Last Updated : 05 May, 2017 11:53 AM

 

Published : 05 May 2017 11:53 AM
Last Updated : 05 May 2017 11:53 AM

வேலையற்றவனின் டைரி 27 - நலம்...நலமறிய ஆவல்

நான் ஒன்பதாவது படிக்கும்போது, என்னை அன்னமங்கலம், சிறுமலர் மேல்நிலைப் பள்ளி ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார்கள். ஹாஸ்டலில் என்னை விடுவதற்காக வந்த என் தந்தை, ஒரு கத்தை 15 பைசா போஸ்ட் கார்டுகளை வாங்கிக் கொடுத்தார். நான் என்னவோ இங்கிலாந்து, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துவிட்டதுபோல், நான் ஹாஸ்டலில் சேர்ந்த விவரத்தைத் தெரிவித்து, உறவினர்களுக்குக் கடிதம் எழுதச் சொன்னார்.

ஹாஸ்டலிலிருந்து என் முதல் கடிதத்தை, என் தந்தைக்குத்தான் எழுதினேன். உடனே என் தந்தையிடமிருந்து மின்னல் வேகத்தில் வந்த கடிதத்தில், “சிரஞ்சீவி சுரேந்திரனுக்கு, நீல்லாம் என்னத்த படிச்சு, எப்படி உருப்படப்போகிறாய் என்று தெரியவில்லை. ஒருவருக்குக் கடிதம் எழுதும்போது, முகவரியில் அவருடைய பெயருக்கு முன்னால் ‘திரு’என்று போட்டு எழுதும் பழக்கத்தை முதலில் கற்றுக்கொள்” என்று, அவர் பெயருக்கு முன்னால் ‘திரு’போடாததற்காகக் கோபப்பட்டு எழுதியிருந்தார்.

அடுத்து, உறவினர்களுக்குக் கடிதம் எழுதத் தொடங்கினேன். அவை நீங்கள் நினைப்பது போல் சாதாரண, “நலம். நலமறிய ஆவல்” கடிதங்கள் அல்ல. அப்போது நான் தீவிரமாகப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்திருந்த காலம். இத்துடன் டி. ராஜேந்தரின், “காளி… இப்ப நீ காலி” என்பது போன்ற தத்துவ வசனங்களும் என்னிடம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. எனவே, வழக்கமான முறையில் இல்லாமல், புதுமையாக, பயங்கர க்ரியேட்டிவாக (?) கடிதம் எழுத ஆரம்பித்தேன். உதாரணத்துக்கு என் பொன்மலை பெரியம்மாவுக்கு எழுதிய கடிதத்தை, ‘அன்புள்ள பெரியம்மாவுக்கு’ என்று ஆரம்பிக்காமல், பின்வருமாறு ஆரம்பித்தேன்:

“கோதாவரி… வீட்டுக்கு நடுவுல கோடு ஒண்ணு கிழிடி… அண்ணி சீதைக்காக, லட்சுமணன் கிழிச்ச கோட்டைவிட அது சக்தி வாய்ந்த கோடா இருக்கணும்” என்று ஆரம்பித்துவிட்டு, “என்ன பெரியம்மா குழம்பிவிட்டீர்களா? இந்தக் கடிதத்தை எழுத ஆரம்பிக்கும்போது ஹாஸ்டல் ஸ்பீக்கரில், ‘சம்சாரம் அது மின்சாரம்’ கதை வசனம் கேஸட் ஓடிக்கொண்டிருக்கிறது” என்று எழுதுவேன். தொடர்ந்து எழுத, எழுத, கன்னாபின்னாவென்று கரைபுரண்டு ஓடும் என் க்ரியேட்டிவிட்டியை, எவ்வளவு முயன்றாலும் என்னால் தடுக்கவே முடியாது. ஹாஸ்டல் அருகிலிருக்கும் பச்சை மலை, வயல் வரப்புகளை எல்லாம், கடிதத்தில் விரிவாக வர்ணித்துவிட்டு இறுதியாக, “பக்கத்து வயல்ல வளருது பயிரு. அது இல்லன்னா காஞ்சிடும் வயிறு. கடைசில போயிடும் உயிரு” என்று முடிக்கும்போது, “எப்டிரா இப்படித் தோணுது” என்று எனக்கே கிளுகிளுத்துவிடும்.

அனைத்து உறவினர்களுக்கும் இவ்வாறே கடிதம் எழுதினேன். பொன்மலை பெரியம்மாவிடமிருந்தும், தஞ்சை விஜயா அத்தையிடமிருந்தும் மட்டும் பதில் வந்தது. அதில், “இப்போது படிக்கும் வயது. படிப்பில் நன்கு கவனத்தைச் செலுத்தவும். தேவையற்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம்” என்று அவர்கள் எழுதியிருந்ததைப் பார்த்தால், “இனிமேல் தேவையில்லாமல் எங்களுக்கு லெட்டர் எழுதி இம்சை பண்ணாத” என்பது போலத்தான் இருந்தது. இருந்தாலும் பதில் வந்த அன்றைக்கே, நான் அவர்களுக்கு இன்னொரு நியூ க்ரியேட்டிவிட்டி கடிதத்தை அனுப்பினேன்.

இந்த உடனடி எதிர்த் தாக்குதலால் நிலைகுலைந்துபோனவர்கள், சிறிது நாட்கள் மவுனமாக இருந்தார்கள். இருப்பினும் நான் நான்கு கடிதம் எழுதினால், அவர்கள் ஒரு கடிதம் எழுதி, எனது எழுத்து தீபத்தை (?) அணையாமல் பார்த்துக்கொண்டார்கள். மற்ற உறவினர்கள், நீண்ட நாட்கள் உடல், மன ஆரோக்கியத்துடன் வாழ விரும்பியதால், எனக்கு ஒரே ஒரு கடிதம் மட்டும் போட்டுவிட்டு, எனது உறவை முற்றிலும் துண்டித்துக்கொண்டார்கள். எனது மொக்கை கடித விவகாரம், மற்ற உறவுகளுக்கும் தெரிந்துபோய், நான் அவர்களிடம் முகவரி கேட்டாலே மிரட்சியுடன், “நான் அப்புறம் சொல்றேனே…” என்று தலைமறைவானார்கள்.

இவ்வாறு பழைய உறவுகளிடமிருந்து ரெஸ்பான்ஸ் கிடைக்காததால், கடிதம் எழுத நான் புதிய உறவுகளைத் தேட ஆரம்பித்தேன். விஜயா அத்தையின் பெண் கீதாக்காவுக்குத் திருமணமானது. கீதாக்காவின் கணவரைப் பார்த்தால், மிகவும் அப்பிராணியாகத் தெரிந்தார். திருமண நாளன்றே அவரிடம், “உங்க அட்ரஸ் தாங்க. லெட்டர் போடுறேன்” என்றவுடன் அவர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். “அதுக்குள்ள நம்ம மேல இவ்ளோ பிரியமா?” என்று உடனடியாக அட்ரஸைக் கொடுத்தார் காத்திருக்கும் ஆபத்தை அறியாமல். திருமணம், மறுவீடெல்லாம் முடிந்து, அவர் திருப்பட்டினம் சென்று இறங்கியபோது, அவருக்காக என் கடிதம் காத்துக்கொண்டிருந்தது. “எங்கள் குடும்பத்தின் புதிய உறவே….. என் மனதின் புதிய வரவே…” என்ற என் கடிதத்துக்கு, அவரும் உடனே பதில் போட்டார். மறுநாளே நான் பதில் போட்டேன். அவரும் இரண்டே நாளில் பதில் அனுப்பினார். பிறகு என் வேகத்தைச் சமாளிக்கமுடியாமல், மெள்ள ஆட்டத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.

இதனிடையே திருச்சியிலிருந்து ‘அன்பின் அமலன்’ என்ற ஃபாதர் எதற்கோ அன்னமங்கலத்துக்கு வந்து, சில நாட்கள் தங்கியிருந்தார். அவர் மிகவும் கனிவாக, பரிவாக, “மனிதன் அனைத்துத் துன்பங்களையும் தாங்கத் தயாராக இருக்க வேண்டும்” என்று பேச, நைஸாக அவரிடம் பேசி, அட்ரஸை வாங்கிவிட்டேன். அவர் அன்னமங்கலத்திலிருந்து கிளம்புவதற்குள்ளாகவே அவருக்கு நான் லெட்டர் எழுதிவிட்டேன். அவர் கிளம்பிப் போனவுடன் லெட்டரை போஸ்ட் செய்தேன். அதிலும் என் தமிழ்ப் புலமையைக் (?) காண்பித்திருந்தேன். அவர் என்னை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன், “நல்ல வழிகாட்டி கிடைத்தால், நீ பிற்காலத்தில் எழுத்தாளராகலாம்” என்று எழுத, நான் குஷியாகி, அந்தரத்தைப் பார்த்துப் பகல் கனவில் ஆழ்ந்தேன். வேறென்ன? ஸ்ட்ரெய்ட்டா சாகித்ய அகாடமிதான். நான் சாகித்ய அகாடமி விருதை வாங்கி, சட்டைப் பையில் மடித்து வைத்துக்கொண்டு, அரியலூர் பஸ்ஸ்டாண்டில் வந்து இறங்கியபோது, என் தந்தை கண் கலங்க எனக்கு மாலைபோட்டு வரவேற்றார்.

அன்பின் அமலன் இவ்வாறு எழுதியதால், எனது படைப்பாற்றல் பீறிட்டு அடிக்க, வெள்ளை பேப்பரில் எட்டுப் பக்கக் கடிதம் எழுதி, அன்பின் அமலன் மீது ஒரு மாபெரும் கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்தினேன். அன்பின் அமலன், வெறுப்பின் அமலன் ஆகி, இன்று வரையிலும் ஆள் எங்கே என்றே தெரியவில்லை. இவ்வாறு எத்தனையோ பேருக்கு நான் கடிதம் எழுதிக் கலங்கடித்திருக்கிறேன். ஆனால், என்னையே ஒரு கடிதம் கலங்கடித்தது.

1994-ல், நான் சென்னையில் வேலைக்குச் சேர்ந்த புதிது. ஒரு நாள் மதியம், திருச்சியிலிருந்த என் நெருங்கிய நண்பனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அவன் நீண்ட நாட்களாக வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டுவந்தான். அவன் அந்தக் கடிதத்தில், “வீட்டில் அனைவரும் ஒரு கல்யாணத்துக்காக தர்மபுரி சென்றிருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படித் தெண்டச்சோறாக இருப்பது என்று தெரியவில்லை. சில சமயங்களில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று தோன்றுகிறது” என்று எழுதியிருந்ததைப் பார்த்தவுடன் பதறிவிட்டேன்.

அப்போது அவன் வீட்டில் ஒரு லேண்ட்லைன் ஃபோன்கூட இல்லை. மற்ற நண்பர்களும் வெளியூரில் இருப்பதால், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் கற்பனையில், அவன் தூக்கில் தொங்கும் காட்சி ஓட, எனக்கு வேர்த்து விறுவிறுத்துவிட்டது. உடனே அவனை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னால்தான், அவன் தற்கொலையைத் தடுக்க முடியும் என்று தோன்றியது. எனவே, அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லிவிட்டு, அன்று மதியமே திருச்சிக்கு பஸ் ஏறிவிட்டேன்.

பஸ்ஸில் மிகுந்த பதற்றத்துடனே இருந்தேன். தற்கொலை செய்துகொள்பவர்கள் பொதுவாக இரவில்தான் செய்துகொள்வார்கள். எனவே, இரவு பன்னிரண்டு மணிக்குள் சென்றுவிட்டால், எப்படியும் அவன் உயிரைக் காப்பாற்றிவிடலாம். ஆனால், அதற்குள் ஏதாவது நடந்துவிட்டால் என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறியது. அவனுடன் திருச்சி காவேரிக் கரையில் சிரித்துத் திரிந்த நாட்கள் எல்லாம் சினிமா போல் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது.

இரவு 11 மணிக்குத் திருச்சியில் இறங்கி, நண்பனின் வீட்டுக்குச் சென்றேன். அவன் வீட்டுத் தெருமுனையில் திரும்பும்போது, என் பதற்றம் உச்சத்தில் இருந்தது. வீட்டை நெருங்க நெருங்க, திக் திக்கென்றிருந்தது. வீடு இருட்டாக இருக்க, ஹாலில் மட்டும் ஜீரோ வாட்ஸ் பல்பு எரிவது தெரிந்தது. வீட்டுப் படியேறி, நான் திகிலுடன் கதவில் கைவைக்க, கதவு தாழ்ப்பாள் போடப்படவில்லை. வேகமாகக் கதவைத் திறந்தேன். உள்ளே ஹாலில், முகத்தில் பத்து நாள் தாடியுடன், நாற்காலியில் அமர்ந்து, மிகவும் விரக்தியாக டிவியில் சிலுக்கு ஸ்மிதா டான்ஸ் பார்த்துக்கொண்டிருந்தான் என் நண்பன்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x