Published : 02 Sep 2016 12:12 PM
Last Updated : 02 Sep 2016 12:12 PM

நின்று வென்ற நீதி!

இந்தக் கட்டுரையின் தலைப்பு யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நாட்டின் மிகச் சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவரான யோகேஷ்வர் தத்துக்கு நிச்சயமாகப் பொருந்தும்.

அது 2012-ம் ஆண்டு. லண்டன் ஒலிம்பிக்கில் 60 கிலோ, ‘ஃப்ரீஸ்டைல்' பிரிவில் போட்டியிட்டார். அதில் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் தோல்வியடைந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இருந்தும் அதிர்ஷ்டம் அவரைக் கைவிடவில்லை. ‘ரிபேசேஜ்' முறையில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார் யோகேஷ்வர். அங்கு அவரது போட்டியாளர், காலிறுதிக்கு முந்தைய போட்டியில் தன்னைத் தோற்கடித்த ரஷ்யாவின் பெஸிக் குடுக்கோவ்.

அவருடனான இறுதிப்போட்டியில், யோகேஷ்வருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் வாங்கித் தந்தவர் எனும் பெருமையைப் பெற்றார்.

வெண்கலத்திலிருந்து வெள்ளிக்கு

இந்த நிலையில்தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு 'ஊக்க மருந்துக்கு எதிரான உலக முகமை' எனும் அமைப்பு, பெஸிக் குடுக்கோவ் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஊக்க மருந்து பயன்படுத்தியதாகத் தெரிவித்தது. அதையடுத்து, அவரின் வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டு, யோகேஷ்வருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், நான்கு முறை உலக சாம்பியனான 27 வயது பெஸிக் குடுக்கோவ், 2013-ம் ஆண்டே ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். அப்படியென்றால், அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது இப்போது தெரிய வந்தது எப்படி?

ஒவ்வொரு முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு முன்பு, அதற்கு முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களின் ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட ‘சாம்பிள்'களை மறு பரிசோதனைக்கு உட்படுத்துவது வழக்கம். அறிவியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், நவீன பரிசோதனை முறைகளைப் பயன்படுத்தி தற்போது அந்த 'சாம்பிள்'களை சுமார் 10 ஆண்டுகள் வரைக்கும் பாதுகாக்க முடியும்.

அந்தப் பரிசோதனையின்படி, லண்டன் ஒலிம்பிக் போட்டியின்போது, பெஸிக் குடுக்கோவிடமிருந்து பெறப்பட்ட ‘சாம்பிள்'கள், ரியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு மறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது, அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

அதையடுத்து, சர்வதேச ஒலிம்பிக் குழு, யோகேஷ்வருக்கு வெள்ளியை வழங்கியிருக்கிறது.

‘டோப்பிங்' வரலாறு

இவ்வாறு ஊக்க மருந்து பயன்படுத்துவதை ஆங்கிலத்தில் ‘டோப்பிங்' என்கிறார்கள். இதுபோன்ற ‘டோப்பிங்' முறைகேடுகள் நடப்பது இது முதல்முறையல்ல. எனினும், இந்தக் குற்றங்களுக்கு யார் காரணம் என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பு, ‘டோப்பிங்' வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

1960-ம் ஆண்டு ரோம் நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் முதன்முறையாக ஊக்க மருந்து தன் வேலையைக் காட்டியது. டென்மார்க்கைச் சேர்ந்த சைக்கிள் வீரர் நுட் ஜென்சன் என்பவர், தான் பங்கேற்ற சைக்கிள் பந்தயப் போட்டியின்போது பாதியில் மயக்கமடைந்து விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சில மணி நேரத்துக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஊக்கமருந்தின் அளவு அதிகமானதே காரணம்.

ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப கால வரலாற்றில், ஊக்க மருந்து பயன்படுத்துவது வெளிப்படையாக நடைபெற்றது. ஸ்ட்ரிக்னைன், ஆல்கஹால், கேஃபின் ஆம்ஃபிடமைன்ஸ், வாஸோடிலேட்டர் உள்ளிட்ட பல வகையான ஊக்க மருந்துகளை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தினர்.

- யோகேஷ்வர் தத்

1930-களில், இந்தப் பிரச்சினை பற்றித் தெரிந்தும், சர்வதேச ஒலிம்பிக் குழு இதனைக் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால், இந்த மருந்துகள் இவற்றைப் பயன்படுத்தும் வீரர்களை மட்டுமே பாதிப்புக்கு உள்ளாக்கின. ஆனால், காலம் செல்லச் செல்ல, இந்த மருந்துகளின் பயன்பாட்டினால், ரஷ்ய வீரர்கள் பதக்கங்களை அள்ளிக்கொண்டு போவதைப் பார்த்து, உஷாரான அமெரிக்கா, ஊக்க மருந்து பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளச் சொல்லி நெருக்கியது. இது நடந்தது 1952-ம் ஆண்டு!

அதற்குப் பிறகு, அதாவது நுட் ஜென்சன் மரணத்துக்குப் பிறகு 1962-ம் ஆண்டு ஊக்க மருந்து பயன்பாட்டைப் பரிசோதிக்கும் குழு அமைக்கப்பட்டது. ஆனாலும், அன்றைய காலத்தில் ‘அனபாலிக் ஸ்டீராய்ட்ஸ்' போன்ற ஊக்க மருந்துகளைப் பரிசோதிப்பதற்கான முறைகள் கண்டுபிடிக்கப்பட வில்லை. அதனால், ஊக்க மருந்து பயன்பாடு பரிசோதனைகள் சுரத்தில்லாமல் போயின.



யார் குற்றம்?

அதற்குப் பிறகு 1999-ம் ஆண்டு ‘ஊக்க மருந்துக்கு எதிரான உலக முகமை' ஏற்படுத்தப்பட்டது. 2004-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்த ஊக்க மருந்து பயன்பாடு குற்றங்களுக்கு யார் காரணம் என்ற தெளிவு பிறந்தது. ஊக்க மருந்தைப் பயன்படுத்தும் தனிநபர் அமெச்சூர் விளையாட்டு வீரர்களோ அல்லது அமெச்சூர் வீரர் என்ற பெயரில் போட்டி போடும் தொழில்முறை வீரர்களோ இத்தகைய குற்றங்களுக்குக் காரணமல்ல, மாறாக, இவற்றை சப்ளை செய்யும் அரசும், அதற்கு உடந்தையாக இருக்கும் மருந்து நிறுவனங்களும்தான் காரணம் என்பதை சர்வதேச ஒலிம்பிக் குழு அறிந்துகொண்டது.

தொழிற்சங்க உறுப்பினர்கள் எல்லோரும் தங்கள் உடலைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பெர்லின் நகரத்தில் இருந்த அனைத்துத் தொழிற்சங்க அலுவலகத்திலும் உடற்பயிற்சிக் கூடங்கள் நிறுவிய ஜெர்மனி, தொடக்க காலத்தில் தன் வீரர்களுக்கு ஊக்க மருந்துகளை வழங்கி வந்தது. அதற்குப் பிறகு வேறு சில நாடுகளும் அதனைப் பின்பற்றத் தொடங்கின. எனினும், இன்று இந்த விஷயத்தில் முதன்மையாக இருக்கும் நாடு ரஷ்யா!

அதுதான் இந்த ரியோ ஒலிம்பிக்கில் பிரதிபலித்தது. 389 ரஷ்ய வீரர்களில் 271 பேர் மட்டுமே இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க முடிந்தது. பிரச்சினை அத்துடன் முடியவில்லை. இந்த மாதம் 7-ம் தேதி ரியோவில் தொடங்க உள்ள பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், உண்மையாகவே கடினமாகப் பயிற்சிகள் மேற்கொண்டு பதக்கம் வெல்லும் கனவில் இருந்த மாற்றுத் திறனாளி ரஷ்ய வீரர்களின் வாய்ப்பில் மண் விழுந்துள்ளது.

ஊக்க மருந்து பயன்பாடு தனிப்பட்ட முறையில் ஒரு விளையாட்டு வீரரின் உடல்நலத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பையும் கெடுத்துவிடும். இதை எப்போது ஒவ்வொரு விளையாட்டு வீரரும் உணர்ந்துகொள்கிறாரோ, அப்போதுதான் இதற்கு ஒரு நிரத்தரத் தீர்வு கிடைக்கும்.

மீண்டும் யோகேஷ்வர் தத் விஷயத்துக்கு வருவோம். நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் அவரால் சோபிக்க முடியவில்லை. யார் கண்டார்... இன்னும் சில காலம் கழித்து இதே பிரச்சினை காரணமாக, இப்போது நடந்தது போல‌ அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தாலும் கிடைக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x