Last Updated : 02 Jun, 2017 09:57 AM

 

Published : 02 Jun 2017 09:57 AM
Last Updated : 02 Jun 2017 09:57 AM

வேலையற்றவனின் டைரி 31 - அழகிய நாட்கள்!

இந்தக் கட்டுரையை நான் எழுத ஆரம்பிக்கும்போது, இரவு மணி இரண்டேகால் இருக்கும். ஒரு மணிக்குப் படுக்கும்போது, “நாளை இது குறித்து எழுதலாம்” என்று முடிவு செய்த வினாடி முதல், பால்ய காலத்தின் நினைவுகள் என்னைத் தூங்கவிடாமல் அடித்து, ஒரு கட்டத்தில் உணர்வுகளின் கொந்தளிப்பை அடக்க முடியாமல் எழுந்து எழுத ஆரம்பித்துவிட்டேன். சில சொற்கள் விடியும்வரை காத்திருக்க மறுக்கின்றன.

எனது பள்ளி நாட்களில், கோடை விடுமுறையின்போது, நாங்கள் அரியலூரிலிருந்து சென்னை வந்து, என் டாக்டர் மாமாவின் வீட்டில் ஒரு மாதம் இருப்போம். அந்த ஆழ்வார்பேட்டை வீடு, வாசலில் கொய்யா மரத்துடன், சிவப்பு ரேழியுடன் கூடிய, பழைய பாணியிலான அழகிய பெரிய வீடு. ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்ஸில் வந்து, கொய்யாப் பூ வாசனையுடன் மாமா வீட்டிற்குள் உற்சாகமாக நுழையும் விடியற்காலையிலிருந்து, அதே ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்ஸில், மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத பாரத்துடன், அரியலூர் திரும்பும் இரவு வரையிலான நாட்களை எந்தச் சூறைக்காற்று, ஏன் அடித்துக்கொண்டு போனது?

என் மாமாவின் டாக்டர் கோட்டை அணிந்துகொண்டு, என் தம்பிகளுக்கு வெறும் கையால் ஊசி போட்டு, மாத்திரை எழுதித்தந்த நாட்களுக்கும், திடீர் திடீரென்று ஆங்கிலத்தில் பேசி என்னைத் திகிலுக்குள்ளாக்கும் பின் வீட்டு சுசித்ராவுடன் அருநெல்லிக்காய் சாப்பிட்ட அந்த நெல்லிக்காய் மரத்தடிக்கும், ஆட்கள் ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சலுக்காக ஏக்கத்துடன் காத்துக்கொண்டே, ஏதோ ஒரு மரத்தில் எனது பெயரைச் செதுக்கிய அந்த நாகேஸ்வர ராவ் பார்க் மாலைக்கும் என்னால் மீண்டும் சென்றுவிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

எனது சென்னை நாட்கள், எதிர் வீட்டு மாமரத்தில் மாங்காய் அடித்தல், வானத்தில் பார்க்கும் விமானங்களை எண்ணுதல் என்று மந்தமாகத்தான் ஆரம்பிக்கும். பிறகு மெல்ல மெல்ல கிண்டி பாம்பு பண்ணை, எழும்பூர் அருங்காட்சியகம் என்று வேகமெடுக்கும். ஆழ்வார்பேட்டையிலிருந்து, மந்தை வெளி கபாலி தியேட்டருக்கு நடந்தே சென்று, ‘ஏக் துஜே கே லியே’வும், ‘ஷோலே’வும் பார்த்துவிட்டு கும்பலாகப் பேசிக்கொண்டே திரும்பிய இரவுகள், இப்போது ஒரு கனவுபோல் இருக்கின்றன. இறுதியாக ஊருக்குத் திரும்புவதற்கு முந்தைய நாளன்று, மெரீனா பீச் சென்றுவிட்டு, திருவல்லிக்கேணி பாப்புலர் ஸ்டோரில் எங்களுக்கு ஆடைகள் எடுத்துவிட்டு, ரத்னா கஃபேயில் சாம்பார் இட்லி சாப்பிட்டுவிட்டு 45B-க்காகக் காத்திருக்கும்போது மனம் மீண்டும் அடுத்த ஆண்டு விடுமுறைக்காக ஏங்க ஆரம்பிக்கும்.

சில சமயங்களில் என் பெரியம்மா வீட்டுப் பசங்களும் தஞ்சை மாமா வீட்டுப் பசங்களும் வந்து சேர, வீடே கல்யாண மண்டபம்போலக் கலகலவென்று இருக்கும். மாமா கிளினிக் முடிந்து இரவு பத்து மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வருவார். அவர் சாப்பிட்டு முடித்து, கொய்யா மரத்தடிக்கு வந்தவுடன், பெரியவர்கள் பேசும் பழைய தஞ்சாவூர் கதைகளை வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன். சில நாட்கள், பாசமலரை எந்தத் தியேட்டரில் பார்த்தோம் என்பதில் பெரியவர்களுக்குள் கடும் கருத்து மோதல் ஏற்பட்டு, அந்தப் பஞ்சாயத்தே ஒரு மணி வரை ஓடும்.

எட்டாம் வகுப்பு கோடை விடுமுறையில் சென்னை வந்தபோது, என் மாமா பணிபுரிந்த ராயப்பேட்டை ஜிஹெச்சில் எனக்குக் குடல்வால் அறுவைசிகிச்சை செய்தார்கள். அறுவைசிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்தவுடன், வயிற்றுத் தையல் பகுதியில் பயங்கரமாக வலித்ததால், நான் உடம்பைத் தூக்கித் தூக்கிப் போட்டு அழுதேன். அதனால் தையல் பிரிந்துவிடும் என்று என் கையையும், காலையும் கட்டிலோடு கட்டிப்போட்டுவிட்டார்கள்.

மாலை மருத்துவமனைக்கு வந்த மாலா அத்தை (அவரும் டாக்டர்தான்), “ஏன் கட்டிப்போட்டுருக்கீங்க?” என்று கோபமாகக் கேட்டுவிட்டுக் கட்டை அவிழ்த்துவிட்டார். எனக்குத் தையல் போட்டிருந்த இடத்தில் எரிச்சலாக இருந்ததால்தான் நான் அழுதுகொண்டிருந்தேன். அதனால், அத்தை என் வயிற்றுத் தையல் பகுதியில் விசிறியால் விசிற ஆரம்பித்தார். அவர் விசிறும்போது நான் அமைதியாவேன். விசிறுவதை நிறுத்தினால் அழ ஆரம்பித்துவிடுவேன். எனவே அத்தை தொடர்ந்து விசிறிக்கொண்டேயிருந்தார்.

விசிறினார் என்றால் சும்மா ஐந்து நிமிடம், பத்து நிமிடம் இல்லை. இரவு 9 மணிக்கு நான் தூங்கும் வரை, ஏறத்தாழ மூன்று மணி நேரம், அவர் கொஞ்சம்கூட அசராமல், விசிறியை இரண்டு கையிலும் மாற்றி, மாற்றி விசிறிக்கொண்டேயிருந்தார். தொடர்ந்து விசிறியதால் வலித்த தனது ஒரு கை தோள்பட்டையை இன்னொரு கையால் அழுத்தி விட்டுக்கொண்டே, மாலா அத்தை சலிக்காமல் விசிறிக்கொண்டே இருந்த அந்த இரவை இன்று வரையிலும் என்னால் மறக்கவே முடியவில்லை (இதை எழுதும்போது நெகிழ்ச்சியில் கண்கள் கலங்குகின்றன).

ப்ளஸ் ஒன் விடுமுறையில் வந்திருந்தபோது, என் மாமாவுடன் எனக்குப் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அன்னமங்கலம் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த நான், பத்தாவதில் 500க்கு 434 மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். அப்போது ஸ்டேட் ரேங்கே 450, 460 என்றுதான் இருக்கும். எனவே அன்னமங்கலத்திலேயே நான் ப்ளஸ் டு படித்தால், நல்ல மார்க் வாங்கி, டாக்டருக்குப் படிப்பேன் என்று என் மாமா உறுதியாக நம்பினார். ஆனால், நான் திடீரென்று அன்னமங்கலத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையால், ப்ளஸ் டூ அங்கே படிக்கப்போவதில்லை என்று சொல்லி விட்டேன். எனவே தினமும் இரவு மாமா என்னிடம், “அது நல்ல பள்ளி. நீ ப்ளஸ் டூ அங்கயே படிச்சீன்னா, நல்ல மார்க் வாங்கி, டாக்டருக்குப் படிக்கலாம். உனக்கு டாக்டர் சீட் கிடைச்சிடுச்சுன்னா, நான் ஸ்கூட்டர் வாங்கித் தரேன்” என்று விதம் விதமாக எனக்கு அறிவுரை கூறுவார். ஆனால், நான் என் முடிவில் பிடிவாதமாக இருந்தேன். அதனால், ஊருக்குக் கிளம்பும் முந்தைய நாள் இரவு, மாமா கோபமாக என்னைத் திட்டிவிட்டார்.

எனக்கு ரோஷம் பொத்துக்கொண்டு கிளம்ப… கோபத்துடன், “இனிமேல் சென்னைக்கே வர மாட்டேன்” என்று வீராவேசத்துடன் கிளம்பினேன். பிறகு நான் பள்ளி மாறி, மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வாங்கி, ஒரு பி.எஸ்ஸி. தாவரவியல் மாணவனாக, என் மாமா முன்பு குற்றஉணர்வுடன் என் வாழ்க்கை என்னை நிறுத்தியது.

இது போல் ஒவ்வொரு கோடை விடுமுறையிலும், எவ்வளவோ அனுபவங்கள். மீண்டும் நான் திரும்பிச் செல்ல முடியாத அந்த அழகிய நாட்களை எண்ணி எண்ணி மனம் ஏங்குகிறது. கொய்யாப் பூ வாசனை அடிக்க, என் மாமாவுடன் நான் எத்தனையோ கதைகள் பேசிச் சிரித்த கொய்யா மரத்தை ஏன் வெட்டினார்கள்? கபாலி தியேட்டர் இருந்த இடத்திலிருக்கும் அபார்ட்மென்ட்டைக் கடக்கும்போதெல்லாம், ‘ஏக் துஜே கே லியே’ படத்தில் இடம்பெற்ற, ‘தேரே மேரே பீச் மெய்ன்” பாடல் தன்னிச்சையாக மனதில் ஒலிப்பதை இன்னும் ஏன் என்னால் நிறுத்த முடியவில்லை? நடிகை ஷோபா தற்கொலை செய்துகொண்டபோது, குமுறிக் குமுறி அழுத பக்கத்து வீட்டு டிராமாக்காரர் வீட்டுப் பெண்கள், சிலுக்கு ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டபோதும் அழுதிருப்பார்களா?

காலம் ஒரு மகாநதி போல, யார் யாரையோ, எங்கெங்கோ அடித்துக்கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறது. அத்தோடு எனது அழகிய கோடை விடுமுறை நாட்களையும் அது அடித்துக்கொண்டு சென்றுவிட்டது. பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் துயரத்துடன் சொன்னது போல், பொக்கென ஓர் கணத்தே, எல்லாம் போகத் தொலைத்துவிட்டேன்.

தொடர்புக்கு: grsnath71@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x