இதுபோன்ற உளவியல் சிக்கல்களின் பங்கு நிறைய உண்டு. அதற்கெல்லாம் சிகிச்சையும் உண்டு. அதீதத்தின் பெயரால் காதலையும் வதைக்க வேண்டாம், விட்டுவிடுவோம். காதலும் கொஞ்சம் வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே!

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x