Last Updated : 17 Jun, 2016 02:33 PM

 

Published : 17 Jun 2016 02:33 PM
Last Updated : 17 Jun 2016 02:33 PM

வழுக்கையில் முடிவதல்ல வாழ்க்கை!

‘வழுக்கைத் தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிஸி…’ என்ற திரைப்படப் பாடலைக் கேட்டிருக்கிறோம். ‘எத்தனை பெரிய கிரவுண்ட வெச்சிருக்கே, நீ பெரிய பணக்காரம்பா’ என்று நண்பர்களால் சாதாரணமாகக் கேலிக்கு ஆளாகிறார்கள், தலையில் வழுக்கை இருப்பவர்கள். இந்தக் கிண்டல் கேலியையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் “போடா… ஆண்டவனே நம்ப பக்கம் இருக்கான்…” என்று சிரித்தபடி, பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து முன்பக்கம் இருக்கும் ஓரிரு முடிகளைக் கர்மசிரத்தையுடன் சீவிக்கொள்ளும் நம்பிக்கை மனிதர்களும் இருக்கிறார்கள்.

வழுக்கை என்பதை மிகவும் சாதாரண விஷயமாக இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை உணராமல், உணர்ச்சிவசப்பட்டு, இளம் மருத்துவர் ஒருவர் தன்னுடைய தலையில் முடியைப் பதிக்கும் (Hair Plantation) சிகிச்சையில் ஈடுபட்டதுதான் அவரின் உயிரையே பறித்திருக்கிறது.

‘வழுக்கையில் முடிவதல்ல வாழ்க்கை’ என்னும் தெளிவோடு இருப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும். வழுக்கை என்பது ஒருபோதும் தடையாக மாறக் கூடாது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வது அவசியம். வழுக்கையை எளிதாகக் கடந்துவந்திருக்கிறார் விற்பனைப் பிரதிநிதியான சரத்குமார்.

“இப்போது எனக்கு வயது 43. எனக்குத் திருமணம் நடக்கும்போது 26 வயது. அப்போதே எனக்குத் தலையில் வழுக்கை விழுந்துவிட்டது. எங்களின் 17 வருட திருமண வாழ்வில் ஒரேயொரு சந்தர்ப்பத்தில்கூட வழுக்கைத் தலை குறித்து வருத்தப்பட்டு நாங்கள் பேசியதில்லை. பொதுவாகப் பலரும் குறையாக நினைக்கும் வழுக்கையை, என்னுடைய உருவத்துக்கு ஏற்றது போன்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டேன். என்னுடைய விற்பனைப் பிரதிநிதி பணியில் நான் முன்னேறுவதற்குக்கூட என்னுடைய இந்தத் தோற்றம் முக்கியம் என்று நினைக்கிறேன்” என்கிறார் சரத்குமார். அவருடைய மனைவி ராணி சந்தனாவோ, “அன்புதான் முக்கியமே தவிர தோற்றம் முக்கியமில்லை” என்கிறார்.

வழுக்கை குறித்த கற்பிதங்கள்

வழுக்கைத் தலையோடு இருப்பவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். வீரம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் அதிக காம உணர்ச்சி கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படி வகை வகையான கற்பிதங்கள் வழுக்கைத் தலையோடு இருப்பவர்களைப் பற்றி உலவுகின்றன.

மருத்துவ சிகிச்சை: தேவை எச்சரிக்கை

ஆண்களுக்கு விழும் வழுக்கையில் (Male Baldness), முன் வழுக்கை, நடு வழுக்கை, பின் வழுக்கை எனப் பல வகை உள்ளன. தலையில் ஏற்படும் வழுக்கைக்கு மரபு ரீதியான காரணங்கள், நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமல் இருப்பது, போதிய புரதச் சத்து இல்லாமை, ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள்… இப்படிப் பல காரணங்கள் இருக்கின்றன. முடி உதிர்தல் பிரச்சினையின் கடைசிக் கட்டம்தான் வழுக்கை. முடி உதிர்தல் பிரச்சினை இருப்பவர்கள் ஷாம்புகளைப் பயன்படுத்தக் கூடாது.

தலை வழுக்கையில் முடியைப் பதிக்கும் சிகிச்சை என்பது ஒரு அறுவை சிகிச்சையைப் போன்றதுதான். மருத்துவ ரீதியில் பிளேட்லட் ரிச் பிளாஸ்மா (Platelet Rich Plasma) சிகிச்சை உள்ளது. இதற்குப் பின்தான் 500 முதல் 2,500 முடிகள் தலையின் வழுக்கையில் பதிக்கப்படும். மயக்க மருந்து கொடுத்து, பல்வேறு மருத்துவர்களின் துணையுடன், ஒரு தேர்ந்த மருத்துவ நிபுணரைக் கொண்டுதான் இந்தச் சிகிச்சையை செய்ய வேண்டும் என்றார் சென்னை, சிம்ஸ் மருத்துவமனையில் மூத்த மருத்துவ ஆலோசகராகப் பணிபுரியும் டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி.

சுய ரசிப்பால் விளையும் அபாயம்

“நீர் நிலையின் கரையில் நின்றபடி, நீர்க்குமிழில் தெரியும் தன்னுடைய உருவத்தை ரசிக்கத் தொடங்கிய ஓர் இளவரசன், ஒரு கட்டத்தில் அந்த உருவத்தையே தழுவ முயன்றான். விளைவு? நீரில் மூழ்கி இறந்துவிட்டானாம். இது ஒரு கிரேக்கக் கதை. இந்தக் கதை சுய ரசிப்பால் விளையும் அபாயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒரு எல்லையோடு இருப்பது நல்லது. உளவியல் பகுப்பாய்வில் இதை நார்ஸிசம் (Narcissism) என்பார்கள்.

வளரிளம் பருவத்தில் நான் இந்தப் படிப்பைப் படித்து, இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன், இப்படித்தான் என்னுடைய வாழ்க்கை முறையை வரையறுத்துக்கொள்ளப் போகிறேன் என்று ஒருவர் தன்னைப் பற்றி அறிவது – ஐடென்டிட்டி.

சமூகத்தில் உடன் படிக்கும் நண்பர்களை அல்லது சமூகத்தில் வேறு துறைகளில் இருக்கும் மனிதர்களை ஆதர்ச புருஷர்களாக சிலரை நினைத்துக்கொண்டு, அவர்களுடைய நடை, உடை பாவனை, செயல்களைத் தானும் வெளிப்படுத்திக்கொள்ள முயல்வது, சமூக ஆளுமையின் ஒரு பகுதியாகும். அவர்களைப் போல் தன்னையும் இந்தச் சமூகம் மதிக்குமா, ஏற்றுக்கொள்ளுமா என்னும் கேள்விகளுக்குப் பதிலாக, தன் இயல்பிலிருந்து மாற்றிக் காட்டுவதற்கு முற்படுவது – இமேஜ்.

ஐடென்டிட்டி என்பது முகம் என்றால் இமேஜ் என்பதை முகமூடி என்று சொல்லலாம். ஐடென்டிட்டிக்கும் இமேஜுக்கும் சில இடைவெளிகள் இருக்கலாம். நம்முடைய வார்த்தைக்கும் செயலுக்கும் இருப்பது போல சிறிய இடைவெளி இருந்தால் பரவாயில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x