Published : 20 Jan 2017 11:41 AM
Last Updated : 20 Jan 2017 11:41 AM
பூமியிலிருந்து 35,000 அடி உயரத்தில் இருந்து விமானத்தில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். மாபெரும் ஆறுகளில் ஒன்றான கங்கை முழுவதும் 2,665 கி.மீ. தொலைவுக்கு பேட்லிங் செய்துவிட்டு சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன். நானும் ஷில்பிகா கௌதமும் இணைந்து, உலகிலேயே முதன்முறையாக ஒரு ஆற்றின் நதிமூலம் தொடங்கிக் கடலில் சங்கமிக்கும் புள்ளிவரை பேட்லிங் மூலமாகவே கடந்திருக்கிறோம்.
இந்த மிக நீண்ட பேட்லிங்கை முடிப்பதற்கு முன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 29 நீர்நிலைகளில் நான் பேட்லிங் செய்திருக்கிறேன். ஐந்து பேட்லிங் சாதனைகளையும் படைத்திருக்கிறேன். இந்தப் பின்னணியில் மிகப் பெரியதொரு பேட்லிங் பயணம் வழியாகப் புதிய நிலப்பகுதிகளைத் தேட வேண்டும் என்ற பேரார்வம் நீண்ட நாட்களாகவே என் மனதில் இருந்தது. பேட்லிங் மூலமாக நீர்நிலைகளைத் தூய்மையாகப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வைப் பரவலாக்க முடியுமென நான் நம்புகிறேன்.
மாபெரும் கங்கை
தண்ணீர் பாய்வதில் உலகிலேயே மிகப் பெரிய மூன்றாவது ஆறு கங்கை. இந்த ஆறு 50 கோடி பேரை, கிட்டத்தட்ட இந்தியாவின் மக்கள்தொகையில் பாதியை வாழ வைக்கிறது. பல்வேறுபட்ட மனிதர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக இந்த ஆற்றை நம்பியிருக்கிறார்கள். அதன் கரையிலேயே பல கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய ஒரு நாள்கூட கங்கை நீரின்றிக் கழிவதில்லை. மனிதர்கள் மட்டுமில்லை 140 வகையான மீன் வகைகள், 90 வகை நீர்நில வாழ்விகள், குறிப்பாக அழியும் ஆபத்திலுள்ள கங்கை ஆற்று ஓங்கில் (டால்பின்) போன்றவற்றின் வாழிடம் கங்கைதான்.
நான் ஒரு ‘பேட்லிங் சாகச விரும்பி’ என்பதைத் தாண்டி, ஒரு நில அமைப்பியல் நிபுணர், இயற்கை ஆர்வலர். கங்கையின் ஒட்டுமொத்தத் தொலைவுக்கும் பேட்லிங் செய்வதன் மூலமாக அந்த ஆற்றில் வாழும் காட்டுயிர்களின் தற்போதைய நிலை, தண்ணீரின் தரம், அதைச் சார்ந்து வாழும் மக்கள், பாசன வசதி, நில அமைப்பியல், ஆற்றின் இயங்குமுறை, பண்பாட்டு முக்கியத்துவம், பொருளாதாரம், நீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் அக்கறை எனப் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக என்னால் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.
3 நாள் திருப்பம்
‘அவுட்டோர்' என்ற இதழில் ‘கங்கை எஸ்.யு.பி.’ சாகசப் பயணம் தொடர்பாக வாசித்த உடனேயே, அந்தக் குழுவினரைத் தொடர்புகொண்டேன். என்னுடைய முதல் மின்னஞ்சலில் இருந்து வெறும் மூன்றே நாளில் இந்தப் பயணக் குழுவினருடன் இணைந்துகொண்டேன். முதலில், அலுவலகத்தில் மூன்று மாதங்களுக்குச் சம்பளமில்லா விடுப்பு எடுக்க அனுமதி பெற்றேன். பிறகு ‘பெர்சனல் லோன்’ பெற்றேன். இந்தப் பயணம் முழுக்க முழுக்க சொந்தச் செலவில் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயணத்தில் நானும் இணைந்துகொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தேன்.
கங்கை ஆற்றில் பேட்லிங் செய்வதற்கு வசதியாகத் தென்மேற்குப் பருவமழை பெய்த பிறகும், கோடை தொடங்குவதற்கு முன்னதாகவும் இருக்கும் காலத்தைத் தேர்ந்தெடுத்தோம். அக்டோபர் தொடங்கி ஜனவரி முதல் பாதியில் முடிப்பது என்று திட்டமிட்டோம்.
கடைசி கட்டம்
கொல்கத்தாவிலிருந்து கங்கா சாகர் வரையிலான எங்களுடைய கடைசி கட்டப் பயணத்தில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தோம். மேற்கு வங்கத்தில் இது அறுவடை காலம். ராமாயணம், நாட்டுப்புறக் கலைகள் போன்றவை அரங்கேறும் நேரமும்கூட. இதனால் ஹூக்ளி (கங்கை) ஆற்றில் பேட்லிங் செய்வதும் பிறகு ஓய்வெடுப்பதும் மற்ற இடங்களைவிட சிக்கல் நிறைந்ததாகவே இருந்தது.
இரவில் நன்றாகத் தூங்க முடியாததால் ஏற்பட்ட மனஅழுத்தம், பகலில் ஆற்றில் வரும் நிலக்கரி சரக்குப் படகுகளை எதிர்கொள்ளும்போது அதிகரித்தது. அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரி எடுத்துச் செல்வதே இந்தப் படகுகளின் வேலை. இந்த நிலக்கரி சரக்குப் படகுகள் மிகப் பெரியவை. ஹூக்ளி பெரிய உள்நாட்டு நீர்ப்பாதை என்பதால், பெரிய படகுகளும் அதில் எளிதாகப் போக முடிகிறது. அவை ஏற்படுத்தும் அலைகளும் மிகப் பெரியவை.
கலெக்டரைப் பார்த்தோம்
இவற்றையெல்லாம் கடந்து கொல்கத்தாவில் பேட்லிங் செய்து கொண்டிருந்தோம். ஹூக்ளியின் கரையில் ஒரு நாள் காலை, ஒருவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தார். நாங்கள் கரையேறி அவரிடம் விசாரித்தபோது, அவர்தான் கலெக்டர் என்பதை அறிந்து வியந்து போனோம். எங்களுடைய பயணம் பற்றியும், கங்கா சாகர் செல்ல வேண்டியதற்குத் தேவையான அரசு அனுமதி பற்றியும் அவரிடம் கூறினோம்.
கங்கா சாகர் மேளா 11-ம் தேதி தொடங்குவதால், அதற்குள் பயணத்தை முடிக்க வேண்டும் என்றார். அது மட்டுமல்லாமல் கங்கா சாகரை அடைவதற்கான வழக்கமான கடல் பாதை வழியே செல்வது சாத்தியமில்லை. அந்தப் பகுதி மிகப் பெரிய கப்பல்கள் வரும் பகுதி என்றும் அவர் தெரிவித்துவிட்டார்.
கங்கா சாகரில் சங்கராந்தி (நம்முடைய பொங்கல்) அன்று 15 லட்சத் துக்கும் மேற்பட்டோர் கூடுவார்கள். அது கங்கா சாகர் மேளா விழா. எங்களுடைய பேட்லிங் பயணம் அதற்கு முன்னால் நிறைவடைந்தால்தான், பிரச்சினையில்லாமல் இருக்கும்.
அந்த மூன்று நாட்கள்
கொல்கத்தாவிலிருந்து கங்கா சாகர் முனைக்கு இடையிலான தொலைவு 120 கி.மீ. கடல் பகுதியான இந்தப் பகுதியைக் கடக்க, எங்களுக்கு இருந்ததோ வெறும் மூன்றே நாட்கள். கங்கா சாகர் மேளா தொடங்குவதற்குள் அந்தப் பகுதியைச் சென்றடைய வேண்டும் என்பது மிகப் பெரிய நெருக்கடியாக இருந்தது. பயணத்தை நிறைவு செய்வதற்குத் தடையாகப் பல்வேறு தடங்கல்கள் இருந்தன.
குறிப்பாகக் கடல் அலை குறிப்பிட்ட நேரத்துக்கு மேலேறி வரும். பிறகு வற்றி உள்வாங்கிச் செல்லும். கடல் அலை ஏற்றத்தின்போது பேட்லிங் செய்ய முடியாது, பேட்லிங் பலகை கவிழும் சாத்தியம் அதிகம். கடல் அலை வற்றி உள்வாங்கும்போது பேட்லிங் செய்வது எளிது. இந்த நேரத்தில்தான் கப்பல்களையும் செலுத்த முயற்சிப்பார்கள். பிரம்மாண்டக் கப்பல்களுடன் போட்டி போட்டு பேட்லிங் செய்வது சாத்தியமில்லை. இதையெல்லாம் திட்டமிட்டுவிட்டு, ஹால்டியாவிலிருந்து பயணத்தைத் தொடங்கினோம்.
சைக்கிள் கடன்
ஷில்பிகாவுக்குக் கடலில் பேட்லிங் செய்து பழக்கம் இல்லை. கடலில் பேட்லிங் செய்வது அவருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. எனக்குக் கடலில் பேட்லிங் செய்து அனுபவம் இருந்ததால், பெரிய பிரச்சினையில்லை. ஜாக்கிரதையாகவே வழிநடத்தினேன். கோரமாரா பகுதியில் பெரும் சுழலில் சிக்கிக்கொள்வதில் இருந்து தப்பினோம்.
கடைசியாக கங்கா சாகர் தீவின் கிழக்கு முனையைத் தொட்டு, அடுத்த முனைக்கு பேட்லிங் பலகைகளைக் கைகளில் தூக்கிச் செல்வது என்று முடிவு செய்தோம். சூரியன் மறைவதற்குள் மற்றொரு முனையைத் தொட்டாக வேண்டும். தீவின் அகலத்தை விரைவாக நடந்து கடப்பது, அவ்வளவு எளிதில்லை. அந்தத் தீவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம் சைக்கிளைக் கடன் வாங்கி கங்கா சாகர் முனையை நோக்கி சைக்கிளை மிதித்தோம்.
திடீர் தடங்கல்
கடைசியாக கங்கா சாகர் முனையைத் தொட்டபோது, பேட்லிங் செய்வதற்கு கொல்கத்தா துறைமுகக் கழகம் அனுமதி மறுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் கொல்கத்தா கலெக்டரைக் கைபேசியில் பிடித்து அனுமதி வாங்கினோம். ஜனவரி 11-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு கங்கா சாகர் முனையில் பேட்லிங் செய்து கங்கை ஆற்றின் முழு நீளத்தையும் பேட்லிங் மூலம் கடந்த சாதனையைப் படைத்தோம்.
இந்தப் பயணம் முழுக்க நடந்தோ, சைக்கிள் மூலமாகவோ, பேட்லிங் மூலமாகவோ முழுக்க முழுக்கப் பசுமை வழியில் மட்டுமே கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிறகு எங்களுக்குத் துணையாக வந்த படகில் புறப்பட்டு மீண்டும் கொல்கத்தாவை அடைந்தோம்.
உலகிலேயே கங்கை ஆற்றின் மொத்தத் தொலைவையும் பேட்லிங் மூலம் கடந்த முதல் பயணம் இது. வெற்றிகரமாகவும் புதிய சாதனையுடனும் இந்த சாகசப் பயணத்தை நிறைவு செய்திருக்கிறோம். இந்தச் சாதனைக்கான லிம்கா, கின்னஸ் சாதனைச் சான்றிதழ்கள் விரைவில் எங்களை வந்தடையும். இந்தப் பயணம் முழுக்க என்னுடன் பயணித்து, உற்சாகம் அளித்த வாசகர்களான உங்களுக்கும் மிக்க நன்றி.
புதிய சாகசத்தோடு பிறகொரு முறை சந்திப்போம்.
(நிறைவடைந்தது)
குமரன் தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com
எழுத்தாக்கம்: ஆதி வள்ளியப்பன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT