Published : 26 May 2017 10:00 AM
Last Updated : 26 May 2017 10:00 AM
ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு முன்பு நான் குடியிருந்த ‘ப’ வடிவ அடுக்குமாடிக் குடியிருப்பில், 30 வீடுகள் இருக்கும். ஒரு நாள் காலை, நான் சீக்கிரமே எழுந்து வெளியே வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக எங்கள் பிளாக்கில், பெரும்பாலும் பெண்கள்தான் கீழேயிருக்கும் அடிபம்பில் தண்ணீர் எடுத்து வருவார்கள். ஆனால் அன்று, கல்லூரி இளைஞர்கள் அனைவரும், முகத்தில் சந்தோஷத்துடன், காலிக் குடத்துடன் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தார்கள். நான் உஷாராகி, “ஸம்திங் ஹேப்பனிங் இன் பைப்படி” என்று இரண்டு குடங்களுடன் படிகளில் இறங்கினேன்.
கீழேயிருந்த வட்ட வடிவத் தண்ணீர் டேங்கில் இயக்குநர் ஷங்கர் உட்கார்ந்திருக்க அங்கு படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. ஷங்கரைப் பார்ப்பதற்கு, நம்மாட்கள் இவ்வளவு வேகமாக வர மாட்டார்களே என்று சுற்றிலும் பார்த்தேன். எனது கணிப்பு பொய்யாகவில்லை. தண்ணீர் டேங்குக்குச் சற்றுத் தள்ளி, ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில், நடிகை ஜெனிலியா தேவதைகளின் ஆடை நிறமான வெள்ளை உடையுடன் உட்கார்ந்திருந்தார். அவரின் தலைமுடியில், சிகையலங்கார நிபுணர் ஏகப்பட்ட சிக்கல்கள் செய்து, வர்ணிக்கவே முடியாத ஒரு டிசைனில் தலைமுடி இருந்தது.
ஜெனிலியா அருகில் நடிகர் சித்தார்த்தோ பரத்தோ அமர்ந்திருந்தார் என்று நினைக்கிறேன். சித்தார்த் அல்லது பரத் ஏதோ சொன்னதற்கு ஜெனிலியா சத்தமாகச் சிரித்தபோது, பளீரென்று மின்னல் அடித்தது போல் அந்த இடமே ஒளி(லி)மயமாக மாறியது. நானே ஜெர்க்காகி, பைப்படியில் நின்றுகொண்டிருந்த பசங்களைப் பார்த்தேன்.
பசங்கள் அனைவருக்கும், ஜெனிலியா மட்டுமே கண்ணில் தெரியும் ‘டனல் விஷன்’ குறைபாடு உருவாகி, ஜெனிலியாவையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனவே, எப்போதும் சண்டையாக இருக்கும் பைப்படி அமைதியாக இருந்தது. தினமும் “நான்தான் முதல்ல வந்தேன்” என்று சண்டை நடக்கும். ஆனால், அன்று இளைஞர்கள் ஜெனிலியாவைப் பார்த்தபடி, “நீ முதல்ல தண்ணி பிடி. நான் அப்புறம் பிடிக்கிறேன்” என்றார்கள்.
“இல்லயில்ல... நான் அப்புறம் பிடிக்கிறேன். நீ பிடிச்சிட்டுப் போ”
“எனக்கு ஒண்ணும் அவசரமில்லடா… நீ பிடிச்சிட்டுப் போ….”
அவர்களின் பெருந்தன்மையைப் பார்த்து எனக்குச் சிலிர்த்துவிட்டது. இவ்வாறு வீதிக்கு ஒரு ஜெனிலியா இருந்தால், மனித சமூகம் மிகவும் அன்பானதாக மாறிவிடும். ஒருவன் என்னிடம், “நீங்க பிடிச்சிட்டுப் போங்க” என்றவுடன் எனக்கு ஏகக் கடுப்பு. நான் மட்டும் என்ன இளிச்சவாயனா? இருந்தாலும், பாவம் சின்னப் பசங்க என்று நானே தண்ணீர் பிடித்துச் சென்றேன்.
‘பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற, “மாரோ…. மாரோ…. சௌக்க சக்கா சோ மாரோ” என்ற தூய தமிழ்ப் (?) பாடலின் படப்பிடிப்புக்காகத்தான் எங்கள் ஏரியாவுக்கு வந்திருந்தார்கள். “மொட்டை மாடியில் நின்னா தப்பு” என்ற வரிகளை ஜெனிலியா எங்கள் M பிளாக்கின் முன்பு பாடி நடித்ததில், M பிளாக், சென்னையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றானது.
அதன் பிறகு, எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஏராளமான படப்பிடிப்புகள் நடந்தன. எங்கள் குடியிருப்புக் கட்டிடங்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். நாங்கள் பீரோ, கட்டில், ஃப்ரிட்ஜ் போன்றவற்றைச் சுவரோரம் நிறுத்தி, கட்டிடத்துக்கு முட்டுக் கொடுத்து வைத்திருந்தோம். அவற்றை எடுத்தால் கட்டிடம் விழுந்துவிடும் என்பதால் நாங்கள் வீட்டைக் காலி செய்யாமல் இருந்துவந்தோம். எனவே, எங்கள் குடியிருப்புப் பகுதியில் தீவிரவாதிகள், வீட்டை விட்டு ஓடிவந்த காதலர்கள், பிச்சைக்காரர்கள், ரௌடிகள் என்று விளிம்பு நிலை மக்கள் வசிப்பது போன்ற காட்சிகளையே எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் வந்தார் ‘சூரத் சுனாமி’ நமீதா.
நடிகை நமீதா நடித்த, ‘பம்பரக் கண்ணாலே’திரைப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் பகுதியில் பல நாட்கள் நடைபெற்றது. ஆண்கள் எல்லாம் நல்ல பிள்ளையாகக் காலையிலேயே எழுந்து காய்கறி, பால் வாங்கிக் கொடுத்துவிட்டு, படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் யூனிட் ஆட்களுக்கு முன்பே ஆஜராகிவிடுவார்கள். அப்போது எங்கள் குடியிருப்பில் ஆண்கள் யாராவது நெடுநேரம் காணாமல் போய்விட்டால் அம்மாக்களும் மனைவிகளும் நேராக ஷூட்டிங் ஸ்பாட் வந்து அழைத்துக்கொண்டு செல்வார்கள்.
அதுவும் நமீதா ஆண்களுடன் கபடி விளையாடும் காட்சியைக் காண, ஏகப்பட்ட கும்பல் கூடி, ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கே அவசியம் இல்லாமல் ஆகிவிட்டது. நமீதா கபடி விளையாடியது, இந்திய விளையாட்டுத் துறையில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய புரட்சி. ஏனெனில், அவர் எதிரணி ஆண்களை ஒற்றை விரலாலேயே தொட்டு மயக்கம் போட வைத்து அவுட்டாக்கினார்.
பல நாட்கள், நமீதாவின் படப்பிடிப்பைத் தியாகம் செய்துவிட்டு, அலுவலகம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கியமான நிலையில்தான் இந்த வாழ்க்கை என்னை வைத்திருந்தது. ஒரு நாள் அலுவலகம் சென்றபோது, நமீதா வெள்ளை நிற சுடிதாரில் யாரிடமோ, அழகாகப் பேசியபடி, அழகாகச் சிரித்துக்கொண்டே, ஆப்பிள் தின்றுகொண்டிருந்த காட்சியைப் பார்த்தவுடன், பேசாமல் ஒரு மாசம் மெடிக்கல் லீவ் போட்டுவிட்டு ‘பம்பரக் கண்ணாலே’ யூனிட்டோடு ஐக்கியமாகிவிடலாமா என்று நினைத்தேன். பிறிதொரு நாள் H ப்ளாக் முன்பாக, “நாங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணு. கண்ணுக்குள்ள கண்ணு…” என்று வசனம் பேசிய நமீதா இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறார்.
பொதுவாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதில் நம்மாட்கள் அக்கறையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. அதை உறுதிப்படுத்துவது போல், ஜெனிலியா நாற்காலி போட்டு அமர்ந்திருந்த எங்கள் M பிளாக் இடிக்கப்பட்டது. அதே குடியிருப்பில் உள்ள வேறு ஒரு பிளாக்குக்கு இடம்பெயர்ந்தேன்.
அந்த பிளாக்கில்தான் சிவகார்த்திகேயன், ஹன்ஸிகா மோத்வானி நடித்த ‘மான் கராத்தே’ படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரு காட்சிக்காக, மஞ்சள் நிற வெஸ்பாவில், லெமன் க்ரீன் நிற ஆடை அணிந்துகொண்டு வந்த ஹன்ஸிகாவைப் பார்த்தவுடன், பசங்க இன்ஸ்டென்ட் கவிதை எழுத, அர்ஜென்டாகக் காகிதத்தைத் தேடினார்கள். ஹன்ஸிகா, ஃபோனில் பேசுவது போல் ஒரு காட்சியை படமாக்கினார்கள். பிறகு ஹன்ஸிகா எங்கள் பிளாக்கின் படியேறிவர, இன்று வரையிலும் ஹன்ஸிகா நடந்த அதே படிக்கட்டுகளில்தான் நானும் நடந்துகொண்டிருக்கிறேன்.
எங்கள் பிளாக் வாசலில் சிவகார்த்திகேயன், ஹன்ஸிகாவிடம் “பாக்ஸிங் பயிற்சிக்குச் செல்லும் எனக்கு எனர்ஜிக்காக ஒரு முத்தம் தர வேண்டும்” என்று கேட்டார். ஹன்ஸிகாவும் சிவகார்த்திகேயன் கையில் முத்தம் கொடுத்தார். அதற்கு முன்பாக எடுக்கப்பட்ட ஷாட்டில், ஹன்ஸிகா கண்களை ஒரு மாதிரி சிமிட்டிக்கொண்டு, செம்மண் தரையில் செவ்வானம் விழுந்தது போல் கன்னங்கள் சிவக்க, ஒரு வெட்கப் புன்னகை புரிந்தார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பசங்களும் டபுள் ஸ்ட்ராங், ஹைகுவாலிட்டி எனர்ஜியைப் பெற்றார்கள்.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT