Published : 30 Jun 2017 11:15 AM
Last Updated : 30 Jun 2017 11:15 AM
சமீபத்திய வைரல் வீடியோ ‘பிரியாணி பக்தாஸ்’. ரம்ஜான் திருநாளை மையமாகக் கொண்டு வெளியிட்ட வீடியோ அது. அந்த வீடியோவை இதுவரை பத்து லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இந்த வீடியோவை நடிகையும் கர்நாடக அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா டிவிட்டரில் பகிர்ந்திருந்ததை NYK அணியினர் பெருமையாகச் சொல்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் இணைந்து நடத்தும் யூடியூப் சேனலில்தான் இந்த வீடியோ வெளியானது.
அந்த யூடியூப் சேனலின் பெயர் ‘நீ யாருடா கோமாளி’ (Nee Yaaruda Komali). கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சேனல் சுமார் 3 ஆயிரம் சந்தாதாரர்களுடன் வளர்ந்துவருகிறது. இந்த சேனலை பிபியன், ஜெயந்த், மதன், தீபன், தினகரன் ஆகிய ஐந்து நண்பர்கள் சேர்ந்து உருவாக்கினார்கள். இவர்களைச் சுருக்கமாக NYK டீம் என்று அழைக்கிறார்கள். ஐந்து பேருமே கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள்தான்.
கடந்த ஜனவரியில் ஜல்லிக்கட்டு விவகாரம் வெடித்தபோது, முதல் வீடியோவை இவர்கள் வெளியிட்டார்கள். ஜல்லிக்கட்டு தடையைப் பற்றி ஒரு மாட்டின் கருத்து என்ன என்பது பற்றிய பேட்டிதான் வீடியோவின் கான்செப்ட். அந்த வீடியோ சமூக ஊடகத்தில் அதிகமாகப் பகிரப்பட்டுக் கவனம் பெற்றது. அதன் பின்னர் அடுத்தடுத்து வீடியோக்களை எடுக்க ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். 8 மணி நேரம் கல்லூரியில் செலவிட வேண்டியிருப்பதால் பல வீடியோக்களைக் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே எடுத்துவிடுகிறார்கள்.
வாராவாரம் ஷூட்டிங், ஆலோசனைகள், எடிட்டிங் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த சேனலின் டீமுக்கு பிபியன் வீடுதான் இன்டோர் ஸ்டுடியோ. வேலை அதிகமாக இருந்தால் எல்லோரும் பிபியன் வீட்டிலேயே தூங்குவது வழக்கம். அப்படி ஒரு நாள் கலகல டீம் பிபியன் வீட்டில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த வேளையில் சந்தித்தோம்.
“பிபியன் ஒரு நல்ல நடிகர், எடிட்டர். ‘ஆண்டிராய்ட் அம்மா அட்ராசிட்டி’ வீடியோவில் அம்மாவாக பிபியன் நடித்திருந்தது அனைவரையும் ஈர்த்தது” என்று எடுத்த எடுப்பிலேயே பிபியனுக்கு நற்சான்றிதழ் வாசித்தார் தீபன்.
“தீபன்தான் எல்லா வீடியோவுக்கும் கேமராமேன். பாலுமகேந்திராவின் தீவிர பக்தர். அதிக பெண் தோழிகள் உள்ளவர், ஃபேஸ்புக்கில்கூட இவருக்கு ஃபேன் பேஜ் உள்ளது” என்று தீபனை ஒட்டுமொத்த டீமும் கலாய்த்தது.
இதைக் கேட்டு விழுந்துவிழுந்து சிரித்த ஜெயந்தைப் பார்த்து, ‘ப்ளே பாய் கதையைச் சொல்லவா’ என்று தீபன் சைகைக் காட்ட ஜெயந்த் சரண்டரானார். ஆனால், NYK டீமின் முதுகெலும்பு ஜெயந்த் என்று ஒட்டுமொத்த டீமும் தலையாட்டி ஆமோதிக்க, “இவர்களுக்காகத் தவ வாழ்க்கை வாழ்கிறேன்“ என்று அணியினரைச் சீண்டினார் ஜெயந்த்.
அடுத்து டீமின் பேச்சு மதன் பக்கம் திரும்பியது. பிபியனின் அப்பா ஏர்போர்ஸில் வேலை செய்து வருகிறாராம். மதன் ஏர்போர்ஸ் தேர்வு எழுதுவதற்காக பிபியனின் அப்பாவைச் சந்திக்க வருவாராம். இரண்டு முயற்சியிலும் ஃபெயிலாகப் போன மதன் அந்தக் கோபத்தில் NYKவை அழிக்க வேண்டும் என்ற முடிவில் எழுதியதுதான் ‘மலபார் மச்சான்’ வீடியோ. அது எதிர்பாராமல் அதிகமாகப் பகிரப்பட்ட வீடியோவானது என்று மதனை நண்பர்கள் பாராட்டினர்.
இந்த வீடியோக்களுக்கெல்லாம் இயக்குநர் தினகரன். இவர் உலக சினிமா பைத்தியம். புத்தகப் புழு. வீடியோவில் கேம்யோ பாத்திரத்தில் வருவார். ‘தண்டகருமம்’ என்ற இவரது பஞ்ச் ஹிட்டானது. ‘லைஃப் ஆப்டர் இன்ஜினீயர்’ வீடியோவில் தன் காரைத் திருட வரும் பிபியனை முறைத்தபடியே ஓடவிடும் காட்சி, அட்ராசிட்டி’ என தினகரனை தூக்கிவைத்து பேசினார்கள்.
“திரைப்படம்தான் எங்க எல்லாருக்கும் விருப்பம். வீடியோ எங்க ப்ரோஃபைலுக்காகப் பண்ணிட்டு இருக்கோம். எதிர்காலத்துல சந்தாதாரர்கள் அதிகமானா இணைய தொடர் செய்யும் ஐடியாவில் இருக்கோம். நிச்சயம் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை” என்று ஐவவரும் கோரஸாக அடித்துச் சொல்கிறார்கள்.
கல்லூரி வாழ்க்கைக்கு இடையே கலாய்ப்பும் வீடியோவுமாகத் திரிகிறது இந்த ஐவர் கூட்டணி.
- என்.எஸ். அஷ்வின்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT