Last Updated : 17 Mar, 2017 10:14 AM

 

Published : 17 Mar 2017 10:14 AM
Last Updated : 17 Mar 2017 10:14 AM

மொழி காட்டும் வழி!

மார்ச் 20: சர்வதேச பிரெஞ்சு மொழி தினம்

மனிதனின் இன்றிய‌மையாத தேவைகளில் வெகு சிலவே நிரந்தர இடத்தைப் பிடித்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானது மொழி. ஒருவரின் அடையாளம், தொடர்புகொள்வதற்கான கருவி என்பதைத் தாண்டி, மொழிக்கு இன்றைய காலகட்டத்தில் வேறு சில பரிமாணங்களும் கிடைத்திருக்கின்றன. நமது தாய்மொழியைத் தாண்டி, அயல்நாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வது நமது வருமானத்துக்கான வாய்ப்பாகவும் அமைந்திருக்கின்றன.

அப்படி ஒரு மொழி உங்கள் வாழ்வாதாரமாக இருந்தால் நல்லதுதானே? அந்த மொழி பிரெஞ்சு மொழியாக இருந்தால், இன்னும் சிறப்பு. ஏனென்றால், இன்று ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக பிரெஞ்சு மொழிதான் அதிக அளவில் பேசப்படும் இரண்டாவது மொழியாக இருக்கிறது.

உலகம் முழுக்க பிரெஞ்சு மொழியைக் கற்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடியே இருக்கிறது. பிரெஞ்சு மொழி பேசப்படும் நாடுகளில் எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி, ‘சர்வதேச பிரெஞ்சு மொழி தினம்’ கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் அருண் குமாரைச் சந்தித்தோம். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே அயல் நாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ள‌ ஆரம்பித்தார். அப்படி அவர் முதலில் தெர்ந்தெடுத்துப் படித்தது, பிரெஞ்சு மொழி.

- அருண்குமார்

அதனைத் தொடர்ந்து, ஸ்பானிஷ், போர்த்துகீஸ், இத்தாலியன் உள்ளிட்ட 10 மொழிகளைக் கற்று பன்மொழியாளராகத் திகழ்கிறார். மேலும், ‘லாமெட்’ எனும் ஆராய்ச்சிக் குழுமத்தை நிறுவி, ஐரோப்பா நாடுகளில், மொழி கையகப்படுத்தல், (Language Acquisition) மொழி முறையியல் (Language Methodology) குறித்துப் பல ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்.

அவரிடம் அயல் நாட்டு மொழிகள் இளைஞர்களுக்குத் தரும் வாய்ப்புகள் குறித்து உரையாடியதிலிருந்து...

அயல் நாட்டு மொழிகளைக் கற்பதால் என்னென்ன பயன்கள் உள்ள‌ன?

இப்படி ஒரு கேள்வி நமக்கு எழுவதற்குக் காரணம், அயல் நாட்டு மொழிகளைக் குறித்துப் பலரிடத்தில் விழிப்புண‌ர்வு இல்லாததால்தான். ஐக்கிய நாடுகளின் கீழ் பிரெஞ்சு, ஸ்பானிஷ், சீனம், ரஷ்ய‌ன், ஆங்கிலம் மற்றும் அரபி என ஆறு மொழிகள் அடங்கும். இவற்றில் குறைந்தது மூன்று மொழிகளை இடைநிலை வரை படித்தாலே, ஐக்கிய நாடுகளில் வேலை செய்யக்கூடிய தகுதியை அடைய முடியும்.

அந்த ஆறு மொழிகளில், பிரெஞ்சு மொழியைப் பலரும் தேர்ந்தெடுப்பதற்கான சுவாரஸ்யமான செய்தி ஒன்றைச் சொல்கிறேன். ‘லாமெட்’ மூலமாக நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி, 61.8 சதவீதம் பேர், தங்களுடைய வேலைவாய்ப்புகளுக்காகவும், 47.6 சதவீதம் பேர், தங்களுக்கு அந்த‌ மொழி பிடித்திருப்பதாலும், 36.1 சதவீதம் பேர், பிரான்ஸ் நாட்டிற்குப் பயணப்பட விரும்புவதாலும், 18.8 சதவீதம் பேர், பிரெஞ்சு மக்களின் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்ள‌வும், 21.5 சதவீதம் பேர், பிரான்ஸ் நாட்டில் வாழ கற்றுக்கொள்ள‌வும், 18.8 சதவீதம் பேர், பிரெஞ்சு மொழி ஆசிரியராகப் பணிபுரியவும், இந்த‌ மொழியைக் கற்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்தக் காரணங்களைத் தாண்டி, அயல் நாட்டு மொழி ஒன்றைப் பயிலும் போது, உங்க‌ளுக்குள் சுயமரியாதை, சுயமதிப்பீடு, தனித்துவம், படைப்பாற்ற‌ல் போன்ற‌ தன்மைகள் அதிகமாவதை உங்களால் உண‌ர முடியும். அனைத்துக்கும் மேலாக பன்மொழியாளர்களின் மூளைச் செயல்பாடு மற்றவர்களை விட அதிகம். அதனால் வெற்றி எப்போதும் உங்களுக்குப் பக்கத்தில்!

அயல் நாட்டு மொழிகள் தரும் வேலை வாய்ப்புகள் பற்றி...

வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நீங்கள் ஆசிரியராகவோ, மொழிபெயர்ப்பாளராகவோ, பயிற்சியாள‌ராகவோ, எழுத்தாளராகவோ பணிபுரியலாம். மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களில் எப்பொழுதும் மொழி நிபுணர்களுக்கான தேவை இருந்து கொண்டேதான் இருக்கிற‌து. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இங்கு குறிப்பிட்டுள்ள‌ பல பணிகளை நீங்கள் பகுதி நேரப் பணியாகவே எடுத்துச் செய்யலாம். ‘ஃப்ரீலான்சிங்’ ஆகவும் இந்தப் பணிகளைச் செய்யலாம்.

இந்தப் பணிகளை மேற்கொள்பவர்களுக்குக் கிடைக்கக்கூடிய‌ குறைந்தபட்ச வருமானம் ரூ. 25 ஆயிரம். கல்வித் தகுதி, அனுபவம், பணிபுரியும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து இந்த வருமான அளவு மாறும். பள்ளி மற்றும் கல்லூரிகளில், மொழிப் பயிர்ச்சியாளர்களின் தேவைகளும், அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் எப்பொழுதும் இருப்பதால், ஐரோப்பிய நாட்டு மொழிகளைக் கற்பிப்பவர்களுக்குச் சம்பளம் சற்று அதிகமாகவே கிடைக்கும். மொழிபெயர்ப்புத் துறையில் முன் அனுபவம் இல்லாதவர்களுக்குகூட‌ குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு ரூ.8 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது.

இதைத் தவிர, அடிப்படையான மொழித் திறனை உடைய ஒரு சுற்றுலா வழிகாட்டி, ஒரு நாளுக்கு ரூ.5 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும். மேலும், இது போன்ற மொழித் திறனுடன் பொறியியல், விஷுவல் கம்யூனிகேஷன் போன்ற பட்டப்படிப்பு இருப்பின், உங்களுடன் பணிபுரியும் சக நண்பர்களைக் காட்டிலும், 30 சதவீதம் அதிக சம்பளம் பெற முடியும். ‘டாக்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ்’ போன்ற சில பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களும்கூட பிரெஞ்சு மொழி தெரிந்த, சமூகப் பணி மற்றும் மருத்துவப் பட்டதாரிகளுக்கு அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்புகளை வழங்கத் தயாராக உள்ளன.

அனைவராலும் ஐரோப்பிய மொழிகளைச் சுலபமாகக் கற்க‌ முடியுமா?

என் ஆராய்ச்சியில் நான் கற்றுக்கொண்ட சில விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன். அற்புதமான நம்முடைய மூளையை நாம்தான் பொய்களைத் திணித்து ஏமாற்றி வருகிறோம். இந்தப் பொய்களும் வதந்திகளும்தான், ஒரு புதிய மொழியைக் கற்க தடைக்கல்லாக இருந்து வருகின்றன.உதாரணத்திற்குச் சிலவற்றைக் கூறுகிறேன். ‘ஒரு மொழியைக் கற்க வேண்டும் என்றால், முதலில் நான் அதன் எழுத்துகளைப் படிக்க வேண்டும்’ என்பது முதல் பொய்.

நம் தாய் மொழியை நாம் அப்படித்தான் கற்றோமா? இரண்டு வயதில் தமிழ் எழுத்துகளைப் பயின்ற பிறகா ‘அம்மா’ என்று பேசத் தொடங்கினோம்?

‘எனக்கு இலக்கணம் வராது. அதனால் மொழிகளை என்னால் சுலபமாகக் கற்க இயலாது’ என்பது இரண்டாவது பொய். ஒரு மொழியைக் கற்காமல் இருக்க, இது ஒரு பெரிய காரணமாக ஒருபோதும் இருக்கக் கூடாது. இலக்கணத்தை முழுதாகக் கற்றுக்கொண்டு நாம் நம் தாய்மொழியில் பேசத் தொடங்கவில்லை.

‘எனக்கு வயதாகி விட்டது. என்னால் எளிதாக ஒரு மொழியை உள்வாங்கிக் கொள்ள முடியாது’ என்பது மூன்றாவது பொய். இந்தப் பிரச்சினையின் ஆணிவேர் ஒருவரின் வயதில் அல்ல, உள்ளத்தில்தான் இருக்கிறது.

இந்த மொழிகளை எங்கே, எப்படி கற்கத் தொடங்குவது?

முதலில், நீங்கள் படிக்க விரும்பும் மொழியைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே மொழிகளைக் கற்கத் தொடங்கலாம். இருக்கவே இருக்கிறது இணையதளம். யூடியூப்பில் அந்தக் குறிப்பிட்ட மொழியைக் குறித்த காணொளிகளைக் காணலாம், படங்கள் பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம். நீங்கள் பார்க்கும், கேட்கும் அனைத்தும் உங்களுக்குப் புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த மொழியின் உச்சரிப்பைக் கவனிக்கவே இந்தப் பயிற்சி.

அதற்குப் பின், நீங்கள் ஒரு மையத்தில் சேர்ந்து படிக்க முடியாத பட்சத்தில், ஒரு நல்ல பயிற்சியாளரைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அவர் ஒரு மொழியை, அந்த மொழியிலேயே கற்பிப்பவராக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு அவர் பிரெஞ்சு மொழியை, பிரெஞ்சு வழியில்தான் கற்பிக்க வேண்டும். ஆங்கில வழியிலோ தமிழ் வழியிலோ அதை கற்பித்தால் பயன் இல்லை.

வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம், அந்தக் குறிப்பிட்ட மொழியில் பேசுங்கள். ஒரு மொழியைக் கற்பதற்கான அடிப்படைத் தகுதி பேச்சு. இலக்கணமோ, எழுத்துகளோ அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பேசப் பேச, உங்களுடைய மொழித் திறன் தானே வளரும்.

கடைசியாக, நீங்கள் படிக்கவிருக்கும் மையத்தைச் சரியாகத் தேர்வு செய்யுங்கள். பிரெஞ்சு மொழிக்கு ‘அலையன்ஸ் ஃபிரான்சேஸ் த மெத்ராஸ்’, ஜெர்மன் மொழிக்கு ‘கோதெ இன்ஸ்டிட்யூட்’, ரஷ்ய மொழிக்கு ‘ரஷ்ய கலாச்சார மையம்’ போன்ற அதிகாரப்பூர்வமான மையங்களில் மட்டும்தான், மொழிகளைத் தாண்டி, அந்நாடுகளின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள முடியும். மேலும், உங்களைப் போன்ற இலக்குடைய‌ பலரை நீங்கள் சந்திக்கவும், அவர்களுடன் பழகவும் முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x