Last Updated : 30 Jun, 2017 11:18 AM

 

Published : 30 Jun 2017 11:18 AM
Last Updated : 30 Jun 2017 11:18 AM

வேலையற்றவனின் டைரி 35: பிரிவோம்… சந்திப்போம்…!

உங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு காலத்துக்கு, மீண்டும் சென்று வாழ்ந்துவிட்டு வருவதற்கான வாய்ப்புக் கிடைத்தால், நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்? சென்ற வாரம், எனது கல்லூரி ஆட்டோகிராஃப் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, மீண்டும் எனது கல்லூரிக் காலத்துக்குச் சென்று வாழ்ந்துவிட்டு வரத் தோன்றியது.

நான் பி.எஸ்ஸி, பிஜிடிஸிஏ, எம்.எஸ்ஸி…. என்று மூன்று கல்லூரிகளில் படித்திருக்கிறேன். அப்போது ஃபேர்வெல் தினத்தன்று, ஆட்டோகிராஃபில் எழுதி வாங்கிய முதிர்ச்சியற்ற, விடலைத்தனமான அந்த வாசகங்கள் (வானும் நிலவும் போல நீங்கா நட்பு), இப்போது எவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது. மகிழ்ச்சி வாசகங்களில் இல்லை. அந்தக் கையெழுத்தில், அதை எழுதிய நண்பர்களின் நினைவில் இருக்கிறது. மூன்று ஆட்டோகிராஃப் புத்தகங்களின் பக்கங்களையும் புரட்டி முடித்த அரை மணி நேரத்துக்குள், ஆறாண்டு கால வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்து முடித்திருந்தேன்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நான் பிஜிடிஸிஏ படித்து முடித்துவிட்டு, ஃபேர்வெல் நடந்த இரவு, இன்னும் அதே இருட்டுடனும் அதே அழுகையுடனும் நினைவில் இருக்கிறது. கடைசி நாள் வரையிலும் தன் காதலைச் சொல்லாத ‘இதயம்’ முரளிகள், “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ பாட… “யாரைச் சொல்கிறான்?” என்று பொட்டு வைத்த வட்ட நிலாக்கள் திருதிருவென்று விழிக்க…. “என்னை மறந்துடாதடா” என்று நூறு பேரிடம் ஆயிரம் முறை சொல்லி, நண்பர்களுடனும் பேராசிரியர்களுடனும் ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டு, ஒவ்வொருவராகக் கல்லூரியை விட்டு வெளியேற, நாங்கள் ஒன்பது பேர் மட்டும் கல்லூரியை விட்டு வெளியேற மனமில்லாமல், கல்லூரியைச் சுற்றிச் சுற்றி வந்தோம்.

கல்லூரியின் முன்புறமிருந்த பூங்காவில், திடீரென்று வார்த்தைகள் தீர்ந்துவிட்டது போல நீண்ட நேரம் அமைதியாக அமர்ந்திருந்தோம். யாரேனும் பேச ஆரம்பித்தால், அழுகைக் காட்சி கேரண்டி என்பதால் யாரும் பேசவில்லை. அப்போது நாங்கள் வலுக்கட்டாயமாக அடக்கிய கண்ணீரை, சோமுவை வழியனுப்பச் சென்றபோது அடக்க முடியவில்லை.

டெல்லியிலிருந்து திருச்சி வந்து படித்த நண்பன் எஸ்.வி. சோமசுந்தரத்தை வழியனுப்பி வைக்க, அன்றிரவு திருச்சி பேருந்து நிலையம் சென்றிருந்தோம். இரண்டு பேருந்துகளுக்கு நடுவே நாங்கள் கும்பலாக நின்றிருந்தோம். சோமு என்னைக் கட்டிப்பிடித்தபடி, “வர்றன்டா. என்னை மறந்துடாதடா” என்று விடைபெற்றபோது, அவன் குரல் லேசாகத் தழுதழுத்தது. அவ்வளவுதான்…. எனக்கு அழுகை பொங்கிக்கொண்டு வர, அப்படியே வாயைப் பொத்திக்கொண்டு ஓரமாகச் சென்று, ஒரு பேருந்தில் சாய்ந்து அழ ஆரம்பித்துவிட்டேன். சோமுவும் கண்ணாடியைக் கழற்றி, கண்களைத் துடைத்தபடி வேறு திசைக்கு நகர்ந்தான்.

என் தோளில் ஓங்கி அடித்த சுதிர், “அழாத நாயே…” என்று கத்திவிட்டு, அவனும் குரல் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டான். திடீரென்று என் தோளில் சந்துருவும் சாரியும் சாய்ந்துகொண்டு கண்ணீர் விட…. “ப்ளீஸ்டா…. அழாதீங்கடா” என்ற சோமுவும் உரத்த குரலில் அழுதான். பெண் தோழிகள் நான்கு பேர், தனியாக பிளாட்ஃபார்ம் ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்தபடி அழ…. பேருந்துகளில் அமர்ந்திருந்தவர்களும் அவசரமாகப் பேருந்து பிடிக்கச் சென்றவர்களும் நின்று வேடிக்கை பார்த்த எங்கள் கண்ணீரின் துளிகள், திருச்சி பேருந்து நிலையத்தில் இன்னும் உலராமல் கீழே கிடந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

நட்புக்கு அடுத்து, கல்லூரிக் காலத்தின் உற்சாகமான இன்னொரு விஷயம், கல்லூரிக் கால தேவதைகள். கல்லூரியில் படிக்கும்போது தேவதைகளின் கண்களில் தெரியும் இளமையின் பளபளப்பையும், நடையில் தெரியும் இளமையின் துள்ளலையும், பேச்சில் தெரியும் அல்டாப்பான பாவனைகளையும் அவர்கள் ஒருபோதும் மீண்டும் பெறுவதே இல்லை. இந்தத் தேவதைகளின் விசேஷம் என்னவென்றால், எல்லா தேவதைகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.

பாவாடை தாவணியில், ஒரு ஜடையை முன்பக்கமும், இன்னொரு ஜடையைப் பின்பக்கமும் விட்டுக்கொண்டு வரும் ஸ்டைல் தேவதைகள், மூன்றாண்டு காலமும் குனிந்த தலை நிமிராமல் வந்து, கல்லூரி நிகழ்ச்சிகளில் இறைவணக்கம் மட்டும் பாடிவிட்டுச் செல்லும் குத்துவிளக்கு தேவதைகள், மழைக் காலத்தில் ஒதுங்கிய மரத்தடியில் மழைநீரைப் பிடித்து ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொள்ளும் மழைக்கால தேவதைகள், கைதவறி விழுந்த கைக்குட்டையை ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்று நாம் எடுத்துக் கொடுப்பதற்குள் தொண்டையை உலரவைக்கும் முறைப்பு தேவதைகள், கொலுசுச் சத்தம் பதுங்கிப் பதுங்கி ஒலிக்க, நுனிக் காலால் நடந்து, கண்களைச் சுருக்கியபடி வண்ணத்துப்பூச்சிப் பிடிக்கும் வண்ண வண்ண தேவதைகள், நுனிநாக்கைத் துருத்திக்கொண்டு, லேசாகத் தலையையும் கண்களையும் சாய்த்தபடி ஸ்டிரைக்கரால் சிவப்பு காயினை குழிக்குள் தள்ளும் கேரம்போர்டு தேவதைகள்... போதும்… எத்தனை எத்தனை தேவதைகள்?

ஃபேர்வெல் தினத்தன்று, இந்த தேவதைகள் தங்கள் நட்சத்திர அந்தஸ்தை அடைகிறார்கள். அன்றுதான் பசங்கள் பலரும் தேவதைகளிடம் தங்கள் காதலைச் சொல்வார்கள். காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் முகத்தில் மத்தாப்பு எரிய, சிரிப்புடன் செல்வார்கள். காதல் நிராகரிக்கப்பட்டவர்கள், யாருமற்ற மரத்தடி இருட்டில் ரகசியமாகக் கண்ணீர் வடிப்பார்கள். காலம், காலமாகப் பலவீனமானவர்களாக நம்பப்படும் பெண்களால், பலமானவர்களாகச் சொல்லப்படும் ஆண்களைக் கண்ணீர்விட வைக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய முரண்.

ஒரு பெரும் காற்று உலர்ந்த சருகுகளை அடித்துச் செல்வது போல, நம்மிடம் ஆட்டோகிராஃபை மட்டும் தந்துவிட்டு, மற்றவற்றைக் காலம் அடித்துச் சென்றுவிடுகிறது.

நீங்கள் பழைய நினைவுகளுடன் எழுந்து, உங்கள் ஆட்டோகிராஃபைத் தேடுவதற்கு முன்பாக ஒரு விஷயம். இந்த வாரத்துடன் இத்தொடர் நிறைவு பெறுகிறது. ஒரு நட்பின் பிரிவைப் போல, ஒரு காதலின் பிரிவைப் போல, ஒரு எழுத்தாளர்-வாசகர் பிரிவும் துயரமான ஒன்றுதான். மீண்டும் உங்களைச் சந்திப்பேன்.

இத்தொடர் வெளிவந்த கடந்த எட்டு மாதங்களும், என் வாழ்வின் மிக மிக மறக்க முடியாத, அற்புதமான மாதங்கள். என் வாழ்க்கையை முற்றிலும் கலைத்துப்போட்ட மாதங்கள் இவை. ஒரு 18 வயதுப் பையன் போல நான் மிகவும் உற்சாகத்துடனும் கொண்டாட்டமான மனநிலையுடனும் திரிந்த நாட்கள் இவை. இத்தொடருக்குப் பெரும் வரவேற்பளித்த, ‘வாசகர்களாலேயே இம்மனநிலை சாத்தியமானது. இத்தருணத்தில் என்னை நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் ஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து தொடர்புகொண்டு பாராட்டி, இன்னும் நன்கு எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்த தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என்றும் சொல்லித் தீராத பேரன்பையும் பெரும்நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி சொல்லும்போது, ஒரு தமிழ் எழுத்தாளர் தனது புத்தகத்தின் முன்னுரையில் நன்றி குறித்து பின்வருமாறு எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது: சிலருக்கு நன்றி சொல்லும்போதெல்லாம், ‘நன்றி’ என்ற ஒற்றைச் சொல் எனக்குப் போதுமானதாக இல்லை. ஒரு வங்கியில், நமக்கு பேனா கடன் கொடுத்தவருக்கு நாம் நன்றி சொல்கிறோம். ஒரு விபத்திலிருந்து நம் உயிரைக் காப்பாற்றியவருக்கும் நாம் அதே நன்றியைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. எனவே இங்கு நான் கூறும் நன்றிகளை, உயிரைக் காப்பாற்றியவருக்கு கூறிய நன்றி போல எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்குறிப்பு: நன்றி குறித்து எழுதிய அந்தத் தமிழ் எழுத்தாளர் வேறு யாருமில்லை. நான்தான்!

கட்டுரையாளர், எழுத்தாளர் |தொடர்புக்கு: grsnath71@gmail.com

(நிறைவடைந்தது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x