Published : 20 Jan 2017 11:42 AM
Last Updated : 20 Jan 2017 11:42 AM
ஆறு மாசமா அமைதியா இருந்த வாட்ஸ் அப் குரூப்ல, திடீர்னு ஒரு பொண்ணைச் சேர்த்தது மாதிரி பசங்கள பரபரப்பாக்கிடுச்சி செமஸ்டர் எக்ஸாம். கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காட்டிட்டு, இப்பதான் மறுபடியும் மாமுல் வாழ்க்கைக்குத் திரும்பியிருக்காங்க. அதுக்குள்ள பசங்களுக்கு முக்கியமான அசைன்மெண்ட் குடுத்திருக்காரு பாரதப் பிரதமர், ‘கறுப்புப் பண ஒழிப்புச் செம்மல்’, ‘சமூக வலைத்தளப் போராளிகளின் இடிதாங்கி’ அண்ணன் மோடி.
நவம்பர் 28-ம் தேதி ‘மைன்ட் வாய்ஸ்’ல (மனதின் குரல்னா அதானே?) பேசுன பிரதமர், “மின்னணு பணப் பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்துவதில் இளைஞர்கள் போர் வீரர்கள்போல் செயல்பட்டு மக்களுக்கு உதவணும்”னு சொன்னாரு. பின்னாடியே, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் விஜய் கோயலும் இளைஞர்கள் அங்கம் வகிக்கும் அமைப்புகளுக்குக் கடிதமே அனுப்பிட்டாரு. ‘அப்படியொரு துறை இந்தியாவுல இருக்குதா?’ன்னு அதிகப்பிரசங்கித்தனமாக் கேள்வி கேட்கக்கூடாது.
“மின்னணு பணப் பரிவர்த்தனை பற்றி அறிஞ்ச ஒவ்வொருத்தரும் தேசிய இளைஞர் தினமான ஜனவரி 12-ம் தேதி பாமர மக்கள் பத்துப்பேருக்காவது சொல்லிக் குடுக்கணும். தெரியாத இளைஞர்கள் குறைஞ்சது ஒரு செயல் முறையையாவது கத்துக்கிடணும்”னு அந்தக் கடிதத்துல அமைச்சர் சொல்லியிருக்காரு. பண மதிப்பு நீக்கத்தை எதிர்க்கிறவங்ககூட, இதை வரவேற்கத்தான் வேணும்னு தோணுது. தொழில்நுட்பத்தைக் கத்துக்கிறதும், நாலு பேருக்குச் சொல்லிக்குடுக்கிறது நல்ல விஷயம் தானே? பாவம், இப்பவும்கூட கையில டெபிட் கார்டை வெச்சுக்கிட்டு ஏ.டி.எம்., மெஷின்ல பணத்தை எடுக்கத் தெரியாம உதவிகேட்டு கால்கடுக்க நிற்கிற ஆட்களைப் பார்க்கத் தானே செய்றோம்?
அதுக்கு முன்னாடி, இளைஞர்கள் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு காலேஜூக்குப் போனேன். “நாங்க எல்லாம் போனுக்கு டாப் அப் பண்ண கடைக்குப் போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது. எல்லாமே ‘வால்நெட்’ மூலமாத்தான் பண்றோம். மதியம் காலேஜை கட் அடிச்சிட்டு படத்துக்குப் போகணும்னு வாட்ஸ் அப் குரூப்ல போட்டா போதும், கிளாஸ்க்கு வந்தவன் மட்டுமில்ல... உடம்பு சரியில்லைன்னு லீவு போட்டுட்டு வீட்ல இருக்கிறவனும் கலெக்ட்ரா தியேட்டருக்கு வந்திடுவான். சந்தேகம் கேட்கிறது, அரட்டை அடிக்கிறது, சண்டை போட்டுக்கிறது, கடலை போடுறது, லவ் பண்றது எல்லாமே ஆன்லைன்லதான். என்ன ஒண்ணு, குரூப் மாத்தித் தகவலைப் போட்டுட்டா, சிக்கலாகிடும் அவ்வளவுதான்”னு சொன்னாங்க பசங்க.
ஸ்கூல்ல வாத்தியார் பாடம் நடத்துறப்ப, சத்தமில்லாம பேப்பர்ல எழுதிக்காட்டி நாம பேசுனது மாதிரி, இன்றைய இளைஞர்கள் வாட்ஸ் அப்லேயே பேசிக்கிறாங்க. அதாவது, பணமில்லாப் பரிவர்த்தனை மாதிரி இது காகிதமில்லா செய்திப் பரிவர்த்தனை. கிளாஸ் டெஸ்ட்டுலேயும் அதை அப்ளை பண்ணிட்டாங்க. பிட் அடிக்கிறதுலகூட, ஹார்டு காபியில இருந்து சாஃப்ட் காபிக்கு மாறிட்டாங்கன்னா பார்த்துக்கோங்களேன். செல்போனை மட்டும் சைலன்டா (சைலன்ட் மோடுலதான்) கிளாஸ்குள்ள கொண்டுபோயிடுறாங்க. அப்புறம் என்ன ஏற்கெனவே போட்டோ எடுத்த பக்கங்களை ஈயடிச்சான் காபி அடிச்சுக்கலாம், ‘அவுட் ஆப் கேமரா’வுல இருந்து கேள்வி வந்துச்சுச்சுன்னா இருக்கவே இருக்குது கூகுள். அது கொட்டுற தகவல்களைப் பார்த்துத் தத்துப்பித்துன்னு ஏதாவது எழுதி, ‘நானே யோசிச்சி எழுதுனது மேம்’னு பேரும் வாங்கிடுறாங்க.
ஜியோ சிம் வந்தபிறகு இந்தக் கூத்துகளுக்கு எல்லாம் எல்லையே இல்லாமப் போயிடுச்சி. வீடியோ காலிங்ல பேசுறது, விடிய விடிய ஆன்லைன்ல இருக்கிறதுன்னு அலப்பறை பண்றாங்க. ஹாட்ஸ்பாட்ல போட்டு பக்கத்துல இருக்கிற பசங்களுக் கும், இன்டர்நெட்டை இலவசமாத் தர்றாங்க. வீடியோ குரூப்ல வெறும் பார்வையாளரா இருந்த, அதுவும் செலக்டிவா பார்க்கிற கஞ்சப்பசங்ககூட இப்பப் புதுசு புதுசா வீடியோக்களை அப்லோடு பண்றாங்க. நேயர் விருப்பம் மாதிரி கேட்டு வாங்குறாங்க.
ஹோண்டா 250 சி.பி.ஆர்., யமஹா எஃப்.இசட் மாதிரி 4ஜி போனும் உயர்வர்க்கத்தோடதுங்கிற எண்ணத்தை அம்பானி புரட்சி அடிச்சி நொறுக்கிடுச்சி. அம்மாவ ஐஸ் வெக்கிறதுக்கு ஏதாவது டெலி சீரியல பசங்க ஓடவிட்டு வேடிக்கை காட்டுறதுன்னு ஜமாய்க்கிறாங்க.
ஆக, மோடி சொன்னது மாதிரி நாலு பேருக்குச் சொல்லிக் குடுக்கிறதுக்கான எல்லாத் தகுதியும் பசங்களுக்கு இருக்கு. என்னோட பெர்சனல் அட்வைஸ் என்னன்னா, மற்றவங்களுக்குச் சொல்லிக் குடுக்க வாய்ப்பில்லாட்டியும் குடும்பத்திற்காவது உதவி பண்ணுங்க. என்ன பெரிசா கேட்டுற போறாங்க, ஈபி பில், எல்ஐசி கட்டுறது மாதிரியான வேலையைத்தான் சொல்லுவாங்க. அதைச் சரியாச் செஞ்சா, நாளைக்கே அப்பாவோட பேங்க் அக்கௌண்ட்ல இருந்து பணத்தை ஏதாவது அங்கிளுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ற வாய்ப்பு வரலாம். அப்பாவோட சட்டைப் பாக்கெட்ல இருந்து 50, 100ன்னு உருவுனது மாதிரி, அக்கௌண்ட்ல இருந்து உருவுறதுக்கான வாய்ப்பை காலப்போக்குல அது ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதையும் ஞாபகத்துல வெச்சிக்கோங்க!
ஜெய் ஹோ!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT