Last Updated : 15 Jul, 2016 12:33 PM

 

Published : 15 Jul 2016 12:33 PM
Last Updated : 15 Jul 2016 12:33 PM

சீறும் பெண் புலி: செரீனா வில்லியம்ஸ்

செரீனா வில்லியம்ஸ்... டென்னிஸ் உலகின் பாயும் புலி. சீறி அடிக்கும் சர்வீஸ்களில் முன்னணி வீராங்கனைகளையே பந்தாடிப் புதிய உச்சம் தொட்டவர். தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸூடன் இணைந்து டென்னிஸ் உலகில் புதிய தடத்தைப் பதித்தவர் செரீனா. ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் ஸ்டெபி கிராஃபின் சாதனையைச் சமன் செய்து புதிய மைலகல்லை எட்டியுள்ள செரீனா, தனது வயதுக்கு மீறிய வேகத்துடனும் ஆக்ரோஷத்துடனும் ஜெட் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார். ‘கறுப்பு மின்னல்’ என்று செல்லமாக அழைக்கப்படும் செரீனா, இன்றைய இளம் தலைமுறை வீராங்கனைகளுக்கு ஆதர்ச சக்தியாக உருவெடுத்துள்ளார்.

இன்று டென்னிஸ் உலகில் தனித்தன்மையுடன் உலாவிக்கொண்டிருக்கும் செரீனா வில்லியம்ஸுக்குச் சின்ன வயதில் அவரது அம்மாதான் எல்லாமுமே. ஐந்தாவது பெண் குழந்தையாகப் பிறந்த செரீனா, மூன்று வயது முதலே டென்னிஸ் பேட்டை கைகளில் சுழற்ற ஆரம்பித்துவிட்டார். டென்னிஸ் விளையாட்டை செரீனா, வீனஸ் ஆகியோரின் மனதில் ஆழமாகப் பதிக்க வைத்தவரும் அவரது அம்மா ஓரெஸினி பிரைஸ்தான். இவரும் ஒரு டென்னிஸ் வீராங்கனைதான். செரீனாவுக்கும் வீனஸூக்கும் டென்னிஸ் பயிற்சியாளராக இருந்து அதன் விதையை விதைத்தது இவர்தான். ஆனால், அடுத்தடுத்த பயிற்சிக்காக அமெரிக்காவின் கிராம்டன் நகரில் உள்ள டென்னிஸ் அகாடமியில் செரீனா சேர்ந்த பிறகுதான் அவரது திறமைகள் டென்னிஸ் உலகில் பளிச்சென வெளிப்பட்டன.

1991-ம் ஆண்டில் அமெரிக்க டென்னிஸ் சங்கம் நடத்திய ஜூனியர்களுக்கான போட்டியில் 10 வயது செரீனா வில்லியம்ஸ் களமிறங்கினார். அந்தப் போட்டியில் 43-3 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை வென்று புதிய சாதனை படைத்ததோடு ஃபுளோரிடாவின் நம்பர் ஒன் குட்டி வீராங்கனையாகவும் உருவெடுத்தார் செரீனா. தொழில்முறை வீராங்கனையாக அவர் களமிறங்கியது 1995-ல்தான்.

1996-ம் ஆண்டு செரீனாவுக்கு மறக்க முடியாத ஆண்டு. அந்த ஆண்டு ‘அமெரிடெக் கோப்பை சிகாகோ’ என்ற தொடர் அமெரிக்காவில் நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் தரவரிசைப் பட்டியலில் 304-வது இடத்தில் இருந்தார். இந்தத் தொடரில் 7-வது நிலையில் இருந்த வீராங்கனை மேரி பியர்ஸ், 4-வது நிலை வீராங்கனை மோனிகா செலஸ் ஆகியோருக்கெல்லாம் ‘தண்ணீ’ காட்டினார் செரீனா வில்லியம்ஸ்.

தரவரிசைப் பட்டியலில் பின் தங்கிய நிலையிலிருக்கும் ஒரு வீராங்கனை 10 இடங்களுக்குள் உள்ள வீராங்கனைகளைப் பந்தாடியது இதுதான் முதல் முறை என்ற சாதனை செரீனா வசமானது. அரையிறுதியில் 5-வது நிலை வீராங்கனை லிண்ட்சே டேவன்போர்டிடம் தோற்றாலும், செரீனாவின் தரவரிசை கிடுகிடுவென உயர்ந்தது.

அந்த ஆண்டின் இறுதியில் தரவரிசைப் பட்டியலில் 304-வது இடத்திலிருந்து 99-வது இடத்துக்கு முன்னேறி ஆச்சரியமூட்டினார். இந்தத் தொடர் வருங்காலத்தில் எண்ணற்ற சாதனைகளைப் படைக்கப்போகும் ஒரு வீராங்கனையை அமெரிக்காவுக்கு அடையாளம் காட்டியது.

தொடர்ந்து பல தொடர்களில் விளையாடி வந்த செரீனா வில்லியம்ஸ், 1998-ம் ஆண்டில்தான் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலடி எடுத்து வைத்தார். முதல் ஆண்டு ஆரம்ப சுற்றுகளிலேயே மூட்டையைக் கட்டியவர், 1999-ம் ஆண்டில் முதன் முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று அசத்தினார். இதன்பிறகு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செரீனாவின் கிராஃப் வேகவேகமாக உயர்ந்தது. இடையில் சில ஆண்டுகள் தவிர பெரும்பாலும் எல்லா ஆண்டுகளிலும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டமாவது அவர் வாங்காமல் இருந்ததில்லை.

ஓர் ஆண்டில் நடைபெறும் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 2002 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் தலா மூன்று பட்டங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார் செரீனா. அண்மையில் அவர் வென்ற விம்பிள்டன் பட்டம் 22-வது பட்டமாகும். 22-வது முறையாகப் பட்டம் வென்றதன் மூலம் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீராங்கனைகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்டெபி கிராஃபின் சாதனையைச் சமன்செய்துள்ளார் செரீனா. ஆஸ்திரேலியாவின் மார்க்கெரட் கோர்ட் 24 பட்டங்களுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறார். இன்னும் இந்தச் சாதனையை முறியடிக்க 3 பட்டங்களே தேவை.

வழக்கமாக 30 வயதைக் கடந்த டென்னிஸ் வீராங்கனைகள் கொஞ்சம் தடுமாறுவார்கள். ஆனால், தற்போது 35 வயதாதிவிட்டாலும் செரீனாவின் ஆக்ரோஷம் கொஞ்சமும் குறையவில்லை. 2015-ம் ஆண்டில், 34 வயதான நிலையில், 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று, வெற்றிக்கு வயது ஒரு தடையில்லை என்று ஏற்கெனவே நிரூபித்துக்காட்டியிருக்கிறார் அவர். விம்பிள்டன் பட்டத்தை வென்றதும், “எனக்குப் பசி இன்னும் கொஞ்சமும் அடங்கவில்லை. ஒவ்வொரு வருஷமும் ஒரு பட்டமாவது வெல்ல வேண்டும்” என்று பட்டங்கள் மீதான காதலை உரக்கச் சொன்னார் செரீனா வில்லியம்ஸ். இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டி இன்னும் பாக்கியிருக்கிறது.

எனவே அடுத்த ஆண்டே ஒற்றையர் பிரிவில் அதிக பட்டங்கள் வென்றவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராக செரீனா வில்லியம்ஸ் ஆகலாம்.

செரீனா வில்லியம்ஸ் வெற்றியின் உச்சத்தில் இருக்கும்போதெல்லாம், ஆண் தன்மை கொண்டதுபோல அவரது உடலமைப்பு இருப்பதாகச் சர்ச்சைகள் கிளம்புவது வாடிக்கை. ஆனால், இதுபோன்ற விமர்சனங்களைக் காதில் கொஞ்சமும் வாங்கிக்கொள்ளாமல் வெற்றிகளை வசமாக்கி, கறுப்பு மின்னலாக டென்னிஸ் உலகில் மின்னிக்கொண்டிருக்கிறார் இந்த முடிசூடா ராணி!

சிங்கிள் சிங்கம்!

ஒற்றையர் பிரிவில் 22 பட்டங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ் மட்டுமே சிங்கிளாக முன்னேறிக்கொண்டிருக்கிறார். அதிகப் பட்டங்கள் வென்றவர்களின் பட்டியலில் உள்ள 30 பேரில் 27 பேர் ஓய்வு பெற்றவர்களே.

எஞ்சியிருப்பது அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸூம் மரியா ஷரபோவாவும்தான். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 7 பட்டங்களுடனும், மரியா ஷரபோவா 5 பட்டங்களுடன் பின் தங்கியுள்ளனர். இவர்களுக்கு முறையே 36, 30 வயதாகிவிட்டது. எனவே செரீனா வில்லியம்ஸின், சாதனையை முறியடிக்கப் புதிதாக ஒரு வீராங்கனை வந்தால்தான் முடியும்.

கடந்த வாரம் டென்னிஸ் விளையாட்டின் உச்சமான 'விம்பிள்டன்' போட்டிகளில் குறிப்பிடத்தகுந்த‌ நிகழ்வுக‌ள் நடைபெற்றுள்ளன. முக்கியமாக ‘ப்ரெக்ஸிட்' நிகழ்வுக்குப் பிறகு இந்தப் போட்டி நடைபெற்றுள்ளது. அதன் காரணமாக பரிசுத் தொகையிலும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு 'வெட்டு' விழுந்தது.

இந்தப் போட்டியில், செரீனா வில்லியம்ஸ் 22வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்று, ஸ்டெஃப்பி கிராஃப் சாதனையைச் சமன் செய்ய, இன்னொருபுறம் வில்லியம்ஸ் சகோதரிகள் மகளிர் இரட்டையர் பிரிவில் கோப்பை வென்றிருக்கிறார்கள்.

ஆண்கள் பிரிவில், ஏழு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரரை, 25 வயதான மிலாஸ் ரானிக் ரானிக்கை தோற்கடித்தார். ரவோனிக்கை இறுதி ஆட்டத்தில் 29 வயதான ஆண்டி முர்ரே தோற்கடித்து இரண்டாவது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x